ஒரு தனிமனித இயக்கம் ஒய்ந்தது !

114

பாலா அண்ணா, பாலா அங்கிள், பாலா ஐயா என நாங்கள் அன்புடன் அழைக்கும் திரு. நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தெற்கு லண்டனிலுள்ள மருத்துவமனையொன்றில் சாவடைந்தார். பாலா என்ற பெயர்கொண்டு அழைக்கப்படுபவர்கள் பலரும் உள்ளதால் “ரைகர் பாலா”, “குரொய்டன் பாலா”, “ஒரு பேப்பர் பாலா”, “Hot Spring Bala” என்றும் அவர் அழைக்கப்பட்டார். இறக்கும்போது அவருக்கு வயது 78.

சில மாதங்களாகவே தீராத நோய்வாய்பட்டிருந்த பாலாண்ணா எம்மைவிட்டுப் பிரிந்தது அதிர்ச்சியளிக்கும் விடயமல்ல. ஆனால், எம்மைப் பொறுத்தவரை பாலாண்ணா விட்டுச்சென்ற வெற்றிடம் இட்டு நிரப்பமுடியாதது. போற்றற்கரிய வாழ்வினை வாழ்ந்து ஒரு வழிகாட்டியாகவிருந்த அவர் நாம் இடர்பட்ட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறுதுணையாக நின்றவர்.

யாழ் வடமராட்சியிலுள்ள துன்னாலையை பிறப்பிடமாகக் கொண்ட பாலாண்ணா யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். நடராஜா மாஸ்ரர் என அழைக்கப்பட்ட அவரது தந்தையார் அந்நாட்களில் புகழ்பூத்த ஆசிரியர்களில் ஒருவராகவிருந்தார். உயர்கல்வியை முடித்ததும் இலங்கைத் தொலைத் தொடர்புத் திணைக்களத்தில் இணைந்து ஒரு பொறியாளராகப் பணியாற்றினார். அங்கு பணியாற்றும் காலத்தில் தொலைத்தொடர்புத் தொழினுட்பத்தில் சிறப்புப் பயிற்சியினை ஜெர்மனியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதனால் ஜேர்மனியில் சிலகாலம் வாழ்ந்ததால் அம்மொழியில் அவருக்கு ஒரளவு பரீட்சியம் இருந்தது. அந்நாட்டில் வழக்கத்திலிருக்கும் நகைச்சுவைத் துணுக்குகளையும் அவர் எம்மிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

எண்பதுகளில் தொழில் நிமித்தம் அபுதாபி நாட்டுக்கு சென்ற அவர் அங்கிருந்துகொண்டு தாயகம் நோக்கிய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்பணிகளை விரிவாக்கும்நோக்கில் அக்காலகட்டத்தில் சென்னையில் தொடர்பகத்தைக் கொண்டு இயங்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டார். அபுதாபியில் அவர் வாழ்ந்த நாட்களிலிருந்து அவர் உடல் நலம் குன்றி இயக்கமற்றுப்போன அவரது இறுதிநாட்கள் வரை தாயகம் நோக்கிய அவரது ஈடுபாடு குன்றவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகளாகவும், தமிழ்த் தேசிய அரசியலில் பற்ருறுதி கொண்டவர்களாகவும் இரவு – பகலாக ஒய்வின்றி உழைத்த பல செயற்பாட்டாளர்களில் பாலாண்ணா குறிப்பிடத் தக்கவர்.

விடுதலை இயக்கத்திற்கு நிதி சேகரித்தார் எனக் குற்றஞ்சாட்டபட்டு அபுதாபி காவற்பிரிவினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். மேலும் இதுபோன்ற இடையூறுகள் ஏற்படுவதனை தவிரக்கும்முகமாக எண்பதுகளின் இறுதியில் லண்டனுக்கு புலம்பெயர்ந்தார். அங்கிருந்து பாலாண்ணா தனது தேசியப் பணியினை தொடர்ந்தார்.

ஆரம்பத்தில், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தொண்டராக இணைந்து கொண்ட பாலாண்ணா, தாயகமக்களின் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு புலம்பெயர் மக்கள் மத்தியில் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டார். பண்டிகை நாட்களில் அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்று, இரவு கோவில் பூட்டும் வரை உண்டியல் ஏந்தி கோவிலுக்கு வரும் மக்களிடமிருந்து நிதி திரட்டினார். தன்னுடைய உழைப்பிலிருந்தும் பணத்தை அள்ளி வழங்கினார்.

ஈழத்து ஊடகவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவரான காலஞ்சென்ற திரு. சிவநாயகம் அவர்கள் 1997ம் ஆண்டில் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து இஙகிருந்து வெளிவந்த Hot Spring ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். திரு. சிவநாயகத்திற்கு எல்லாவிதத்திலும் உதவிபுரிபவராகவும் Hot Spring சஞசிகையின் விநியோகப் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்ட பாலாண்ணா அதற்காக உழைத்தார். பொருண்மிய நெருக்கடியினால் அச்சஞ்சிகை பதிப்பிப்பது நின்றுபோனபோது அதனை மீளவெளிக்கொணரும் பணியில் உருவாக்கப்பட்ட Friends of Hot Spring குழுவில் இணைந்து கொண்ட பாலாண்ணா அதற்காகவும் தனது நேரத்தைச் செலவிட்டு உழைத்தார்.

2002 இல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உருவான சமாதானகாலத்தில் வன்னிக்குச் சென்ற பாலாண்ணா அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்நாட்களில் தேசியத் தலைவர் அவர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பினையிட்டு அவர் பெருமகிழ்வு கொண்டவராக இருந்தார். இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை அவர் எல்லோருக்கும் காட்டி மகிழ்வார்.

பின்னாட்களில் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளராகவிருந்த திரு. காஸ்ட்ரோ (மணிவண்ணன்), எண்பதுகளில் சென்னை இந்திரா நகரில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பணியகப் பொறுப்பாளராகவிருந்தார். பாலாண்ணா அபுதாபி நாட்டிலிருந்த காலத்திலிருந்தே அவர் திரு. காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைப் பேணிவந்தார். ஆதலால், சமாதானகாலத்தில் வன்னிக்குச் செல்கின்றபோதெல்லாம் பாலாண்ணா திரு. காஸ்ட்ரோவை சந்திக்கத் தவறுவதில்லை. தன்னிலும் இருபது வயது குறைந்த திரு. காஸ்ட்ரோவை மரியாதையின் நிமித்த காஸ்ட்ரோ அண்ணை என்றே பாலாண்ணா அழைத்துவந்தார்.

2004ம் ஆண்டு ஜுன் மாத்தில் ஒரு பேப்பர் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முழுநேரத் தொண்டராக பாலண்ணாவும் இணைந்துகொண்டார். வாரத்தில் ஏழு நாளும் காலையில் ஒரு பேப்பர் பணியகத்திற்கு வரும் அவர் இரவு வரை அங்கேயே தங்கியிருந்து எல்லாவிதமான பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பணிசெய்யவென வந்தால் இதுதான் செய்வேன் அதனைச்செய்யமாட்டேன் என்ற பாகுபாடுகளின்றி எல்லாபணிகளையும் பாலாண்ணா செய்வார். அங்கு பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமல்ல விருந்தினராக வருபவர்களுக்கும் தேனீர் தயாரித்துக் கொடுப்பார், உணவு பரிமாறுவார், பத்திரிகை விநியோகத்தில் உதவுவார், தொலைபேசி அழைப்புகளை ஏற்றுக்கொண்டு உரையாடுவார். பணிசெய்யும் அனைவருக்கும் உதவுவார். அவர் சுவையாக உணவு சமைத்துப் பரிமாறிய நாட்களும் உண்டு. ஒரு பேப்பர் குழுவிலிருந்தவர்களில் அவரே மூத்தவராக இருந்தபோதிலும் அனைவருடனும் வயதுபேதம் எதுவுமின்றிப் பழகுவார்.

ஒரு பேப்பர் நிதிநெருக்கடிக்கு உள்ளானபோது தானே முன்வந்து அதன் நிதி, நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அதனைப் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு உதவினார். ஆரம்பத்தில் அவர் பத்திரிகையில் எதுவும் எழுதாவிட்டாலும், எழுத்துப்பிழை பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். 2009ம் ஆண்டுக்கு பின்னர் அவரும் ஒரு கட்டுரையாளராக மாறி ஆங்கிலத்தில் அரசியற் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். அவரது கட்டுரைகள் அதிகாரமையங்களை விமர்சிப்பதாகவும், மனிதவுரிமைகளைப் காப்பதாக நாடுகள் மேற்கொள்ளும் தமது நலனசார் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாகவும் அமைந்திருந்தன.

2009 ஆண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காவின் இனவழிப்பு யுத்தம் தீவிரமடைந்தபோது, பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாலாண்ணா தவறாது பங்கெடுத்தார். யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும்வகையில் அமைந்த பதாகைகளைத் தாங்கியவாறு வெளித்தரப்பினருக்கு விளக்கினார். தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டநிலையில், மே 17ம் நாள் விடுதலைப்புலிகள் ஆயுத மௌனிப்பினை மேறகொண்டனர். ஏற்பட்ட பேரிழப்புகளை எண்ணிக் கவலையுற்ற பாலாண்ணா, தாயக விடுதலையை முன்னிறுத்திய அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கென, சில தேசியச் செயற்பாட்டார்களுடன் இணைந்து விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சியை பிரித்தானியாவில் பதிவு செய்தார். முன்னணியின் சின்னமான புலி இலச்சினையுடன் பிரித்தானியத் தேர்தல்களில் பங்கேற்கக்கூடிய அரசியற் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட அக்கட்சியின் தலைவராக பாலண்ணா அதன் செயற்குழுவினால் தெரிவு செய்யப்பட்டார். இக்கட்சியானது சில அரசியல் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் புலி இலச்சினையானது பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற போலிப் பரப்புரைகளையும் முறியடித்தார்.

அலைந்துழல்வுத் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் உள்ளவர்களோடு பாலாண்ணா பழகி வந்தார். அவர்களில் எல்லோரும் பாலாண்ணாவை ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறமுடியாது. எப்போதுமே நகைச்சுவையாகப் பேசுவது அவரது வழக்கம். ஆனால் அவர் கதைப்பதை மற்றையவர்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டு அவர்மீது கோபப்படுவதுமுண்டு. ஒருவர் மீது தவறுகாணும்போது தயவு தாட்சண்யம் பாராது நெற்றிக்கு நேரே விமர்சிப்பது பாலாண்ணாவின் இயல்பு. இதனால் அவருக்கு வேண்டாதவர்கள் என்றொரு தொகுதியினரும் இருந்தார்கள். இருப்பினும் பாலாண்ணாவின் நேர்மையிலும், தேசியப்பற்றிலும் யாருமே குறைகூற முடியாதவாறு அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

ஒரு தனிமனித இயக்கமாக தாயகமக்களின் நல்வாழ்வுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி ஒய்வின்றி உழைத்த பாலாண்ணா நிரந்தர ஒய்வினைப் பெற்றுவிட்டார். அவரது இழப்பினால் துயருறும் அன்பு மனைவி இராசமணி, பிள்ளைகள் உமாசங்கர், ரவிசங்கர், கௌரிசங்கர், குடும்பத்தினருக்கும் அவரது எண்ணற்ற நண்பர்களுக்கும் ஒரு பேப்பர் குழுமத்தின் சார்பில் எமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தாயகவிடுதலைக்காக அவர் மேற்கொண்ட பணிகளைத் தொடருவதே நாம் அவருக்குச் செய்யும் இறுதிவணக்கமாக அமையும்.