தமிழத்தில் தவிர்க்க முடியாமல் வளரும் தமிழ்தேசியம்

114

ஆங்காங்கு தனித்தமிழ்நாடு,தமிழ்த்தேசியக்குடியரசு என்கிற முழக்கம் எழுவது தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது.

தமிழ்த்தேசியம் என்ற நெருப்பை தொடர்ந்து இந்தியம் எரியூட்டிக்கொண்டே இருந்தாலும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கோருவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. ஏனென்றால் சுதந்திரத்திற்கு பிறகு வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிற “இந்திய கருத்தியல்” ஏதாவது ஒரு தேசிய இனம் எழுச்சி பெற்றாலும் உடைந்து சுக்குநூறாகிவிடும்.

எல்லா தேசிய இனங்களுமே தனித்த சிறப்புகளை கொண்டிருந்தாலும் இந்தியாவை தவிர வேறு நாடுகளிலும் வாழ்கிற அதுவும் பொருளாதார,அரசியல் வலிமையோடு பரவி வாழ்கிற ஒரே தேசிய இன மக்கள் தமிழர்கள்…

ஒரு நாடாக தனித்தியங்கத்தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகளை நூறு விழுக்காடு பெற்றிருப்பதும் தமிழர்களே…

*உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகம்

*இராணுவம்

*பொருளியல் மற்றும் வேளாண் வளங்கள்

*அயல் நாடுகள் இடையேயான உறவு…

என்கிற தனித்தேசத்திற்கான அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய கட்டமைப்புகளை நாம் மட்டுமே பெற்றிருக்கிறோம்.

#உட்கட்டமைப்பு_மற்றும்_நிர்வாகம்:

ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான அத்தனை நிர்வாகக்கட்டமைப்பையும் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறது “தமிழீழ அரசு”.

நிதித்துறை,நீதித்துறை,கல்வி தொடங்கி ஆதரவற்றோர் காப்பகம் வரை அனைத்துக்குமே நடைமுறை உதாரணத்தை வைத்திருப்பது நாம் மட்டும் தான்.

தமிழகத்துக்கான அத்தனை தேவைகளையும் தமிழர்கள் எதிர்கொள்கிற அத்தனை சிக்கல்களுக்குமான நடைமுறை சாத்தியத்தோடு கூடிய தீர்வுகளை(நாம்தமிழர் செயல்பாட்டு வரைவு) வைத்திருப்பதும் தமிழர்களான நாம் மட்டுமே தான்…!!

#இராணுவம்:

இந்தியாவில் இருக்கிற எல்லா தேசிய இனங்களும் விடுதலை என்றதும் எதிர்கொள்கிற சிக்கலான பாதுகாப்பு சிக்கல் கூட நமக்கு எழ வாய்ப்பில்லை.

முப்பதுக்கும் மேற்பட்ட வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிற ஆற்றலை நாம் பெற்றிருந்தோம்…பெற்றிருக்கிறோம்..!!

இந்தியாவில் பல போராளிக்குழுக்கள் தேசிய இன விடுதலைக்காக போராடினாலும் நமக்கிருப்பதை போன்ற இராணுவ கட்டமைப்பை எந்த தேசிய இனங்களும் பெற்றிருக்கவில்லை.

#பொருளியல்_மற்றும்_வேளாண்_வளங்கள்:

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியது போல “இந்தியாவில் தமிழ்நாடும் கேரளாவும் தனித்தனி நாடுகளாக இருந்திருந்தால் உலக வல்லாதிக்க நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கும்”…என்கிற அளவுக்கு பொருளியல் வளங்களை நாம் மட்டுமே பெற்றிருக்கிறோம்.

கடல்வளம் என்கிற ஒற்றை வளத்தை உதாரணத்திற்கு எடு்த்தாலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு 1070 கிமீ கடற்பரப்பை தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல நீர்வளம்,நிலவளம் காட்டுவளம்,கனிமவளம் என எல்லா வளங்களோடு வேளாண்மையிலும் தன்னிறைவு பெற்று தனித்தியங்கக்கூடிய சாத்தியம் தமிழர்களான நமக்கு மட்டுமே உண்டு.

இந்த மண் உலகில் எங்கு விளைகிற பயிரையும் உள்வாங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய மண். ஆப்பிரிக்காவில் விளைகிற கோக்கோ முதல் சீனாவில் விளைகிற தேயிலை வரை இந்த மண்தான் ஏற்றிருக்கிறது.!!ஆக வேளாண் வளங்களையும் விளைபொருள் வளங்களையும் பெறுமதியான அளவு பெற்றிருப்பது நாம் மட்டும் தான்.

#அயல்நாடுகளிடையேயான_உறவு:

உலகம் முழுக்க எத்தனையோ தேசிய இனங்கள் பரவி பணம் வைத்திருந்தாலும்….நாம் மட்டுமே உலகநாடுகளிலெல்லாம் அரசியலை வைத்திருக்கிறோம்.

ஏறுதழுவுதலுக்கான போராட்டமென்றாலும் சரி நெடுவாசலுக்கான போராட்டமென்றாலும் சரி…உலகம் முழுக்க தமிழன் வாழ்கிற ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நகரிலும் நாம் தமிழர் என்கிற ஒற்றை குரல் எழுவதை நம்மால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது.

உலகம் முழுக்க அதிபர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்,செனட்டர்களாகவும்,மாகாண ஆளுநர்களாகவும் உள்ள தமிழர்கள் மூலம் இனத்திற்கான சிக்கல்களை உலக அரங்கில் ஒலிக்க வைக்கக்கூடிய சாத்தியங்களும் வலிமையும் கூட நமக்கு மட்டுமே உண்டு.

இப்படி ஒன்றுக்கும் உதவாத “இந்தியக்கருத்தியலை” தர்க்கரீதியாக உடைக்கக்கூடிய வலிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு என்பதனால் தான் ஈழப்படுகொலை நடந்தது,

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டார்கள்,

நீர் வள அழிப்பு நடந்தது,

காடுவள அழிப்பு நடந்தது,

கனிமவள அழிப்பு நடந்தது,

கடல்வள அழிப்பு நடந்தது ,

நிலவள அழிப்பு தொடர்ந்து நடக்கிறது..!!

ஏனென்றால் இந்த மண் வளமாக இருக்கிற வரை தமிழர்கள் முழுமையாக இந்தியாவை சார்ந்திருக்க மாட்டார்கள்..!

நன்றி தினேஷ்குமார் அசோகன்