தமிழீழத் தேசிய உணர்வுடன் மேடைகளில் பேசியதோடு பேசியபடி வாழ்ந்தும் காட்டிய பேராசான்!
‘சலுகை ஏற்கக்கூடிய உரிமை இருந்தும் ஏன் நீங்கள் கப்பல் பயணத்தைத் தவிர்த்து, கொலைக்கடலான கிளாலியூடாக கொழும்புக்குப் பயணம் செய்கின்றீர்கள்?’ என்று மதியுரைஞர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கேட்டபோது, அந்தப் பெருமகன் பெருமைபொங்கக் கூறிய பதில், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டது.
‘எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன், கிளாலி ஊடாக பயணம் செய்யக்கூடாது என அரசு சட்டம் போட்டது. ஆனால் மக்கள் அதை மீறிப் பயணம்போய் அரசின் சட்டத்தை உடைத்தனர். இதுவும் அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம் ஆகும்.
நானும் மக்களுடன் சேர்ந்து எனது பங்களிப்பையும் செய்கின்றேன். இதன்மூலம் மக்கள்படும் வேதனையில் நானும் பங்குகொண்டு மனநினைவடைகின்றேன்!’ என்று மனமகிழ்ச்சியுடன் பேராசிரியர் கூறியிருந்தார்.
இன்னுமொரு தடவை, கொழும்பிலிருந்து கப்பல்மூலம் தீவகத்தை அடைந்த பேராசிரியர், ஒருநாள் இரவை அகதிமுகாமில் எமது மக்களுடன் கழித்தார்.
அவருக்குத் தனி வசதி செய்துகொடுக்க அங்கிருந்த சிலர் முயன்றபோதும் மறுத்துவிட்டார். துன்பபட்ட தனது தேசத்தின் குடிமக்களுடன் சேர்ந்து வாழ்வைப் பகிர்ந்துகொள்வதில் அவர் இன்பமடைந்திருந்தார்.
பல்கலைக்கழகத்திலிருந்து தனது கிராமமான வதிரிக்குச் செல்லும் வேளையில், வல்வை வெளியில் இரத்தப் புற்றுநோய் தாக்கிய உடம்பை வைத்து அந்த பேராசான் மிதிவண்டியுடன் போராடும்போது, வாகனத்தில் அவரை முந்திச் செல்ல முனையும் போராளிகள், கண்ணிவெடி வயலில் கடப்பதுபோல நெளிந்து மனங்குமைந்தபடி கடப்பர். மனம் வராது கீழிறங்குபவர்களைப் பார்த்து வெள்ளை மனதுடன் விடை கொடுக்கும் அந்தப் பண்பு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.
‘பேராசிரியர் துரைராசா அவரின் வாழ்வியல் எம்மில் பலருக்கு பாடமாக அமைய வேண்டும்!
நினைவு வணக்கம்!
நன்றி Sivavathani