தமிழ்த்தேசியமும் மாற்றுத் தலைமைகளும்

139

கடந்த தேர்தலில் தமிழ்த்தேசியம் என்பது பெரும் பேசு பொருளாக இருந்தது. கூட்டமைப்பிற்கு மாற்று என்று தேர்தலில் களங்கண்ட அத்தனை கட்சிகளும் தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் தாங்களே என்று பறைசாற்றின.

அது எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடைந்தன என்று கேட்டால் இல்லை சென்றடையவில்லை என்றே கூறலாம். அதற்கு அவர்களுக்குக் கிடைத்த அற்ப சொற்ப ஆசனங்களே சாட்சியமாகும்.

ஒரு நீண்ட போரின் பின்னான அவலம் நிறைந்த வாழ்வைக் கொண்டிருக்கும் மக்களை உணர்வு ரீதியாக ஒன்று சேர்ப்பது இலகுவானது. அப்படி இருந்தும் கூட்டமைப்பின் நடவடிக்கைகளால் விரக்தியின் விளிம்பில் நின்ற மக்களையே ஒன்று சேர்க்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

முதலில் தேசியம் பற்றிய எண்ணக்கருவை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

பல வகையில்  தொடர்பு கொண்ட மக்கள் கூட்டம் தேசியம் என்ற வரையறைக்குள் அடங்கும். ஒரே மொழி ,வாழுடத் தொடர்பு, ஒத்த கலாச்சாரம் பண்பாடு கொண்டவர்கள் ஒரு தேசிய இனம் என்ற வரையறைக்குள் அடங்குவர்.

வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் மதம் ஒன்றே வேறுபாடாகக் கொண்டு மற்ற எல்லாவிடயத்திலும் தமிழர்களுடன் ஒன்று படும் இலங்கைச் சோனகரும் ஒரே தேசியம் சார்ந்தவர்களே.

இன்று அவர்கள் வேறு தனியான தேசியமாக காட்ட முற்படுவது வேறு விடயம்.

இந்த தமிழ் தேசியம் பற்றிய விழிப்பு இலங்கைத் தமிழர்கள் இடையில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மதமாற்றத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆறுமுக நாவலரின் சைவ மறுமலர்ச்சி சிந்தனையிலிருந்தே வளர்ச்சியுறத் தொடங்கியது.

அதே போல சமயமாற்றத்திற்கெதிரான பெளத்தத்தைக் கட்டிக்காக்க முற்பட்ட அநாகரீக தர்மபாலாவில் இருந்து சிங்கள தேசியம் கட்டமைக்கப் படத்தொடங்கியது.

இவ்வாறு தொடங்கிய தேசிய உணர்வு பல அரசியல் சூழ்நிலைகளைக் கடந்து 1964 இல் தந்தை செல்வநாயகத்தால்  திருகோணமலைத் தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டது.

அதில் தமிழ்பேசும் மக்கள் என்ற விவரிப்புடன் தமிழர்  மற்றும் சோனகர் உள்ளடங்கலாக தமிழத்தேசியம் நிலைநிறுத்தப் பட்டது.சோனகரின் மதவேறுபாடு கருதி அவர்களுக்கான தனி அலகு ஒன்றும் சேர்க்கப்பட்டது.

1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இலங்கைச்சோனகரின் பிரதிநிதித்துவம் தமிழர் கட்சியாலே அல்லது தேசியக் கட்சிகளால் கிடைக்கப் பெற்றது.

இது இவ்வாறிருக்க தமிழ்த்தேசியத்தின் பெரும் உடைவாக சோனகர்கள் 1990 களில் தமிழ் பகுதிகளில் இருந்து வெளியேறியமை அமைந்தது.

இயக்கக் காலங்களில் பெரும் இறுக்கத்துடன் தமிழ் ஈழம் என்ற எழுச்சியுன் தமிழ்த் தேசியம் கட்டுக் கோப்பாக இருந்தது.

ஆனால் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியுடன் தமிழத்தேசியம் சிதறிச் சின்னாபின்னமாகி விட்டது.

இயக்க காலத்திலும் அதற்கு முன்னரும் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் கல்விசார் அறிஞர்களாலும் மதப்பெரியவர்களாலும் ஊர்மக்களாலும் ஒழுக்க நெறி கொண்ட தேசிய உணர்வு போற்றிப்பாதுகாக்கப்பட்டது.

கலைகளின் ஆதிக்கம்,கலை இலக்கியம், முற்போக்கு எழுத்தாள இயக்கம் என்று உன்னதமான விழுமியங்களைக் கொண்ட தேசியமாக குற்றப் பண்புகள் அற்ற சிறந்த தேசியமாக நம் தமிழ்த்தேசியம் தலை நிமிர்ந்து நின்றது.

ஆயுத மெளனத்தின் பின் திக்குத்திசை தெரியாதிருந்த மக்கள் வன்னியில் தலைவரால் உருவாக்கப் பட்ட கட்சி என்று கூட்டமைப்பையே பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் போர்நிறுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் போரால் பாதிக்கப் பட்டிருந்த மக்களுக்கான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ புனர்வாழ்விற்கான கட்டமைப்பு வசதிகளைச் செய்யவோ அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டிய செயற்பாடுகளையோ செய்யாது சர்வதேச சமூகத்துடன் ஒத்திசைந்து இனப்படுகொலைக்கான நியாயத்தைக் கூட பெறமுற்படாது சர்வதேச விசாரணையைப் புறம் தள்ளி உள்ளக விசாரணைக்கு ஆதரவு கொடுத்து எல்லா விதத்திலும் சிங்களப் பேரினவாதத்தை கூட்டமைப்பு தாங்கிப் பிடித்தது மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளித்தது.

மாற்று வழி என்று எதுவுமே இல்லாத சூழலில் ஏகபோக கட்சியாக மக்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்றம் சென்று பாதிக்கப் பட்ட மக்களுக்கு எதுவும் செய்து விடாது அரசிற்கு முண்டு கொடுத்து புலி நீக்க அரசியல் செய்து பின்னர் தமிழ் தேசிய நீக்கம் என்று வெளிப்படையாகவே துரோகத்தின் மேல் துரோகம் செய்த கூட்டமைப்பின் மேல் வெறுப்புக் கொண்ட மக்களால் கையைப் பிசைவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்த கட்சியாக கூட்டமைப்பு உருவெடுத்தது.

இந்த கால அவகாசத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்கள அரசு தமிழ்த் தேசியம் கொண்டிருந்த பிரதேச பிராந்திய தொடர்புகளைப் பிரித்து உடைத்ததுடன் மக்களுக்குடையில் உளவியல் ரீதியான பிரிவினையையும் உருவாக்கி கல்வியில் சிறந்த சமூகமாக இருந்த தமிழ் சமூகத்தை போதைப்பொருள் பாவனை கொண்ட தற்காலிக சுகம் காணும் களியாட்ட சமுதாயமாக நம் இளந்தலைமுறையை வெற்றிகரமாக மாற்றி விட்டது.

கல்வியில் சிறந்த ஒழுக்க விழுமியங்களை மதித்து வாழ்ந்த நம்மக்கள் அவையனைத்தையும் இழந்து போதை, வாள்வெட்டு,சுயநலம் என்ற கீழ்மை நிலையை அடைந்திருக்கின்றனர்.

இவை அனைத்துக்கும் கூட்டமைப்பின் அயோக்கியத்தனமும சுயநல அரசியலுமே காரணம் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

இந்த நிலையில் இருந்த மக்களிடம் வாய்வார்த்தையில் தமிழ்த்தேசியம் கூறிக்கொண்டு தேர்தலில் குதித்த முன்னணியும் கூட்டணியும் இந்த சமூகச்சீர்கேடுகளை ஒழுங்கு செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமையும்

மக்களுக்கான நம்பிக்கையை கட்டி எழுப்பக் கூடிய மாற்றாக தம்மை ஒன்று சேர்ந்த அமைப்பாக முன்னிலைப் படுத்தாமையும் கூட்டணியையும் முன்னணியையும் தேர்தலில் மண் கெளவ வைத்தது.

கூட்மைப்பில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை தங்களுக்கான வாக்காக அறுவடை செய்யக் கூடிய மாற்றாக இவ்விரு கட்சிகளையும் மக்கள் காணாமையினாலேயே தங்கள் மனம் போன போக்கில் வாக்களிக்கத் தலைப்பட்டு சுயநல அரசியல் வாதிகளையும் தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்த அவலம் நிகழ்ந்திருக்கிறது.

எதிர்காலத்தில் சமூகத்தில் இருக்கும் சீர்கேடுகளைச் சரி செய்ய கல்விச்சமூகமும் மத அமைப்புகளும் பெற்றோரும் சேர்நது

 செயற்பட தமிழ்த்தேசியம் சார்நது சிந்திக்கும் மக்களும் அரசியல் தலைவர்களும் வழி காட்டுவதுடன் கூட்டமைப்பிற்கு நாங்கள் சரியான மாற்று என்று நிறுவும் கட்சி மட்டும் மக்களால் கொண்டாடப்படும்.

நன்றி

மக்கள் யார் பக்கம்