தானாய் தாயாய் வந்த எம் தலைவன்

100

எம் தலைவரின் சிறப்பியல்புகளில் ஒன்று கடல் நீரின் ஒரு சிறு துளி போல இந்த சம்பவமும் ஒன்று

ஒரு நாள் தலைவர் காலையுணவருந்திக் கொண்டிருந்தவேளை கேணல் சங்கர் அவர்கள் தலைவரை சந்திக்க ஒரு அலுவலாக வந்திருந்தார். அப்போது தலைவர் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சங்கர் அண்ணை வந்ததும் ‘அண்ணை மாம்பழம் சாப்பிடுங்கோ’ என்று கூற அவரும் சாப்பிட்டார். மாம்பழம் நல்ல சுவையாக இருந்தது. சங்கர் அண்ணையும் நல்ல சுவையாக இருக்கின்றது எனச் சொல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது மனவோட்டத்தை புரிந்து கொண்ட தலைவர் ‘மற்றப்பழத்தையும் சாப்பிடுங்கோ அண்ணை’ என்றார். சங்கர் அண்ணை சாப்பிடத் தொடங்க அண்ணை பாதுகாவலர்களிடம் ‘இன்னுமொரு மாம்பழம் ஒன்று வெட்டிவாங்கோ’ என்றார். உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்த அவர் ‘மாம்பழம் முடிந்து விட்டது’ என்றார்.

சங்கர் அண்ணை முகம் சற்று மாறியதை கவனித்த தலைவர் உடனேயே ‘சரி, வாழைப்பழம் எடுத்துவாங்கோ’ எனக் கூற அவர் அதுவும் முடிந்து விட்டது என்றார். சங்கர் அண்ணை சங்கடப்படுவதை உணர்ந்த தலைவர். ‘சரி தம்பி’ என்று அந்த சம்பாசனையை முடித்துக் கொண்டார். பின்னர் சங்கர் அண்ணையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கதைத்து அவருக்கு மனச்சங்கடம் இல்லாமல் வேறு வகையில் அவரை சந்தோசமாக அனுப்பி வைத்தார்.

பின்னர் அன்று மாலை தலைவர் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவேளை சம்பந்தப்பட்ட போராளி தலைவருக்கு முன்னால் சென்றார். ‘தம்பி இங்கை வாங்கோ’ என அப்போராளியை அழைத்து காலையில் நீங்கள் நடந்து கொண்ட முறை சரியா?’ எனக்கேட்டார். அவரும் எது என்று தெரியாமல் விழிக்க, தலைவர் சொன்னார் ‘காலையில் பழம்; கொண்டு வாங்கோ என்று சொல்ல, நீங்கள் சங்கர் அண்ணைக்கு கேட்கக்கூடியவாறு பழம் முடிந்து விட்டது என்று சொன்னீர்கள்.

அப்படி சொல்லியிருக்கக்கூடாது. ஏனென்றால் எனக்குரிய உணவை தான் சாப்பிட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி சங்கரண்ணைக்கு ஏற்பட்டதை அவரின் முகமாற்றத்திலிருந்து அறிந்து கொண்டேன். உணவு பரிமாறும் போது விருந்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும் உணவு பரிமாறவும் பழகிக் கொள்ளவேண்டும். இனிமேல் இப்படியான தருணங்களில் நான் கேட்கும் உணவு முடிந்து விட்டால், ஒரு ஒற்றையில் எழுதித்தாருங்கள் நான் அதைப் புரிந்து கொள்வேன் அவர்களிற்கும் தர்மசங்கடம்; ஏற்படாது’ என்று சொன்னார்.

இது தனிமனிதர்கள் மீதும் அவர்களின் தனிமனித உணர்வுகளிற்கும் தலைவர் கொடுக்கும் முன்னுரிமை, மதிப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இதனூடாகப் போராளிகளை மனிதநேயம், மனிதப் பண்புகள் உள்ளவர்களாக உருவாக்குவதன் மூலம், இப்போராளிகாளால் உருவாக்கப்படும் சமூகம் ஒரு நன்நெறி மிக்க சமூகமாகவும் நல்ல சிந்தனைகள், நற்பண்புகளைக் கொண்ட சமூகமாகவும் அடுத்தவர்களின் உணர்வுகளிற்கு மதிப்புக் கொடுப்பவர்களாகவும் உருவாக வேண்டும் என்பதை, தன்னைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து மாற்றவேண்டும் என்பதில் ஒரு தெளிவான பார்வை இருப்பதை வெளிக்காட்டுகின்றது.

ஒப்பற்ற தலைவன் எம் அண்ணண்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் கூட்டத்திலிருந்து உலக நாடுகள் வியக்கும் வண்ணம் முன்னுதாரணமானதோர் விடுதலைப் போராட்டத்தை கட்டியெழுப்பியவர் எங்கள் தலைவர்..

நாற்புறமும் கடல்நீர் சூழ்ந்துள்ள சிறியதோர் நிலப்பரப்பில் சிறீலங்காவோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா,சீனா,பாக்கிஸ்தான் நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு முகம்கொடுத்து மரபுவழி தாக்குதல் படையணிகள்,சிறப்பு படைபிரிவுகள்,பீரங்கிப்படை பிரிவு,கடற்படைபிரிவு,உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத்துறை,70க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு,அரை உரிமம் கொண்ட செயற்க்கைகோள்.

இவற்றிக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002ம் ஆண்டுமுதல் ஒரு அரசுக்கு இருக்கவேண்டிய அனைத்து துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடைமுறை அரசை உருவாக்கி பல உலக நாடுகள் வியக்கும் வண்ணம் மிக நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும் கண்ணியமும் ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் எம் தேசபெருந்தலைவர்.

உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்கள் உரிமைப் பூமியாய் இருப்பதுபோல உலககெங்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்தாலும் தம் இனத்திற்கென்று ஒரு நாடிருக்கின்றது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு மிக அருகில் தமிழினத்தை கொண்டுவந்தவர் எங்கள் தேதியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

இந்த நிலையை தமிழினம் அடைவதற்க்கு அவர்பட்ட கஷ்டம்,துன்பம்,துயரம்,இன்னல்,இடர்,இழப்பு கொஞ்சநஞ்சமல்ல.தன் பள்ளி பருவம் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்கள் விடிவிற்காகவே அர்பணித்துக்கொண்டு இருக்கின்ற ஒப்பற்ற தலைவன் எம் தேசியத்தலைவர்.

நன்றி – Thamil Kuruvi