புலிகளாக உருவாதல்…

49

தமிழினப்படுகொலையையும், புலிகளது மௌனிப்பையும் குழப்பியடித்துச் குழைசோறாக்கும் வழக்கம் பதினோராவது ஆண்டிலும் தொடர்கிறது. செய்வது வேறுயாருமல்ல எங்களுடைய ஈழத்தமிழ் “உணர்ச்சிப்பிழம்புகள்” தான்.

தமிழினஅழிப்பும் (Genocide) உம், இனச்சுத்திகரிப்பும் (Ethnic cleansing) உம் இலங்கையில் ஆரம்பித்து 100 ஆண்டுகளாகப்போகிறது. ஆ…வென்று வாயைப்பிளக்காமல் வரலாறுகளைத் தேடுங்கள்.
தமிழினஅழிப்பு (Genocide) உக்கிரமாக நடைபெற ஆரம்பித்தது ஆங்கிலேயர் சிங்களரிடம் நாட்டைக்கொடுத்த பிறகுதான். ஆனால் அது எப்போதோ ஆரம்பித்துவிட்டது. அது ஆங்கிலேயரிடமிருந்து சிங்களவருக்கு கைமாறியபிறகு சிங்களவர்கள் முழுமூச்சாக இயங்குகிறார்கள், அவ்வளவுதான்

தந்தைசெல்வா மேற்கொண்ட பலவிதப் போராட்டங்களும் பலனளிக்காது போகவே; அதன்பிறகுதான் ஆயுதப்போராட்டத்திற்கான நியாயப்பாடு தோன்றியது. அதன்பின் உருவான பல இயக்கங்கள் போராட ஆரம்பித்ததற்கான காரணங்களை மறந்து திசைமாறிப்போக; தமிழீழ விடுதலைப்புலிகள் இம்மியளவும் இலட்சிய உறுதி தளராது போராடினார்கள்.

இன அழிப்பிற்கும் , இனச்சுத்திகரிப்பிற்குமெதிராக தகுந்த முறையில் போராட்டத்தை உந்தித்தள்ளியது பிரபாகரன் தலையிலான புலிகளே. அவர்கள் 2009 இல் மௌனித்தார்களே தவிர, கருத்துருவாக்கத்திலும் போராடும் நெறியிலும் துளியளவு கூடத் தோற்றதாக வரலாறு இல்லை.

நாடுதழுவிய/இனம்தழுவிய தோல்வியென்பது யாதெனில் ; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இறைமையை அடகுவைத்துத் தப்பிக்கொள்ளுதலே ஆகும். இறுதிமூச்சுவரை விட்டுக்கொடுப்பின்றி போராடி உயிர்துறப்பது, தோல்வியெனப் பொருள்படும் என்று எந்த “ஞானசூனியப்” பள்ளியில் இவர்கள் பாடம் படித்தார்களோ தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இவர்களது வாதத்தின்படி டக்ளசும், கருணாவும், சம்பந்தரும், வரதராசப்பெருமாளுமே இன்றைய வெற்றியாளர்கள்.

உண்மைதான்…; விடுதலைப்புலிகள் தமது உயிரைக்காப்பாற்றிக்கொண்டு எதிரியின் காலில் விழுவதில் தோல்வியடைந்துவிட்டார்கள். ஆனால் இறைமையை அடகுவைக்காது போராடிய அந்த வீரத்தில் அவர்கள் 2009 இல் அடைந்தது தமிழினத்தின் மாண்பைப் பறைசாற்றும் வெற்றி. தங்களது இறுதிமூச்சுவரை தமிழின அழிப்பிற்கெதிராகவும் இனச்சுத்திகரிப்பிற்கெதிராகவும் புலிகள் ஆற்றிய எதிர்வினை; நமக்கொரு வரலாற்றுப்பாடம்.

புலிகளது பண்பை நாம் முழுமையாகக் கற்றுக்கொள்ளாதவரை இனஅழிப்பையும் இனச்சுத்திகரிப்பையும் எம்மால் தடுக்கவியலாது. ஆனால் புலிகள் தாம் எந்தக் குறிக்கோளுக்காகப் போராட ஆரம்பித்தார்களோ, அந்தக் குறிக்கோளிலிருந்து சிறிதும் பின்வாங்காமல் வெற்றியைச் சூடியபடியே மௌனித்தார்கள்
என்பதை விடுத்து, தோல்வி மனநிலையோடு இனஅழிப்பை எதிர்கொள்ள முயன்றால் அது நம்மைப் படுகுழியில் வீழ்த்தும்….!

உயிரைக் காப்பாற்றிக்கொள்வதல்ல வெற்றி,
உறுதியுடன் போராடிவீழ்வதுவே வெற்றி….!!!

LeadingYourTeamToSuccess

-தேவன்