தன் உயிர் மாய்த்து பல உயிர்களை வாழவைத்த உன்னதமான மாமனிதன்.

138

குடாரப்பு தரையிறக்கத்தின்போது ஓர் களமுனையில் எதிரிகளின் வளைப்பிற்குள் 150ற்கு மேற்பட்ட போராளிகள் சிக்கிக்கொள்கின்றனர்.அவர்களை மீட்க முறியடிப்பு அணியொன்றை வீதிக்கு அப்பால் அனுப்புவதில் எதிரியின் சினைப்பர் தாக்குதல் பெரும் இடையூறாக இருந்தது.

சினைப்பர் தாக்குதலை நடத்தும் எதிரி எங்கிருக்கிறான் என்று கண்டுகொள்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல..ஆனால் அவனால் புலிகளின் நகர்வை அவதானித்து தாக்கமுடிந்தது.

முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் வீரர்களை விரைந்து மீட்டு அவர்களை பாதுகாப்பாக பின்னுக்கு எடுக்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்படுகிறது. அதனைக் கையாள அங்கிருந்த படையணிக்கு ஒரேயொரு மார்க்கமே இருந்தது.

யாராவது ஒருவர் வீதியைக் கடந்து ஓடவேண்டும். அப்போதுதான் சினைப்பர்காரனின் இருப்பிடத்தை அறியமுடியும்..அப்போது நான் போகிறேன் என்று ஓர் குரல்..அனைவருமே அதிர்ந்தனர்..

அவனைப் பார்த்த பொறுப்பாளர் “ரோட்டைக் கடந்து ஓடினால் அவன் கண்டிப்பாக அடிப்பான்” என்று கூறிமுடித்ததும் புன்னகைத்தபடி சென்ற அவ் இளம்வீரன் வீதியைக் கடக்கும்போதே ரவை அவனது உயிரைப் பறிக்க அவ்விடத்தில் வீரமரணம் அடைகிறான்..

சினைப்பர்காரனின் இருப்பிடமறிந்து தாக்குதல் நடத்தி அத்தனை வீரர்களையும் பாதுகாப்பாய் பின்நகர்த்தினர். அத்தனைபேரையும் காத்துவிட்டு அந்த வீரன் ஆனையிறவு மீட்புச் சமரின் வெற்றியைத் தாங்கிய தூண்களில் ஒன்றாய் நிமிர்ந்தான்.

ஈழம் இதயத்துள் இமயத்தையும் மிஞ்சி நெஞ்சை நிமிர்த்தி நின்றிட இவன் போல் எத்தனை எத்தனை தியாகங்கள் எழுதப்படாத காவியங்களாய் எம்முள் மௌனித்துள்ளன.

கதிா் ஈழம்