இது கூட்டமைப்பாருக்கு மட்டுமான விமர்சனமல்ல. கூட்டமைப்பாரின் அரசியல் வகிபாகமான, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் நிலையை அடைய நினைக்கும் அனைத்துத் தரப்புக்குமானது. கூட்டமைப்பாரின் தவறுகளில் இருந்து அவர்கள் பாடங்கற்றுக்கொண்டு அந்த விடயங்களை நிறைவேற்றத் தவறுவார்களாயின், ஈழத் தீவில் தமிழர்கள் என்றோர் இனம் வாழ்ந்தமைக்கான சான்றுகளே இல்லாமல் போகும்.
2009 ஆம் ஆண்டில் போர் மௌனிப்பிற்குப் பின்னர் தமிழ் மக்கள் என்றுமில்லாத வகையில் பாரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருந்தனர். இனி இவர்களால் மீண்டெழவே முடியாது என்றளவுக்கு அடித்துத் துவைத்து கந்தல்களாக்கி நலன்புரி நிலையங்களில் அடைத்தது பௌத்த பெரும்பான்மை அரசு. எனவே துரிதகதியில் பொருளாதார அர்த்தத்தில் மீண்டெழ வேண்டிய தேவை தமிழர்க்கு இருந்தது. இந்தப் பொருளாதார மீளெழுச்சிக்கு, தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்தான் கைகொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மக்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்வதென்பது, வெறுமனே பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை ஆசனங்களைப் பெறுவது மட்டுமல்ல. அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல், பண்பாட்டு வழிகளில் மக்களை வழிநடத்திச் செல்வதுதான். அதற்கான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுதான். தான் பிரதிநிதித்துவம் செய்யும் இனம் வீழ்ந்துவிடாமல் தாங்கிச் செல்வதுதான். இதனை முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளிடம் வகுப்புக்குச் சென்று படிக்க வேண்டும். ஆனால் இந்தப் பொறுப்பை இற்றை வரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உணரவே இல்லை. வடக்கில் நிறுவப்பட்டிருக்கும் மூன்று பிரதான ஆடைத் தொழிற்சாலைகளும், இராணுவ பண்ணைகளும் வழங்கியளவு தொழில்வாய்ப்பைக்கூட மக்கள் பிரதிநிதிகளால் செய்யமுடியவில்லை. தான்தான் சொத்துச் சேர்ப்பதற்கு காட்டிய ஆர்வத்தைத் தமிழ் தேச பொருளாதார விருத்திக்கு செலவிட்டிருந்தால், இந்தச் சமூகம் கூட்டாக முன்னேறியிருக்கும். தொழில்வாய்ப்பென்றால் அரச வேலைகளைத் தமிழ் இளையோருக்குப் பெற்றுக்கொடுப்பதுதான் என்றில்லை. மாற்றான – நல் வருமானமுள்ள தொழில்துறைகளை உருவாக்கிக்கொடுப்பதும் புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும். புதுக்குடியிருப்பில் தனிநபர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள பால்பதனிடும் நிலையத்தை உதாரணமாகப் பார்க்க.
இவ்வாறு புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், வழிப்படுத்தவும் புலம்பெயர்தமிழர்களும், தொண்டு நிறுவனங்களும், தமிழ் இளையவர்களும் தயாராக இருந்தனர். அரும்பாடுபட்ட நண்பர்களைக் கூட நானறிவேன். இந்தச் செயற்றிட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நெறிமுறையொன்றுக்குள் இல்லாமையால், முழுமையான வெற்றியை அடையமுடியவில்லை. அரசியல் பொறுப்புக்கூறலுடன் கூடிய முதலமைச்சர் நிதியம் மாதிரியான பொறிமுறையொன்றினால் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை ஒரு குடையின் கொண்டு வரவேண்டும். கிராமங்களுக்கு – தொழில் முயற்சியாளர்களுக்குப் பொருத்தமான முயற்சியாண்மைகள் திட்டமுன்வரைவுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு வடக்கு, கிழக்கில் ஒரு பெரிய அணியே தேவை. அதனை செய்ய முடியாது, தெற்கு விடாது என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரைக்கும் சொல்லப்படும் நொண்டிச்சாட்டுகளே. கடந்த ஐந்து வருடங்களுக்குள் அதற்கான வாய்ப்பு காணப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாகக் கூட்டமைப்பார் நம்பும் ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட இலங்கையின் நீதித்துறையையே சவாலுக்குட்படுத்த முடியுமாயின், ”எக்கிய ராச்சியவின்” ஒரு பிராந்தியமான வட, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அவரிடம் அனுமதி பெற பெரியளவில் மினக்கெடத் தேவையில்லை. முயற்சித்திருந்தால் முடிந்திருக்கக்கூடிய காரியங்கள் அவை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மாகாண சபையைக் கொண்டும் கூட அதனை அர்த்தமுள்ள பக்கமாய் நகர்த்த முடியாதிருந்தது. இனப்பெருமதியறியாத ஆளுமைக் குறைபாடுடையவர்களால் அதுவும் குழிபறிப்புக் கூடாராமாகவே மாற்றப்பட்டது.
வடக்கு, கிழக்கு பாகங்களில் அதிகளவு நிலப் பகுதிகளை இராணுவத்திடமிருந்து கூட்டமைப்பார் விடுவித்ததாக ஒரு புள்ளிவிபரப் பட்டியல் சமூக வலைதளங்களில் உலாவுகின்றது. இந்தப் புள்ளிவிபரத்தைத் தயாரித்தவர்கள் வலிகாமம் வடக்கு மக்கள், 24 இற்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டு அங்கிருந்து நடத்திய ஜனநாயக வழிப் போராட்டங்களையெல்லாம் மறந்துவிட்டனர். பரப்புரை சுதியில் மறைத்துவிட்டனர். 2010 ஆம் ஆண்டிலிருந்து அம்மக்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தியதும், மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதும் ஊரறிந்த செய்திகள். இறுதியாக கேப்பாப்புலவில்கூட மக்கள் போராடியே தம் நிலத்தைப் பெற்றுக்கொண்டார்கள். தம் ஊர் திரும்பலுக்காக – நில மீட்புக்காக மக்கள் ஜனநாயகமற்ற சூழலிலும் போராடினார்கள். ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாக கூட்டமைப்பார் சொன்ன மைத்திரியுகத்திலும் போராடினார்கள். இந்தப் போராட்டங்களின் விளைவாகவே காணிகள் விடுவிக்கப்பட்டன. சம நேரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வவுனியா சைவப் பிரகாச வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில், வவுனியா வடக்கில் உள்ள தமிழ் கிராமங்களான கச்சல்மகிழங்குளம், ஊஞ்சால் கட்டியின் தெற்குப் பகுதிகளில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்க கூட்டமைப்பார் மேடையேறியதை எந்தப் புள்ளிவிபரங்களிலும் காண முடிவதில்லை. இவ்வாறு எத்தனை ஏக்கர் காணிகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டன என்ற புள்ளிவிபரங்களும் இல்லை.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்களுடன் நிலம், பண்பாட்டு மரபுரிமைகள் சார்ந்த பிரச்சினைகளில் அதிகளவில் தொல்லியல், மகாவலி அபிவிருத்தி திணைக்களங்கள் தொடர்புபட்டிருப்பதை செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது. இந்த இரு திணைக்களங்களும் பௌத்த பெரும்பான்மைவாத சிந்தனையின் செயற்பாட்டு வடிவங்களாத் தொழிற்படுபவை. தொல்லயல் திணைக்களத்தின் பணி என்னவென்பதும், மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் பணி என்னவென்பதும் நாமறியததல்ல. இரண்டும் ஜனாதிபதியின் நேரடி கவனிப்பின் கீழ் வருபவை. கூட்டமைப்பாரின் ஆசியுடன் கொண்டு வரப்பட்டதாக ஊரே நம்பிய ஜனாதிபதியிடம் கலந்துபேசி இந்தத் திணைக்களங்களின் சட்டதிட்டங்களில், நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்திருக்கலாம். பிறந்த நாள் விழாக்களுக்கு எதேச்சையாக வந்த எளிமையான ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையாவது முன்வைத்திருக்கலாம். திணைக்களங்களுடனான பிரச்சினைக்கு நீதிமன்றத்தில் தீர்வு காணலாம் என்றார்கள். இலங்கையின் நீதிமன்ற நிலைமைகளை 1956 ஆம் ஆண்டிலிருந்து மிருசுவில் படுகொலையாளி விடுவிக்கப்பட்டது வரைக்கும் அறிந்துவைத்திருக்கிறோம். கட்டற்ற அதிகாரமுடைய ஜனாதிபதிகள் ஆளும் இறைமையுடைய நாட்டில் வாழ்கிறோம் என்பதைத் தமிழ் தேசிய கூட்டமைப்பார் ஒருபோதும் உணர்வதில்லை. ’நம்பினோம், ஏமார்ந்தோம்’ என்ற வாய்ப்பாட்டைச் சொல்லி எல்லாவற்றையும் சமாளித்துவிடுகின்றனர்.
சரி, வடக்கு, கிழக்கு முழுவதும் தலைவிரித்தாடும் வறுமையை போக்க ஏதாவது செய்தார்களா? இன்றும் நானறியும் கிராமங்களில் மக்கள் பசியோடிருக்கின்றனர். வற்றுத் தண்ணீரில் கிடக்கும் மீனை தடவிப் பிடித்து அவித்து உண்டு பசியாறுபவர்கள் இருக்கின்றனர். வயல்களில் தவறவிடப்பட்ட நெல்லை எலிகள், பறவைகள் பொறுக்கி சேமித்திருக்கும். அதைப் பொறுக்கிவந்து சமைத்துப் பசிபோக்குபவர்கள் வாழ்கின்றனர். எல்லாம் ஏன் பிச்சையெடுப்பதை ஒரு தொழிலாகவே கொண்ட கிராமங்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன. இரக்க குணத்தின் பாற்பட்டாவது இந்த அரசியல்வாதிகள் இந்த மக்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டுமல்லவா?..இத்தனைக்கும் இந்த மக்கள் ஒரு காலத்தில் தமிழ் தேச விடுதலைலப் பயணத்திற்குத் தம் பிள்ளைகளை ஈந்தவர்கள்தான். அவர்களையே கைவிட்டுப் பதினொரு வருடங்கள் செழிப்பாக வாழ்ந்துவிட்டனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள்.
இவ்வளவு விடயங்களையும் கவனிக்காதவர்கள், கல்வி, சுற்றுச்சூழல், நுண்கடன் பிரச்சினைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை என்பதை அடுக்குவது தேவையற்றது. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவான் என எதிர்பார்ப்பது பெருமுட்டாள்தனம்.
எனவேதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்.