2009 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்து பம்பைமடு தடுப்பு முகாமில் நான் இருக்கும்போது எமக்கு எந்தவித பொழுதுபோக்கும் இல்லை,தனி ஒரு மண்டபம்,அதற்குள் ஆட்கள் இருக்கும் தொகைக்கு மேலதிகமாக பல மடங்காகவே நாம் அங்கு இருந்தோம்,மண்டபத்திற்கு வெளிபக்கம் தாவாரபக்கமாக நிரம்பி வழிந்தோம்.

மரங்கள் எதுவும் இல்லை.காட்டு வெட்கை.கடும் வெயில் காலங்களில் வியர்வையில் நனைந்துவிடுவோம்.கடதாசி மட்டைகளை எடுத்து வச்சு விசுக்குவதும் பவுசர் வாகனம் தண்ணீர் கொண்டு வரும்போது தண்ணீர் எடுப்பதற்கு மணித்தியாலக்கணக்கில் வெயிலுக்குள் லைன் பண்ணி நிற்பது,காலை,இரவு இரண்டு நேரமும் இராணுவத்தினர் லைன் எண்ணும்போது லைனிற்கு போவதுமே எமது கடமையாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது,

சில மாதங்களின் பின்பு எமது முகாமில் ஒரு நடமாடும் கடை ஒன்று வந்திருந்தது,அதில் சித்திரக்கொப்பி வாங்கி சில கலர் பேனைகளும் வாங்கி பொழுது போக்கிற்காக படங்கள் கீறிப் பழகினோம்.

அவ்வாறு கீறிய ஒரு புகைப்படமே இது,நான் படம் கீறிப் பழகியதும் பலர் தங்களின் தோழிகளிற்கு பிறந்தநாள் வாழ்த்து கீறி தரும்படி கேட்பார்கள்.எனக்கும் பொழுது போகனுமே அதனால் யார் கேட்டாலும் கீறிக்கொடுப்பேன்.

போராளிகளாக இருக்கும்போது நாம் தீபாவளி கொண்டாடியதில்லை. சரணடைந்து இருக்கும்போது முதன் முதலாக ஒரு தீபாவளியை எதிர்கொண்டோம்.எனக்கு படம் கீறுவதற்கு அனேகமான ஓடர்,அதாவது சம்பளம் இல்லாத ஓடர்கள் அதிகமாகியது.நானும் என்னால முடிந்த அளவு கீறிக்கொடுத்தபடி இருந்தேன்.

தீபாவளிக்கு முதல்நாள் இசைமுகில் தனது நண்பி சாருமதிக்கு தீபாவளி வாழ்த்துக்கொடுக்க படம் கீறித்தரும்படி சித்திர ஒற்றை ஒன்றை தந்திட்டு அடிக்கடி வந்து மேற்பர்வை செய்தபடி இருந்தாள்.

அவளிடம் கூறினேன் “நீ அடிக்கடி வராத உன்ர இடத்திலயே இரு.நான் கீறியதும் கொண்டுவந்து தருகிறேன் என்று கூறிவிட்டு படம் கீறி முடிந்ததும் கொப்பிக்குள் படத்தை வைத்துவிட்டு பவுசர் தண்ணீர் கொண்டுவர தண்ணீர் எடுப்பதற்குச் சென்றுவிட்டேன்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த என்னில் இருந்து குறிப்பிட்ட அளவு தூரத்தில் இருந்த தோழி அந்த வாழ்த்தினை எடுத்து எனது பெயரை எழுதி எனக்கு வாழ்த்தினை எழுதியது மட்டுமல்ல தன் பெயரோடு இன்னொரு தோழியின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு போய்விட்டாள்.

அவள் ஏற்கனவே என்னிடம் வாழ்த்து கீறித்தர கேட்டிருந்தாள்,எனக்கு நேரம் இல்லாதபடியால் நான் அவளிற்கு கீறிக்கொடுக்கவில்லை.அதனால் இப்போது என் பெயரை நான் கீறிய வாழ்த்தில் எழுதி எனக்கே…….. பள்ளிக்கூடம் படிக்கும்போது தீபாவளி,வருட பிறப்பு வந்தால் சின்ன பிள்ளைகளில் கொப்பிக்குள் வாழ்த்து வைப்பதுபோல எனக்கு கொப்பியிற்குள் வைத்துவிட்டுப் போயிட்டாள்.

படம் கீறத் தந்தவள் வந்தபோதுதான் கீறிவைத்த படத்திற்கு எனது தோழி செய்த விளையாட்டு தெரியவந்திச்சுது.பிறகென்ன படம் கீறதந்தவள் என்னோட சண்டைபோட்டிட்டு கோபமும் போட்டிட்டு போயிடாள்.நானும் எனக்கு வாழ்த்து எழுதி தந்த தோழியோடு கோபம் போட்டிட்டன்.

நமக்குத்தான் இரக்க குணமாச்சுதே கோபம்வேற போட்டிட்டாள் அதனால ஆமிக்காற பெண்கள் கம்பிக்கு மறுபக்கத்தில் சென்றிக்கு நிற்கும்போது வெளிச்சத்துக்கு கொழுவியிருந்த லைற்றுக்கு பக்கமாகப்போய் இருந்து இரவிரவாக ஆமிக்காறி பேசப்பேச கீறி முடியுது கீறி முடியுதென்று சொல்லி படத்தை கீறி முடித்து காலையில தீபாவளிக்கு அவள் தன் தோழிக்கு வாழ்த்து கொடுப்பதற்கு கீறிய படத்தை கொடுத்து வலியப்போய் 😀😀😀😀 நேசமாகினன் இருவரோடும்.

அதெல்லாம் ஒரு காலம்,முட்கம்பி வாழ்க்கைக்குள்ளும் உண்மையான நல்ல மனதுள்ள வேசம் இல்லாத அன்பு,பாசமான தியாகிகளோடு வாழ்ந்தம்.2009 ற்கு பிறகு போலி இல்லாத மனிதர்களை தேடியெடுப்பதே பெரும்பாடாகிவிட்டது.

கடந்த காலங்கள் நல்ல உறவுகளையும் இனிமையான நினைவுகளை தந்து சென்ற காலங்கள்…..

பிரபாஅன்பு