பூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..?

131

2009 க்கு பின்னரான கடந்த சில வருடங்களாக வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களில் வருடாந்தம் சில நூறு பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.மக்கள் போதிய விழிப்புணர்வுகள் இன்றியும் பொறுப்புணர்வுமில்லாத வகையிலான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றமை கவலைகுரிய விடயம்.முப்பது வருட போரில் இழக்ககூடாத எல்லாம் இழந்து நிற்கும் இந்த இனம்,பொறுப்புடைமை பற்றி எள்ளளவும் அலட்டி கொள்வதாக தெரியவில்லை.வீதிகளில் செல்வோர் தங்கள் உயிர் பற்றியும் அருகில் வீதியில் செல்லும் மற்றையவர்கள் உயிர் பற்றியும், ஒரு துளி கவனமில்லாமல் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தி கூட்டு தற்கொலைக்கு ஒரு சமூகத்தை இழுத்து செல்கின்றனர்.வரலாறு முழுக்க வாழ்ந்து கெட்ட இனம்,தன்னை தானே அழிக்க தொடங்கி சில ஆயிரம் ஆண்டுகள் ஆகி இன்று உச்சத்தில் வந்து நிற்கின்றது.

கேள்விகுறியாகும் தனிமனித ஒழுக்கங்கள் தாண்டி சூழ்நிலை ஒழுக்கங்களும் அற்ற ஒரு தலைமுறை தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் ஒரு கூட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.எடுத்த எடுப்பில் தற்கொலையை நாடும் இளம் சமூகத்தினர்,கடன் தொல்லைகளில் தேவையில்லாமல் மாட்டி அல்லல்படும் குடும்பங்கள்,வீதிகளில் வீணாக பொழுதை கழிக்கும் இளைஞர்கள்,வீடுகளில் தினமும் பலமணி நேரத்தை கழிக்கும் யுவதிகள்,நாள்கூலியில் முக்கால்வாசியை அன்று பின்னேரமே குடித்து காலி பண்ணும் தொழிலாளர் வர்க்கம்,அதிக பேராசைக்கு ஆசைப்பட்டு மண்ணை மலடாக்கும் விவசாயிகள்,வறிய மக்களை ஏக்காட்டி பிழைக்கும் வியாபார வர்க்கம்,மாணவர்களை பட்டியாக அடைத்து வைத்து கல்வியை விற்கும் ஆசிரியர்கள்,இக்கரைமாட்டுக்கு அக்கரை பச்சை இச்சையில் வெளிநாடுகள் சென்று திரும்பி வர முடியாமலும் அங்கும் வாழ முடியாமல் மனழுத்தங்களுக்கு ஆளானோர்.முப்பதுகள் தாண்டியும் வெளிநாடுகளில் பணத்திற்காக குத்தி முறியும் இளைஞர் வர்க்கம்,சொந்த சாதியில் பெண் கிடைக்காமல் பருவம் தாண்டி கல்யாணத்தை செய்யும் இளைஞர் யுவதிகள்,வீட்டில் அழகாக ஓடி விளையாடும் சிறுவர்களை விருப்பமே இல்லாமல் காலுக்கு ஒவ்வாத காலணிகள்,ஷொக்ஸை மாட்டி பாடசாலை கேட்டில் கொண்டு போய் இறக்கி விடும் பெற்றோர் என்று இந்த இனம் அனைத்து நிலைகளிலும் தனக்கென்று இருந்த தனித்துவத்தை நாகரீகத்தை இழந்துவிட்டு அந்நிய கைகூலிகளிடம் கையேந்தி நிற்கின்றது.இவ்வளவும் கெட்டுகுறுகி போய் நிற்கும் ஒரு இனத்தை,அரசியல்வாதிகள் ஒரே ஒருநாள்,ஒரு வாக்குக்காக ஏமாற்றுகின்றனர்.அதனால் அவர்களுக்கு அது தொடர்பான குற்றவுணர்வு வருவதில்லை.ஒவ்வொரு நாளும் ஏமாந்து வரும் மக்களுக்கும் இதனால் குற்றவுணர்வு வருவதில்லை.

ஒரு இனம்,மதம் சாதி சமூகங்களாக பிரிந்து காணப்பட்டாலும் தனிநபர்களின் ஆழமான கரிசனைகள் ஒன்று சேர்ந்து சமூகத்தில் ஒரு ஒழுங்கை கட்டியெழுப்பியிருக்கும்.அதன் மூலம் அந்த இனம் குறிப்பிடதக்க வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும்.ஆனால் தமிழினத்தில் அந்த கொடுப்பனையும் இல்லாமல்,தானும் கெட்டு தன் சமூகத்தையும் கெடுப்பதை முழுநேர வேலையாக கொண்டு அலைகிறது தமிழினம்.எத்தனையோ குடும்பங்கள் தமிழ் இனத்தை தள்ளி வைத்துவிட்டு ஐரோப்பாவில் அமெரிக்காவில் தொலைபோய் வாழ்ந்தும் வருகின்றனர்.ஒரு இனம் அழியபோகுகின்றது என்றால் அது முதலில் தனக்குள் அழுக தொடங்கியிருக்கும்.இன்று இதுதான் நடக்கின்றது கூடவே அமைதியான அழிப்பு ஒன்று தமிழர்களே தமிழ்இனத்தின் மீதே கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.இவ்வளவு பிரச்சினைகளை அகத்தில் வைத்துகொண்டு ஒரு இனம் புறத்தே போராட முடியாது.முதலில் அகதடைகளை உடைக்கப்பட்டு சமூக சீரான அக உட்கட்டமைப்புக்களை உருவாக்கும் போதே வெளியுக பாதி எதிரிகள் தொலைந்துபோயிடுவார்கள்.இவற்றுக்கு தேவையான அந்த அக பெருவெடிப்பு எப்போதை என்பதுதான் இந்த இனத்தின் முன்னாலுள்ள கேள்வி? அதுவரை நடப்பவைகளும் நடந்துதா தீரும்,ஒரு இனம் தன்னில் தேவையில்லாதுகளை அழித்து தன்னை தானே புதுபித்து கொள்கின்ற செயன்முறையில் இருக்கின்றது என்ற நேர் சிந்தனையில் எமக்கு தரப்பட்ட வேலைகளை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செய்வோம்.இங்கே நாம் உணர வேண்டிய இரு உண்மைகள். ஒன்று நாம் அனைவரும் ஒரு நாள் இறக்க போகின்றோம்.மற்றையது வாழ்வை தொலைத்து தேடிய எதையும் போகும் போது கொண்டு போக முடியாது.

எனவே ஒவ்வொரு தனி தமிழர்களிலும் எழும் சிறு சிறு மாற்றங்கள்,ஒரு ஒட்டு மொத்த இனத்தின் மாற்றமாக ஒருங்கிணைந்து கட்டியெழுப்பட்டும்.இந்த பூமி பந்துக்கு நாம் யார் என்பதை நிருபிக்கவேண்டி கட்டாயத்தில் கல்தோன்றி மண்தோன்றா கால மூத்த இனத்தினர் நாம் உள்ளோம்.இந்த நொடியில் நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்களோ அதை சிறப்பாக செய்யுங்கள்,மாற்றம் உங்களிடமிருந்து இந்த நொடியே ஆரம்பிக்கப்பட்டும்…

ஒரு பேப்பர் ஒரு கூட்டம் ஒரு திட்டம்