தூத்துக்குடி இனப்படுகொலை, திராவிட,அரசியல் கட்சிகளின் துரோகங்கள்!

165

ஈழ நிலத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை எப்படி உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஆறாத வடுவாகிப் போனதோ, அப்படித்தான் தமிழக நிலத்தில் நடந்த ஸ்டெர்லைட் படுகொலையும் ஆறாத வடுவாகி நிற்கிறது.

ஈழத்தில் நடந்த இனப் படுகொலை கருணாக்களின் துரோகத்தால் நிகழ்ந்தவை. தூத்துக்குடியில் நடந்த இனப் படுகொலை கட்சிகளின் துரோகத்தால் நிகழ்ந்தவை. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல் எல்லாக் கட்சிகளும் துரோகம் இழைத்து இருப்பதாகவே தெரிகிறது.

ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் காவல் அரணாக இருப்பவைதான் அரசுகள் என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கான நிகழ்கால சாட்சியாக 13 உயிர்கள் பறிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் அப்படுகொலையின் இரத்தவாடை இன்றும் வீசிக்கொண்டுதான் இருக்கிறது.

தூத்துக்குடியில் நடந்துள்ள துப்பாக்கிச் சூட்டைப் பற்றிச் சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது அவர் அளித்த பதில், ‘என்னிடம் சொல்லாமலே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டனர்’ என்றார். பாவம் முதல்வருக்கே தெரியாமல் சுட்டுவிட்டனர் என்றுதான் நாமும் நம்பிக்கொண்டு இருந்தோம். ஆனால் உண்மை என்ன? என்பது இப்பொழுது வெளிச்சத்திற்கு வருகிறதே..

எடப்பாடியின் அரச பயங்கரவாதம் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொருவரின் வீட்டுக் கதவையும் தட்டி, ‘நீங்கள் நினைவு நாளில் எதுவும் செய்யக் கூடாது’ என்று மிரட்டி வருகிறது எடப்பாடி அரசின் காவல்துறை. இப்பொழுதும் ‘எனக்கு தெரியாமல்தான் இவை எல்லாம் நடக்கிறது’ என்றுச் சொல்லப் போகிறாரா எடப்பாடியார்?

அதிமுகாவின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் உட்பட பலரும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக நிற்பது எடப்பாடியாருக்கு தெரியாதா? அதிமுக கட்சியின் துரோக முகங்கள் மக்களுக்கு தெரிவது போலவே மற்றக் கட்சிகளின் துரோகங்களும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

திமுகவின் கீதா ஜீவன் மகன்தான் ஆலையில் ஜிப்சம் ஒப்பந்தக்காரர். கட்டபஞ்சாயத்து நாயகன் ஜோயல்தான் வாகன ஒப்பந்தக்காரர். வைகோவின் அன்பு நண்பன் செல்லச்சாமி நாய்க்கரும் ஒப்பந்தக்காரர். இப்படி எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தோடு ஒரு உள் உடன்படிக்கையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

‘பணம்’ மட்டுமே பிரதானமெனக் கருதி, கட்சி நடத்தும் இந்த துரோகிகளை வைத்துக் கொண்டு தமிழர்கள் என்ன செய்துவிட முடியும்?

தங்கை ஸ்னோலின் சிந்திய சூடானப் பச்சை இரத்தத்தை வைத்து பணம் பண்ணும் இந்த பதர்களை வைத்தா நாம் நிம்மதியான வாழ்வை வரித்துக் கொள்ள முடியும்?

கார்ப்பரேட்- கட்சி- மக்கள் இந்த மூன்றையும் ஒரேவொரு கயிற்றைக் கொண்டுதான் கட்டி இருக்கின்றனர். அந்தக் கயிறுதான் பணம்.

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம். ஸ்டெர்லைட் ஆலை கொடுத்த பணத்திற்கு காங்கிரஸ், பாசக, திமுக, அதிமுக கட்சிகளில் தொடங்கி லெட்டர்பேடு கட்சிகள் வரை வாய் பிளப்பதன் காரணம் என்ன? இவர்கள் எல்லாம் பிணம் தின்னும் கழுகளைப் போன்ற பணம் தின்னிகள்.

வாக்களிக்க பணம் மக்கள் கேட்கின்றனர்- வாக்கிற்கு பணம்தர கட்சிகள் பதவி துரோகத்தில் ஈடுபடுகின்றனர் – பதவி துரோகம்தான் ஊழல்- ஊழலின் ஊற்றுக்கண்தான் கார்ப்பரேட். இந்த சுழற்சியில் சிக்குண்ட இந்த இனத்தை மீட்காத வரை இது போன்ற படுகொலைகளை நாம் சந்தித்துக் கொண்டேதான் இருப்போம்.

பணம் தின்னிக் கட்சிகளில் இருந்து மக்கள் விலகி நிற்காத வரை, இரத்தம் குடிக்கும் ஆலைகளை ஒழிக்க முடியாது. இதுபோன்ற திட்டமிடப்பட்ட படுகொலைகளையும் தவிர்க்க முடியாது.

தூத்துக்குடி படுகொலை நடந்தபோது, “உலகிலேயே மக்களால் அதிகம் வெறுத்து ஒதுக்கப்படும் ஆலை, ஸ்டெர்லைட் ஆலைதான்” என்று தி இன்டிப்பென்டண்ட் நாளிதழ் முக்கியச் செய்தியாக வெளியிட்டது.

தமிழர்கள் வெறுக்க வேண்டியது ஆலையை அல்ல, ஆலையை இந்த நிலத்தில் நிறுவக் கரணமாக நிற்கும் கட்சிகளைத்தான்…

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான ஒவ்வொரு கட்சியையும், அப்படுகொலையில் பணம் பார்த்த அத்தனை துரோகிகளையும் வஞ்சம் தீர்க்கும் வரை…

சண்முகம், கார்த்திக், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், செல்வசேகர், தமிழரசன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், காளியப்பன், ஜெயராமன், ஜான்சி, ஸ்னோலின், கந்தையா உட்பட்ட அனைவருது ஆன்மாக்களும் அடங்காது…

அவர்கள் மீண்டும் மீண்டும் போராடிக் கொண்டுதான் இருப்பர்… ஏனெனில்…

”நீங்கள் சுட்டுக் கொன்றது வெறும் உடலைதான், அவர்களின் இலட்சியங்களை அல்ல..”