23 ஆண்டுகள் பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த திரு.க. துரைரத்தினம்

98

23 ஆண்டுகள் பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்தவர் திரு. க. துரைரத்தினம்.

தமிழீழம் கேட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட 1977ம் ஆண்டுத் தேர்தலில் எனக்கு வாக்களிக்கும் வயதில்லாவிட்டாலும் அவரை ஆதரித்து பரப்புரைப் பணிகளில் நான் ஈடுபட்டேன். பெரும்பாலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் பணி. அவரது இரண்டாவது மகன் மகேந்திரராஜா என்னுடைய பள்ளித் தோழன். அதற்கும் நான் திரு. துரைரத்தினத்தை ஆதரித்ததற்கும் எதுவித தொடர்பும் இல்லை.

இவ்வாறு இருந்தாலும், எனக்கு துரைரத்தினம் அவர்கள் மீது மிகுந்த வெறுப்பிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி இவர் மாதிரி ஆட்களை எல்லாம் எதற்கு தேர்தலிலில் நிறுத்துகிறது என்று அக்கட்சியின் மீது அதிருப்பதியும் இருந்தது.

காரணம் இதுதான். அவர் பொது மேடைகளில் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு பேசமாட்டார். சிங்கள அரசாங்கத்தைத் திட்டித் தீர்க்கமாட்டார். போராட்டம் என்ற பேச்சே அவரிடமிருந்து வராது. மாறாக எந்தவிதமான வெங்காயத்தை நடவேண்டும். விறகு அடுப்பை எவ்வாறு நிர்மாணித்தால் விறகை மிச்சம் பிடித்து நல்ல சூட்டையும் ஏற்படுத்தலாம். கடற்கரை மண்ணை வகை தொகையின்றி அள்ளுவதால் ஏற்படும் பாதிப்பு. அதிக நேரம் தண்ணீர் பம்பியை பாவிப்பதால் நிலத்தடி நீர் வற்றி வரட்சி ஏற்படும் என்ற அறிவுரை. அளவிற்கு அதிகமாக செயற்கை உரம், கிருமிநாசினிகளை பாவிப்பதால் நிலத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்று எனக்கு அலுப்புத்தட்டுகிற விசயங்களையே பேசுவார்.

போதாக்குறைக்கு ஒரு கூட்டத்தில் சொன்னார், வடமராட்சி கிழக்கு கடலில் பாலை மீன் வகைகளை வளர்த்தால் மீனவர்கள் நல்ல வருமானம் பெறலாம். இந்தக் கதையை கேட்கும்போது நான் நினைத்தேன் இந்தாளுக்கு என்ன விசர் பிடிச்சிட்டுதா, கடலிலை மீன் போதாது என்று யாராவது வளர்ப்பார்களா?

பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கையில் ..

தமிழீழம் அமைப்போம் தாயகம் மீட்போம் என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசி இளைஞர்களுக்கு உசுப்பேத்திய அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தாயகத்தை உண்மையாகவே நேசித்த அரசியல்வாதி திரு. துரைரத்தினம் என்பதனை விளங்கிக்கொள்ள முடிகிறது. அந்த உன்னதமான மனிதர் பல வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார்.

அவர் பா.உ. ஆக இருந்தபோது மயிலியதனை என்னும் இடத்தில் அவரது வீட்டுக்கு அருகில் தோட்டம் செய்தார்.

வடபகுதியில் தற்போது பயிரிடப்படும் திராட்சை மரத்தினை வெளிநாடொன்றிலிருந்து பெற்று அப்பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர் திரு. துரைரத்தினம் அவர்கள். அதுவரை வரண்ட வடபகுதியில் திராட்சை தாவரத்தை பயிரிட முடியாது என்ற கருத்தே விவசாயிக்ள் மத்தியலிருந்தது.