ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பேரழிவு…

130

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 13ஆயிரம் பேர் நிர்க்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரேக்க தீவான லெஸ்போஸில் அமைந்துள்ள மோரியா முகாம், ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தற்காலிக இல்லமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, முகாமின் பெரும்பகுதியை தீ அழித்தது. இதனால் 13,000 குடியிருப்பாளர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

எனினும், இந்த தீ விபத்தினால் எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால் முகாமின் பரந்த பகுதிகளும், அருகிலுள்ள தளமும் தீயில் அழிந்தன. மருத்துவ வசதி மற்றும் கூடாரங்களின் சிறிய இடங்கள் மட்டுமே தீண்டப்படாமல் இருந்தன.

2015ஆம் ஆண்டு முதல் மோரியா முகாம் புலம்பெயர்ந்தோரின் வருகையால் நிரம்பியுள்ளது. 3,000 பேருக்காக வடிவமைக்கப்பட்ட இந்த இருண்ட கூடார முகாம், 2016ஆம் ஆண்டில் ஐரோப்பா அகதிகளின் பாதைகளைத் தடுக்கத் தொடங்கிய பின்னர் சில நேரங்களில் 20,000க்கும் அதிகமானோரை தாங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன், இந்த தீ விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.

அதேநேரத்தில் மேற்கு ஜேர்மனியில் ஒரு பிராந்தியத்தின் ஆளுநர் அர்மின் லாசெட், 1,000பேர் வரை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்த வார ஆரம்பத்தில் மோரியா முகாம் குடியிருப்பாளர்களில் 35பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த முகாம் பூட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மோரியா முகாம் குடியிருப்பாளர்களால் இந்த தீ வைக்கப்பட்டதாக கிரேக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

முகாமில் 407 ஆதரவற்ற சிறுவர்கள் உட்பட 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வசித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் தீவில் அவசரகால நிலையை அறிவித்தார். அத்துடன் இத்தீ சம்பவத்திற்கு காரணமாக கலவரக்காரர்களைக் கண்டித்தார்.