தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறைந்த பட்சம் எங்களுக்கு நேர்மையாக இருந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். அரசியல் அரங்கில் என்ன நடக்கின்றது என்ற உண்மையை எங்களுக்கு சொல்லி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன் . ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பையாவது பூர்த்தி செய்ய கூட தமிழ் கூட்டமைப்பு தயாராக இருக்கவில்லை என்பது மிக துயரமானது
இந்த நிலையில் ஒரு சாதாரண வாக்காளனாக என்னை ஏமாற்றியவர்களுக்கு இந்த தடவை வாக்களிக்க நான் விரும்பவில்லை
எங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் கடந்த 4 ஆண்டுகளில் தீர்வு கிடைத்து இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்து இருக்கவில்லை.ஆனால் எங்களுடைய பிரதிநிதிகள் குறைந்த பட்சம் முயற்சித்து இருக்க வேண்டும் என விரும்பி இருந்தேன்
குறிப்பாக நிலைத்திருக்கும் அபிவிருத்தி , விவசாயம் , கடற்தொழில் , கைத்தொழில் விலங்கு வேளாண்மை, உட்கட்டமைப்பு , பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , கல்வி என ஒரு தேசத்தின் அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய எந்த விடயங்களிலும் அக்கறை இல்லாதவர்கள் என்னுடைய பிரதிநிதிகளாக இருக்க வேண்டியதில்லை என நான் நம்புகிறேன்.
தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்ன மிக மிக அடிப்படை விடயங்களை கூட செய்ய முயற்சிக்காதவர்களுக்கு மீண்டும் வாக்களித்து என்னை ஏமாற்றி கொள்ள வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன்.
பாராளமன்றத்தில் பகிரப்படாத இறைமையின் அடிப்படையிலான தீர்வை ஏற்று கொண்ட எனது பிரதிகள் வடக்கில் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் தீர்வு என சொல்லுவதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை
ஜெனீவா அறிக்கையில் தாம் செய்திருப்பது ஒரு தரவு சேகரிப்பு மட்டுமே, குற்றங்கள் நிகழ்ந்துள்ள வகைமுறை பற்றியே தங்களால் ஆராய முடிந்ததென்று ஐ. நா மனித உரிமை பேரவை தனது ஜெனீவா அறிக்கையில் சொல்லி இருந்த விடயங்களை மறைத்து சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என என் பிரதிநிதிகள் பொய் சொல்லி ஏமாற்றியதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை
சட்டவிரோத விகாரைகள் , சிங்கள குடியேற்றங்கள் , வகை தொகையற்ற காணி அபகரிப்புகள் என நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் விரோத கொடுமைகளுக்கு துணை போனவர்களுக்கு வாக்களிக்க நான் தயாராக இல்லை
வடக்கில் ஒரு கதையும் தெற்கில் இன்னுமொரு கதையும் பேசும் ஏமாற்று பேர்வழிகள் என் பிரதிநிதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சொந்த உறவுகளை பறி கொடுத்து விட்டு ஆயிரக்கணக்கான நாட்களாக வீதியில் நிற்கும் காணாமல் போனோர் உறவுகளை கொச்சைப்படுத்தி எதற்கும் உதவாத காணாமல் போனோர் அலுவலகத்திற்கு துணை போன எங்கள் பிரதிநிதிகளை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது
எண்ணற்ற வழக்குகளில் தமிழர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதித்துறையால் ஏமாற்றப்பட எந்த கூச்சமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையில் அரசாங்க தலையீடு இல்லை என இலங்கை அரசாங்கத்திற்கு துணை போனவர்கள் என்னுடைய பிரதிநிதிகளாக இருக்க முடியாது
இடைக்கால அறிக்கையில் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இருப்பதாக பொய் பேசிய பிரதிநிதிகளுக்கு மீண்டும் வாக்களிக்க விரும்பவில்லை
இடைக்கால அறிக்கையில் காணி அதிகாரம் , ஆளுநர் அதிகாரம், தேசிய கொள்கை , மாகாண அதிகார நிரல் என எந்த விடயங்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் இல்லாத போது தெற்கில் பேரம் பேசி இணக்கப்பாடு கண்டோம் என பொய் பேசும் பிரதிநிகளுக்கு வாக்களிக்க தயராகவில்லை
அரசியல் கைதிகளை விடுவிக்க தங்களிடம் திறப்பு இல்லை பாதிக்கப்பட்ட மக்களிடம் என்னுடைய பிரதிநிதி எகத்தாளம் பேச கூடாது என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது
என்னுடைய பிரதிநிதி இலங்கை சுதந்திர தினத்தில் பங்குபெற்றி எங்களுக்கு தேசிய உணர்வு இருக்க வேண்டும் என பாடம் நடத்த கூடாது என நான் நினைக்கிறன் .
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களை சிறுபான்மையின காவலனாக சித்தரித்து 2005 ஜனாதிபதி தேர்தலில் சமஸ்டி தீர்வை முன்வைத்து போட்டியிட்டார் என சொன்ன பொய்களை ரசிக்க முடியவில்லை
இதுமட்டுமில்லாது என்னுடைய பிள்ளைகளின் காலத்தில் சுகிர்தன் , சயந்தன் ,ஆர்னோல்ட் , தெல்லியூர் ஹரிகரன், ஆலங்குளம் கஜன் , ரஜீவன் ஜெயச்சந்தரமூர்த்தி என நீளும் சுய புத்தியில்லாத சுயநல கூட்டம் மக்கள் பிரதிநிதிகளாக உருவாகுவது எங்கள் இனத்தின் அவமானமாக கருதுகிறேன்
இந்நிலையில் தமிழ் கூட்டமைப்புக்கு என் மனசாட்சிக்கு விரோதமாக வாக்களிக்க நான் தயாரில்லை