தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் குகதாசனுக்கு?

186

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக திருகோணமலை குகதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களை வென்றிருந்தது. இந்நிலையில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசம் கிடைத்திருந்தது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா 20 ஆயிரத்து 292 விருப்பு வாக்குகளைப் பெற்று கட்சி சார்பில் 6வது இடத்தைப் பெற்றிருந்தார். யாழ் தேர்தல் மாவட்டத்தில் 3 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்த நிலையில் மாவை சேனாதிராசா இம்முறை பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் மாவை சேனாதிராசா விளங்கி வருவதால் தேசியப் பட்டியல் நியமனத்தின் ஊடாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பினை பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினை இழந்திருந்த குகதாசன் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.