தலைவரும் ஆதிசிவனும்

101

தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு ஒரு முறை தலைவர் வருகை தந்தார்.

தனக்கே உரித்தான பாணியில் ஒவ்வொரு விடையங்களையும் உன்னிப்பாக பார்வையிட்டார்.

முதலில் மருத்துவக் கல்லூரிக்கான நூலகத்தை (Medical Library)பார்வையிட்டு வேறு துறைசார் நூல்களும் இடம்பெறவேண்டும் எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து எங்கள் மருத்துவ ஆய்வுகூடத்தை (Medical Laboratory )பார்வையிட்டார்.

தலைவர் எங்களது உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடத்தையும் (Dissection Hall) பார்க்கத் தவறவில்லை.

உடலமைப்பியல்(Anatomy) பாடத்தினைப் படிப்பதற்காய் யாழ் மருத்துவபீடத்தால் எமக்கு வழங்கப்பட்டிருந்த உடலங்களையும் பார்வையிட்டு மரியாதை செய்தார்.

உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடம் எமது கல்லூரி வளாகத்தின் மையத்தில் கட்டப்படவில்லை. கல்லூரி வளாகத்தின் எல்லையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரி எல்லையில் வாழைத்தோட்டம் காணப்பட்டது. நீர்வேலி மண்ணின் செழிப்பான வாழைத்தோட்டத்துக்கு அடுத்தே பொது மக்களின் வீடுகள் காணப்பட்டது.

பகுப்பாய்வுக் கூடத்தைப் பார்வையிட்டவாறே “உங்களால் பாதுகாக்கப்படும் திருவுடலங்களால் பொது மக்களின் நலன் ஒரு நாளும் பாதிப்படையக் கூடாது. இறந்தவர்கள் தொடர்பான அச்சம் மனிதகுலத்தைவிட்டு இன்னமும் அகலவில்லையாதலால் அவர்கள் அச்சமடையக்கூடும் அதுமட்டுமல்ல போமலின் மணங்கள் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும்” எனக்கூறினார்.

அத்தோடு உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடத்தின் அமைவிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதே சிறந்தவழி எனச் சிறிது கடுமையாகவும் கூறினார்.

பொறுப்பானவர்கள் தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்த வண்ணம் இருந்தனர். மற்றும்படி அங்கே ஒரு நிசப்தம் நிலவியது.

எங்களில் ஒரு சிலரைத்தவிர மீதமான அனைவரும் அன்றைய நாளில்தான் தலைவரை முதன்முதலில் தலைவரைச் சந்தித்ததால் கதைக்க எதுவுமே தொண்டையைவிட்டு வெளியே வரவில்லை.

நிலையை அவதானித்த தலைவர் எங்களை கதைக்க வைப்பதற்காய் தானே சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலும் சொன்னார்.

ஆம், எங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர சில மேலதிக விடையங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

“இறந்தவர்கள் தொடர்பான அச்சம் பலரின் பலவீனம்” என ஒரு கட்டத்தில் சொன்னார்.

“எதிரியும் புலனாய்வாளும் காட்டிக் கொடுப்பாளர்களும் கூட அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல” என்றார்.

தனது தலைமறைவு காலத்தில் கழுகுக் கண்களுடன் பொதுமக்கள் நடுவே நின்று தன்னைத் தேடிய இரகசிய பொலிசாரின் கண்களிலிருந்து தப்புவதற்காக சுடுகாடுகளையும் இடுகாடுகளையும் தெரிவு செய்த கதைச் சொன்னார்.

சுடலைகளை இரவுத் தங்ககமாக மாற்றி வாழ்ந்த கதையைச் சிரித்தவாறே சொன்னார்.

யாழ்ப்பாண மண்ணில் தனக்கு தெரியாத சுடுகாடுகள் பெரும்பாலும் இருக்கமுடியாது என்றும் கூறினார்.

தலைவர் கூறிய இந்த விடையங்கள் என் நினைவுப் பெட்டகத்தில் இருந்து கொண்டிருந்த நிலையில் சென்ற வருடம் எனது ஊரைச் சேர்ந்த ஒரு ஆசிரியரைச் சந்தித்தேன்.

அந்த ஆசிரியர் என்னிடம் கூறியதையும் கீழே தருகிறேன்.

“ஆதிசிவன் எனும் தெய்வம் மானுடராக இப்பூமியில் வாழ்ந்தவரே! ஆதிசிவனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் போரிட்ட ஒரு தனிமனிதன்.”

“தலைமறைவாய் வாழ்ந்த ஆதிசிவன் தனைப் பாதுகாக்கும் நோக்கில் சுடுகாட்டில் வாழ்ந்து உள்ளார்.”

சுடலையில் உள்ள காட்டு மரங்களில் கிடைக்கும் பழங்களையும் அங்கே படைக்கப்படும் உணவை உண்டு ஒரு கரடுமுரடான வாழ்க்கையை அவர் வாழ்ந்தும் உள்ளார்.

தனை உருமறைக்கும் நோக்கில் சுடலைச் சாம்பலை உடல் மீது பூசி,புலித்தோலினை உடலில் போர்த்தபடி சுடலைகளில் வாழ்ந்த வண்ணம் மானுடவிடுதலைக்காய் போராடினார் என்றார்.

மதிப்புக்கும் அன்புக்குமுரிய திரு தவராசா ஆசிரியர் “ஆதிசிவன்” தொடர்பில் சொன்ன கதைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அக்கணம் தலைவர் என் நினைவில் மலர்ந்தார்.

ஆம்,

இருவர் கழுத்திலும் விஷம்!
இருவர் உடலிலும் புலித்தோல்!
இருவர் வாழ்விலும் சுடுகாடு!

– வயவையூர் அறத்தலைவன்