தாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்

37

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் தாயகத்தில் இடம்பெறவிருக்கின்ற கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்நாளில் இணையவழி கவனயீர்ப்பு கண்டனக்கூட்டம் ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கின்ற இக்கதவடைப்பு போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்;பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் சுட்டணி, ஈழத் தமிழர் சுயாட்சிகக் கழகம், சிவில் அமைப்புக்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழினவழிப்பின் அடையாளச்சின்னமாக விளங்கிய இந்த நினைவுத்தூபி, சிறிலங்கா அரசின் உத்திரவுக்கிணங்க அழிக்கப்பட்டமையானது, உலகத்தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோப உணர்வினையும் வலியினையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான இனவழிப்பு என்பது சிறிலங்கா அரசின் ஓர் அரச கொள்கையாக இருந்து வருகின்றதொரு நிலையில், தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் அடையாளங்கள், இரத்தம் தோய்ந்த சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டுபவையாக உள்ளன. இத்தகைய நினைவுச் சின்னங்கள் தமிழ்மக்களின் கூட்டு நினைவுகளில் சிங்கள ஆக்கிரமிப்பை என்றும் நினைவுபடுத்துபவையாகவும் உள்ளன. தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளில் இருந்து சிங்கள இனவாதப்பூதத்தின் இனவழிப்பையும், கோரமுகத்தையும் மெல்ல மெல்ல அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி அழிக்கப்பட்ட சம்பவத்தை நோக்க முடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாயகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர்தாயகத்தில் தமிழ்மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி இல்லை என்பதனை நினைவுத்தூபி அழிப்பு சம்பவம் மீளவும் வெளிக்காட்டியுள்ளதென தெரிவித்துள்ளது.