தன்வினை தன்னைச் சுட்டது…

50

பாரிஸ் புறநகரில் நள்ளிரவில் நடந்த கர்மா! மகிழுந்து ஒன்றை தீயிட்டு கொழுத்திய இருவர் எரிகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Melun (Seine-et-Marne) நகரில் கடந்த (14/09/2020) திங்கட்கிழமை இரவு 1 மணி அளவில் rue de Montaigu வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Opel Corsa மகிழுந்து ஒன்றை 16 வயதுயுடைய இரு சிறுவர்கள் தீயிட்டுள்ளனர்.

பின் விளைவுகளை யோசித்திராத அவர்கள் மகிழுந்தின் எரிபொருள் நிரப்பும் பகுதியை திறந்து தீ மூட்டியுள்ளனர்.

ஒரே நொடியில் பற்றிக்கொண்ட தீ மகிழுந்தை முற்றாக எரித்தது. அவ்விருவரும் தப்பி ஓடுவதற்கு கூட நேரம் இல்லாததால் அவர்கள் மீதும் தீ பரவியது. மகிழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்து, தீ அவர்களின் முகம் மற்றும் கைகளையும் எரித்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், பின்னர் SAMU அதிகாரிகளை அழைத்து மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

ஒருவர் Melun நகர மருத்துவமனையிலும், இரண்டாமவர் பாரிசின் Necker (15 ஆம் வட்டார) மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு முகத்தில் ‘ப்ளாஸ்டிக்’ சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.