குடிகார நாடான தமிழ்நாடு..!

86


————————————

கொரோனா காலத்தில் மூடியிருந்த டாஸ்மாக் எனும் சுடுகாட்டை மீண்டும் திறக்கப்போகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அந்த டாஸ்மாக்கை தாண்டி போகும்போதெல்லாம் மனசும் வயிறும் எரியும்.

தமிழகத்தில் ரேசன் கடைக்குப் போக மறுக்கும் ஆண்களின் கூட்டம் டாஸ்மாக்கில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் சனிக்கிழமை என்றால் கூட்டம் இன்னும் அதிகமாகும்.

முன்பெல்லாம் குடிகாரர்களைக் கேவலமா பார்ப்பார்கள். ஆனால் இன்று கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகு குடியை fantasy-யாக மாற்றி விட்டார்கள்.

சினிமா, டிவி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களிலும் குடி கொண்டாடப்படுகிறது. ஹீரோக்களின் எண்ட்ரியே பாட்டில் ஓபனீங்கில் தான் ஆரம்பிக்கிறது.. ஃபேஸ் புக்கில் தண்ணியடிப்பதை சிலாகிக்கிறார்கள் சில நண்பர்கள்..

சாராய வியாபாரம் செய்வது ரவுடிப்பயலுக வேலையா இருந்ததை மாற்றி அதை பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தார்கள் திராவிட ஓட்டுப்பொறுக்கிகள் .

நண்பர்கள் கூட்டத்தில் “நீங்க தண்ணியடிப்பீங்களா பாஸ்’’ என்று திடிரென எழும் கேள்விக்கு, “இல்ல’’ என்று பதில் சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டிய சூழல்.

“அட என்ன பாஸ்.. தண்ணியடிக்காம நீங்களெல்லாம் எதுக்கு உயிர் வாழ்றீங்க..’’ என்ற நக்கல் வேறு வரும்.

இதில் குடிக்கும் நண்பர்கள் தவறாமல் ஒரு டயலாக்கை சொல்வார்கள்.. “ஐயோ பாஸ்.. எப்பவாவது தான் குடிக்குறது.. அதுக்கு அடிமையாவெல்லாம் ஆக மாட்டோம்’’என்று. அதைக் கேட்டுக்கும் போதெல்லாம் அவர்களை நினைத்து பரிதாபமாக இருக்கும்.

ஒருவனுக்குச் செக்ஸ் விசயத்திலோ, லஞ்சம், ஊழல், திருட்டுத் தனம் பண்ணுவதில் வீக்னஸ் இருக்கிறது என்றால், என்றாவது ஒருநாள் அவன் சிக்கும் போது அவமானத்தில் மனம் திருந்த வாய்ப்புண்டு. கவுன்ஸ்லிங்க் மூலமாகத் திருத்தலாம்.

ஆனால் குடி அப்படியல்ல.. அவனின் அத்தனை நரம்புகளும் அதற்கு அடிமையாக்கப்பட்டு அதில்லாமல் அவனில்லை என்ற நிலைக்குத் தள்ளிவிடும். நூற்றில் ஒரு கேஸ் தான் தானா அறிவு வந்து திருந்துவதுண்டு.

இந்தாண்டு 25 ஆயிரம் கோடிக்கு வித்துருக்கோம் என்று சாராய வியாபாரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைச் சாதனையாகச் சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். நாட்டில் இன்னும் குடிக்காமல் இருக்கும் அத்தனை பேரையும் எப்படிக் குடிகாரர்களாக்கலாம் என்று அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது.

குடி அரசு என்பதை தவறாக புரிந்து கொண்டார்கள்போல..

இப்படி சொன்னதும்,
கவர்மெண்டா சார் உங்க வாயில வந்து ஊத்துது.. கடையில் பூச்சி மருந்து கூடதான் கிடைக்குது.. குடிக்கிறாங்களா என்ன.. என்று வழக்கமான மொக்கை கேள்வியோடு வருவார்கள்..

அரசு யார் வாயிலேயும் ஊத்தவில்லைதான்.. ஆனால் வருமானத்திற்காக அரசு சாராயம் வியாபாரம் செய்ய ஆரம்பித்தப்பிறகு மது பழக்கம் என்பது சகஜமாகிப்போனது. சாராயம் விற்றவர்களை விரட்டி விரட்டி பிடித்த போலீஸ் இப்போது டாஸ்மாக்கிற்கு பாதுகாப்பாக நிற்பதை பார்க்க எவ்வளவு கேவலமாக இருக்கிறது.

அப்புறம் பூச்சி மருந்து விற்பதையும் சரக்கு விற்பதையும் உதாரணமாக சொல்கிறார்கள்.. எந்த பூச்சி மருந்து குடித்தாலும் போதை வராது. பொட்டுனு உயிர் போய்விடும்.. டாஸ்மாக் சரக்கை குடித்தால் பூச்சி மருந்து குடித்ததும் சாவதுபோல் தயாரிக்கட்டும்.. அப்புறம் பார்ப்போம் யார் வாங்கி குடிக்கிறார்கள் என்று..

சிலர் திருட்டுத்தனமாகச் சாராய வியாபாரம் செய்தபோது குடித்தவர்களின் எண்ணிக்கை அரசே வியாபாரம் செய்ய ஆரம்பித்தப்பிறகு குடிக்க ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

குடியை சகஜமாக்கியதன் விளைவு ஒருவேளை நாளை தமிழகத்தில் டாஸ்மாக் மொத்தமாக மூடப்பட்டால் தமிழகமே மனநோயாளிகளின் கூடாரமாக மாறியிருக்கும். அந்தளவுக்குக் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது அரசின் சாராய வியாபாரம்.

இதில் சிலபேர் பொம்பள குடிச்சா என்ன தப்புனு கேட்கிறார்கள்.. பெண் மட்டுமல்ல.. ஆண் குடித்தாலும் அது குடும்பத்திற்கு ஆகாது என்றுதான் நாங்கள் கதறிக் கொண்டிருக்கிறோம்..

ஆண்கள் குடித்துவிட்டு வேட்டி விலகி பன்றிகள் குளிக்கும் சாக்கடையில் விழுந்து கிடப்பதுபோல் நாங்களும் விழுந்து கிடப்போம் என்று சொல்வதற்கு பெயரா பெண்ணியம்..

இப்படி சொல்லும் பெண்ணியவாதிகள் வேண்டுமானால், தன் மகனுக்கு நன்றாக குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் பெண்ணாக தேடி பிடித்து திருமணம் செய்து வைத்து குடியை கொண்டாடவும்.

தனிநபர்களாக ஒருவருக்கு குடி பழக்கம் இருக்கலாம். அது அவர்களின் வாழ்வு.. அவர்களின் உரிமை. ஆனால் அரசே குடியை ஊத்திக் கொடுத்து அதை பொது பண்பாக மாற்றும் இடத்தில் தான் நாம் முரண்பட வேண்டியிருக்கிறது

ஒருவர் அளவாக குடிப்பது அல்லது மட்டையாகி ரோட்டில் விழுந்து கிடப்பது என்பது அவர்களின் கட்டுப்பட்டை பொருத்தது. ஆனால் எல்லோருக்கும் இந்த கட்டுப்பாடு இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

டாஸ்மாக்கில் சிறுவர்களோ, ஆண்களோ.. பெண்களோ.. காசை நீட்டினால் பாட்டில்.. அது மட்டும் தான் ஓட்டுப்பொறுக்கிகளின் பாலிஸி. பணம்.. பணம்.. எப்படியாவது மக்களுக்கு ஊத்திக் கொடுத்து பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் விஷமாகி குடிகாரர்கள் இறக்கிறார்கள் என்பதற்காகக் கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்வதை எப்படி ஏற்க முடியும். ஒரு தவறை திருத்த நடவடிக்கை எடுப்பது சரியா.. இல்லை ஸ்லோ பாய்ஸன் தயாரிப்பது சரியா..

இதில் ஆட்டோ டிரைவரும் ஐ.டி.காரனும் ஒண்ணா தண்ணியடிக்குறதை தடுக்க எலைட் பார் வேறு.

திமுக அதிமுகவுக்கு இடையே பரஸ்பரம் அரசியல்ரீதியாக எவ்வளவு கொலைவெறி இருந்தாலும் இந்தச் சாராய வியாபாரத்திம் மட்டும் அவ்வளவு ஒற்றுமை. எந்த ஆட்சி மாறினாலும் அதற்கு மட்டும் தடையில்லை. கருணாநிதி ஆட்சியிலும் சசியின் மிடாஸில் இருந்து தான் சரக்கு சப்ளையானது.

இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தியாவது பொழுதுபோக்காக குடித்துக் கொண்டிருந்தவர்கள் அந்த குடி சனியனை விட்டு தொலைக்க வாய்ப்பு இருந்தது.

ஆனால் அதை திறந்து மீண்டும் ஏழை தாய்மார்களின் தாலியறுக்கும் வேலையை பழனிசாமி அரசு செய்ய முயல்கிறது.

டாஸ்மாக் இல்லாததால் இத்தனை நாட்கள் மூடிட்டு இருந்தார்கள் குடிகாரர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் ரகசியமாக கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குடித்திருக்கலாம்.. ஆனால் அவர்கள் மிக குறைவே. அவர்கள் குடி நோயாளி அல்லது அவர்களின் பணக்கொழுப்பாக இருக்க வேண்டும்.

ஏனெனில் நடுத்தர வர்க்க மக்கள் நாளை வாழ்வு என்னாகுமோ என்று கையிருப்பை எண்ணிப்பார்த்து காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே பட்டினி சாவுகளின் சத்தங்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன.

இந்த சூழலில் மீண்டும் டாஸ்மாக் தொடங்கினால் என்னாகும்.. வீட்டில் இருக்கும் உண்டியல்கள் திருட்டுத்தனமாக உடைக்கப்பட்டு டாஸ்மாக்கில் போய் கொட்டப்படும்.. குடித்துவிட்டு வந்து மனைவி பிள்ளைகளை கொடுமை செய்வார்கள்..

சுயநினைவோடு இருக்கும்போதே கொரோனாவை வாங்கி வருபவர்கள் டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கை வழியிலே அடித்துவிட்டு ரோட்டில் புரளக்கூடும்.. அல்லது கூட்டாளியிடமிருந்து கொரோனாவை வாங்கி குடும்பத்துக்கு பரிசளிக்க கூடும்.. இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

ஆனால் அரசுக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை.. வருமானம் வேண்டும்.. அதற்கு குடிகாரர்களுக்கு ஊத்திக் கொடுக்கும் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு குடும்பத் தலைவனைக் குடிக்கு அடிமையாக்கி அவனின் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை ஆட்டையப்போடும் அரசு, அதில் ஒரு ரூபாயை அரிசி, மிக்ஸி, ஃபேன் என்று இலவசங்கள் கொடுக்க பயன்படுத்துகிறது. எவ்வளவு கேவலமான திருட்டு.. பணம் கிடைக்கிறது என்பதற்காக எங்கள் தலைமுறையையே போதைக்கு அடிமையாக்குகிறார்கள்.

இந்த தருணத்தில் கந்தையா அண்ணாச்சி குறித்து இங்கு சொல்ல விரும்புகிறேன்.

வீச்சருவாளும் கையுமா பனங்காட்டுக்கு நடுவிலும், ஒடங்காட்டுக்கு நடுவிலும் போலீசுக்கு தெரியாமல் பதுங்கியிருந்து வெள்ளை கேனில் சாராயம் வித்தவர் கந்தையா அண்ணாச்சி. சிறுவனாக இருந்த போது ஒரு முறை தாத்தா ஒருவருக்காகப் பாக்கெட் சாராயம் வாங்க நண்பனோடு போனபோது,

“சாராயம் வாங்க வர்ற அளவுக்குப் பெரியாளாயிட்டிங்களாடா.. போய் பெரியவங்கள வந்து வாங்க சொல்லுங்க’’னு பொடதில தட்டி விரட்டினார் கந்தையா அண்ணாச்சி.

அவர் என்றைக்கும் ஒரு சின்னப்பயனுக்குச் சாராயம் கொடுத்து பார்த்ததில்லை.

ஆனால் பணம் கிடைக்கிறது என்பதற்காக சிறுவர்களைக் கெடுத்துவிடக்கூடாது என்று நினைத்த படிக்காத கந்தையாக்களிடம் இருந்த நேர்மை, இந்த ஓட்டுப்பொறுக்கிகளிடம் இல்லை..

அப்புறம் குடி வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த கருத்தை அறிவிஜீவிகளிடம் கேட்காதீர்கள்..

ஒவ்வொரு குடிகாரர் வீட்டு மனைவி பிள்ளைகளிடமும் கேட்டுப்பாருங்கள்..

ரத்தக் கண்ணீர் வரும்.. 🙁

– கார்ட்டூனிஸ்ட் பாலா
5-5-2020