தலைவரினால் பாராட்டு பெற்ற வன்னெரிக்குள முதலும் கடைசியுமான முறியடிப்பு சமர்!

1341

02.09.2008 அதிகாலை கிளிநொச்சி வன்னேரிக்குளம் களமுனைக்கு இரகசியமாக நகர்ந்த இலங்கை இராணுவம் சடுதியாக மேற்கொண்ட தாக்குதலில் வீரவேங்கைகளான சிலம்பன் மற்றும் தமிழ்ப்பாண்டி ஆகிய போராளிகள் வீரச்சாவை தழுவிக்கொள்ள மற்றொரு போராளி படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தினது பிடிக்குள் சிக்காமல் காவலரணை விட்டு தப்பி வெளியேற இலங்கை இராணுவம் காவலரணை கைப்பற்றிக் கொள்கின்றது.

பல்குழல் பீரங்கி மற்றும் கனரக எறிகணைச் சூட்டாதரவுடன் விமானப்படையும் இணைந்து முன்னெடுத்த இந்த பாரிய ஆக்கிரமிப்புத் தாக்குதலில் ஆனைவிழுந்தான் தொடக்கம் வன்னேரிக்குளம் வரையான முன்னரங்க நிலைகளை (மதியம் ஒருமணியளவில்) இலங்கைஇராணுவம் கைப்பற்றிக் கொள்கின்றது.

பின்தளம் சென்றிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை தாக்குதலணித் தளபதி கேணல் குமணன் அவசரமாக களம் திரும்பி தாக்குதல்களை பொறுப்பேற்று நடாத்திய இரண்டு மணிநேர கடும் உக்கிர தாக்குதலால் வன்னேரிக்குளம் அதிர்ந்து குலுங்கியது. எங்கும் சிங்கள படைகளின் மரண ஓலம். மாலை நான்கு மணியளவில் பாரிய இழப்புகளுடன் இராணுவம் பின்வாங்கியது. தமது சகாக்களின் உடல்களை கைவிட்டு உயிர் தப்பினால் போதுமென்று தப்பியோடினர் இலங்கை இராணுவத்தினர்.

180 பேர் உயிரிழந்ததாகவும் 500 பேரளவில் காணாமல் போனதாகவும் 250 பேரளவில் இராணுவத்திலிருந்து தப்பியோடியதாக இலங்கை இராணுவத்தை மேற்கோள் காட்டி அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டு நல்ல நிலையிலிருநாத 75 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.பெருந்தொகையான இராணுவ தளபாடங்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இத் தாக்குதலே 2006 ம் ஆண்டு தொடங்கிய (சாமாதான ஒப்பந்த காலத்தின் பின்னர்) முறியடிப்பு தாக்குதல்களில் வெற்றிகரமான தாக்குதல் என தேசியத் தலைவரால் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுமார் பத்தாயிரம் இராணுவத்தினரும் விமானப்படையும் இணைந்து மேற்கொண்ட இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டது 160 போராளிகளே என்பதும் இங்கு பதிவு செய்யவேண்டிய ஒன்று.

இவ் வெற்றிகரமான தாக்குதலில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கம்.