இங்கே ஹமீட், “தமிழ் என்பது ஒரு மதமல்ல. தமிழ் ஒரு மொழி. அந்த மொழி அடையாளத்தால் தானொரு தமிழன்” என்கிறார். சிறப்பு!!!
இதுபற்றி இன்னமும் நாம் உரையாடலாம்.
இந்த தமிழ் அடையாளத்தை நாம் எப்படி பேணுவது?
நான் இரண்டு விடயங்களை கட்டாயமாக செய்கிறேன்.
ஒன்று;
எத்தனை மொழி கற்றாலும், பிறிதொரு தமிழ் அறிந்தவருடன் தமிழிலேயே உரையாடுகிறேன்.
இரண்டு;
தமிழ் மொழியில் தெளிவாக விளங்கும் வண்ணம் எனது கையெழுத்தை இடுகிறேன்.
அதாவது, அதிகாரபூர்வமாக, ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு விட்டு, தமிழர்கள் மத்தியில் தமிழில் கையெழுத்திட்டு பூச்சாண்டி காட்டுவதல்ல.
அப்படி எனது சில தமிழ் அரசியல் நண்பர்கள் செய்கிறார்கள்.
நான் அப்படியல்ல. எங்கேயும், எப்போதும் இளமையிலிருந்தே, அதாவது நேரடி அரசியலுக்கு வர முன்பிருந்தே, என் கையெழுத்து தமிழில்தான்.
என் கையெழுத்தை பார்த்தால், சரளமாக, “மனோ கணேசன்” என்று வாசிக்கலாம்.
ஆகவே நான் தலையெழுத்தாலும், கையெழுத்தாலும் சுத்தமான சோழ நாட்டு தமிழன்!!!
நான் இதை பிரபலப்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டேன்.
என் கட்சியில்கூட, இந்த தமிழ் கையெழுத்து விடயத்தில் என்னை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை.
கட்சியில் ஒருவர் இருந்தார். அவர் என்னை பார்த்து தமிழ் மொழியில் தெளிவாக, இளமையிலிருந்தே கையெழுத்திட ஆரம்பித்தார்.
இப்போது என்னை விட்டு போய்விட்டார். எனது கொள்கைகள் பலவற்றை கைவிட்டு விட்டார். ஆனால் தமிழில் கையெழுத்திடுவதை விடவில்லை என நம்புகிறேன்.