“நல்லிணக்கம்” மற்றும் “நல்லாட்சி”

2186

கடந்த ஒரு பேப்பரில் இப்பத்தியில் எழுதப்பட்டவை விளக்கமாக எழுதப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இக்கட்டுரையாளரிடம் தெரிவிக்கப்பட்டன. பல விடயஙக்ளை எழுத முற்பட்டு  இடப்பற்றாக்குறையினால் சிலவற்றை சுருக்கமாக எழுதியதால் இவ்வாறு நேர்ந்தது. இம்முறை  கடந்தமுறை இப்பத்தியில் தெரிவித்த “இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற ஒரு விடயத்தை மாத்திரம் விபரித்துள்ளேன்.

பல்லினமக்கள் வாழும் நாடுகளில் இனங்களுக்கிடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் களைந்து, அவற்றுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது உள்நாட்டில் அமைதியையும், சுமூகநிலையையும் நிலைநாட்டுவதற்கு அவசியமானதாக அமைகிறது.  சிரமமான பணியாக அமையும் இத்தகைய முற்போக்கான செயற்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்குபவர்கள், மதம் அல்லது இனம் சார்ந்த அடிப்படைவாதிகளாகவும், கடும்கோட்பாளர்களாகவும் கருதப்படுவார்கள். இவ்விடயத்தில் விதிவிலக்குகள் இருக்க முடியாது. ஆகவே இலங்கைத்தீவில் நடைபெறும் நல்லிணக்க முயற்சிகள் மட்டும் ஏன் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது  எனபதற்கான விளக்கமாக இப்பத்தி அமைகிறது.

இலங்கைத்தீவில் நடைபெறும் நல்லிணக்க முயற்சிகளையிட்டு சிலாகிப்பதற்கு முன்னர், இதற்கான புறச்சூழலை அறிந்து கொள்வது அவசியமாகிறது. சிறிலங்காவின் போர் முயற்சிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய சர்வதேசநாடுகள், குறிப்பாக மேற்கு நாடுகள், 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைந்த பினனர், தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. இதனை யுத்தம் முடியும்வரை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அரசாங்கத்தை ஏமாற்றிவந்ததாகவும், அதன்பின்னர் அவர்கள் உண்மை நிலையை புரிந்து விழித்துக் கொண்டதாகவும் எடுக்க முடியாது. மாறாக சிறிலங்கா அரசாங்கத்தின் மூலம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியாக அழிப்பது மேற்குலகின் “தாராண்மைவாத சமாதான” முயற்சிகளின் நிகழ்ச்சித்திட்டத்தில் அடங்கியிருந்தது.

யுத்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் அத்தரப்பபை சீரமைக்க வேண்டிய அவசியம் மேற்குலகத்திற்கு ஏற்பட்டது. அம்முயற்சிக்கு ஒத்துழைக்க மறுக்கும் மகிந்த அரசு சர்வதேச அரங்கில் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகிவருகிறது. சிறிலங்கா அரசாங்கம் புரிந்ததாக கருதப்படும் போர்க்குற்றங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்படாமை, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிட சர்வதேச செஞ்சிலுவை சங்கப்பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்காமை போன்றவை பொதுவாக சிறிலங்கா அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் குற்றசாடடுகள். இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வைகையில் சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. அண்மையில் சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்டிருக்கும் “கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க” ஆணைக்குழுவின் அறிக்கை இத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதாக அமையவில்லை என்பதே மனிதவுரிமை அமைப்புகளின் கருத்தாகும்.

இவ்வாறு மேற்கு நாடுகள் சிறிலங்கா அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தாலும் அதன்மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. சிறிலங்கா அரசினை ஒரு இனப்படுகொலை புரியும் அரசாகவோ, ஆகக்குறைந்தது ஒரு முரட்டு அரசாகவோ (rough state)  அவை கருதவில்லை. ஆனால் அங்கு நல்லாட்சி (good governance)  நடைபெறவில்லை என்பதனை மாத்திரம் மேற்குநாட்டுத் தலைவர்களும் அமைப்புகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவில் மேற்கு நாடுகள் குறிப்பிடும், “நல்லாட்சி” என்பது மைய அரசு பல்வேறு தரப்புகளிடையே பேணும் உறவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் – வர்தகத்துறைக்கும், மக்களுக்கும் – அரசாங்கத்திற்கும், அரசாங்கத்திற்கும்- தொண்டு நிறுவனங்களிற்;கும், பாராளுமன்றத்திற்கும் – நாட்டின் அதிபருக்கும், நாட்டுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களிற்கும் ஆகிய தரப்புகிடையான உறவுகள் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

இன்னொருபுறத்தில் மேற்குநாடுகளின் வர்த்தக, மற்றும் பிராந்திய மூலோபாயம் தொடர்பான நலன்களுக்கு இவ்வாறன நட்புரீதியான ஆட்சியமைப்பு அவசியமாகிறது. இவ்விடயத்தில் ஒத்துழைக்க மறுக்கிற இடங்களில் ஆட்சி மாற்றம் வலிந்து ஏற்படுத்தப்படுகிறது. மாற்றத்தை ஏற்படுத்துவதில் பிரயோகிக்கப்படும் அணுகுமுறைகளில் வேறுபாடுகள் காணப்படினும் மூலோபாயம் ஒன்றாகவே அமைந்துள்ளமையை நாம் அரபு நாடுகளின் அண்மைய விவகாரங்களில் அவதானிக்கலாம்.

சிறிலங்காவில் தாம் விரும்பும் “நல்லாட்சியை” ஏற்படுத்துவதற்கு அங்கு காணப்படும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது அவசியமாகும் என்பதனை இத்தரப்பினர் கண்டறிந்துள்ளனர். சிங்கள – தமிழ்  இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்பபதற்கு அரசியல் வழிவகைகளுக்கு அப்பால், அவர்களுக்கிடையில் பரஸ்பரம் உறவுகளை வளர்ப்பதன் மூலம் தீர்த்து வைக்க முடியும் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.  இத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கொழும்பை தளமாகக் கொண்ட சிங்கள மேட்டுக்குடியினர், அறிவுசீவிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். கொழும்பில் செயற்படும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள், சமாதானத்தை உருவாக்குதலில் பணியாற்றும் சர்வதேச அரசுசாரா நிறுவனங்களில் இவர்களது செல்வாக்கு நிலவுவதும் இத்தகைய தீர்மானத்திற்கு வரக்காரணமாக அமைகிறது.

யுத்தத்தின் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்காவில் வர்த்தக முதலீடுகளைச் செய்யவதற்கு முற்படுவார்கள். அவர்கள் மூலமாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் கடும்போக்குடைய புலம்பெயர் தமிழரமைப்புகளின் “பிரிவினைவாத” கோரிக்கைகளை முறியடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மேற்கத்தைய சக்திகளிடமிருந்தது. ஆனால் அதற்கான சூழலை சிறிலங்கா அரசும் ஏற்படுத்தவில்லை, பெரும்பாலான புலம் பெயர் தமிழர்களும் அம்முயற்சிக்கு ஆதரவு வழங்கவில்லை.

மேற்கு நாட்டு அரசுகளின் நிதியுதவியில் இயங்கும் One Text Intiative, International Alert மற்றும் Royal Commonwealth Society  போன்ற சர்வதேச அமைப்புகள் தமது முயற்சிகளில் தமிழ் அலைந்துழல்வு மக்களையும் ஈடுபடுத்த முனைகின்றன. இரண்டு இனங்களைச் சேர்ந்த இளைவர்களை, குறிப்பாக அரசியலறிவு குறைந்தவர்களை சிறிலங்காவிற்கு அனுப்பி அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க வைப்பதும், அங்கிருந்து இளம் (40 வயதிற்கு குறைந்த) பாராளுமன்ற உறுப்பினர்களை இங்கு அழைத்து வந்து தமிழ் மக்களைச் சந்திக்க வைப்பதும் இத்திட்டத்தின் ஒருபகுதியாக நடந்தேறுகிறது.
இம்முயற்சிக்கு சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ்க்குழுக்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியில் தங்கியிருக்கும் முகவர் அமைப்புகளான தமிழ் தகவல் நடுவம் (TIC) போன்றவை, சிறிலங்காவில் முதலீடுகளை ஏற்படுத்தவிரும்பும் வர்த்தகர்களும் இம்முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இங்கு உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதைக் காட்டிலும் நல்லிணக்கம் ஏற்படுகின்றது என்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டப்படுகிறது என்பது குறி;ப்பிடத்தக்கது. மேற்குலக சக்திகளின் இம்முயற்சிக்கு (இந்த ஒரேயொரு முயற்சிக்கு மாத்திரம்) சிறிலங்கா அரசாங்கம் தனது முழு ஆதரவினையும் வழங்கிவருகிறது. தமிழ் – சிங்கள இனத்தவர்களை சிறிலங்கா நாட்டினத்தைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களை “சிறிலங்கன்” அடையாளத்தினுள் உள்ளடக்குவதன் மூலம் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற அடிப்படையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இலங்கைத்தீவில் உள்ள தேசிய இனங்கள் ஒரு பொதுவான இன அடையாளத்தில் ஒன்றுபட விரும்பினால் அது அவர்களது விரும்பின்பாற்பட்டது. ஆனால் தமிழனத்தை வெற்றிக் கொண்டுவிட்டதாக எண்ணி அவர்களது இன அடையாளத்தை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அவர்களை ஒரு பொது அடையாளத்தில் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளாக கருதமுடியாது. ஆகவே தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அடிப்படைகளான தாயகம்-தேசியம்-தன்னாட்சியுரிமை ஆகியவற்றை மறுதலிக்கும் இவ்விடயத்தில் உள்ள போராபத்தினை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் வெளிவந்த நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான அறிக்கை பற்றிய தனது கருத்தினை எழுதிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இருக்கும் சுரேன் இராகவன், இவ்வறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்முயற்சிகளைத் தூண்டிய, இறுதியில் வெற்றியையும் பெற்றுக் கொடுத்த ஆட்சியாளர்களின் சிங்கள – பௌத்த மனோபாவம் பற்றியோ அதன் மையசக்த்தியாக இருக்கும் பௌத்த மகாசங்கம் பற்றியோ குறிப்பிடப்படாமையை அதன் குறைபாடு எனக் குற்றம் சாட்டுகிறார். இவ்விடத்தில் உபரிச் செய்தியாக சுரேன் இராகவன் சிங்களமொழியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்ட ஒருவர் என்பதனைக் குறிப்பிடுவது பொருத்தமானதாகவிருக்கும். சுரேன் குறிப்பிடும் சிங்கள பௌத்த மனோபாவத்தை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மகாவம்ச மனோபாவம் எனக்குறிப்பிடுவார்.

சிறிலங்காவின் ஆட்சியாளர்களும், அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களான மேட்டுக்குடியினரும், மகாவம்ச மனோபாவத்திலிருந்து விடுபடும்வரை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. ஆனால் இந்த ஆளுமைகொண்ட மையத்திலிருந்து விடயங்களை அணுகாமல் அடிமட்டத்திலிருந்து மேற்செல்வதாக, இரண்டு தரப்பிலும் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாதவர்களை சந்திக்க வைப்பதனால் நல்லிணகத்தை ஏற்படுத்தி விடமுடியாது. அத்தகைய முயற்சிகள் இனவழிப்பில் ஈடுபடும் சிறிலங்கா அரசாங்கம் புரிந்த போர்க்குற்றங்களிலிருந்து அதனைத் தப்ப வைக்கும் முயற்சியாகவே கருதப்படவேண்டும்.