முள்ளிவாய்க்கால் கரையோர நினைவுகளை கடந்து…

158

தமிழ் மக்கள் தமது தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்து நகர்ந்த, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் முடிவில், பலத்த அழிவையும் இழப்பையும் சந்தித்தபோதும், அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் தேவையையும் வலியுறுத்தியதாக அதன் பின்னான பத்து ஆண்டுகளின் முடிவில் தமிழர் தேசம் நிற்கின்றது.

எதிரியை விட பல மடங்கு குறைவான சனத்தொகை, அதிலிருந்து உருவான படைப்பலம், சர்வதேச நாடுகளின் ஆதரவற்ற நிலை என்ற பின்னனியில் – உலகத்தின் உச்சமான தியாகங்களின் அடித்தளத்தில் கட்டப்பட்டதாக, பலமான போராட்டமாக கட்டி வளர்த்த போராட்டத்தின் முடிவென்பது, விமர்சனங்களுக்குஅப்பால் தமிழர் தரப்பில் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது.

ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் தியாகங்களையும் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்களின் இழப்புகளையும் சந்தித்த பின்னரும், இன்னமும் எஞ்சியவர்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களை கூட, செப்பனிடாத நிலையில், பெரும்பாலான மக்களின் வாழ்நிலை உள்ளபோதும் உரிமைக்கான போராட்டத்தின் அசைவு நின்று விடவில்லை.

அந்த வகையில்தான் 2009 இல் நிகழ்ந்த பேரழிவின் பின்னரும் தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கையை வலியுறுத்தி, சலுகை அரசியலுக்கு விலைபோகாமல் உரிமை அரசியலுக்காக, தமது வாக்குகளை வழங்கி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமது தேசிய சக்தியாக இனங்காட்டினர்.

பேரழிவின் பின்னர் மகிந்தவின் வெற்றிவாத அரசாட்சியின் நெருக்குதலின் மத்தியிலும், உரிமைக்காக குரல் எழுப்பிய தமிழ் மக்களின் தலைமை பொறுப்பை ஏற்ற தமிழர் தலைமை தனது கடப்பாடுகளை சரி செய்ததா?

தேசம் தேசியம் என்ற எண்ணக்கரு

தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக சிந்திக்கின்ற கூட்டு உணர்வு என்பது இலங்கைத் தீவிலே இரண்டு இனங்கள் சந்தோசமாக நீடித்த அமைதியுடன் வாழ்வதற்கான அடிப்படையை கொண்டது. அதுவே அதற்கான அடித்தளத்தை உருவாக்கும். எனவே அந்த நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழர் தலைமை அகத்திலும் புறத்திலும் அதற்கான சிந்தனை தளத்தில் வேலை செய்யவேண்டும். அதற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக “நாங்கள் ஒன்று”“எமக்கான அடையாளம் ஒன்று” எமக்கான கொடி ஒன்று” என்ற அடிப்படையில் “சிறிலங்கர்களாக” வாழத்தான் தமிழர் தலைமையான தமிழ்த்தேசியகூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது.

தேசம் என்பதோ தேசியம் என்ற எண்ணக்கருவோ பிரிவினைகளை (divisions) வலியுறுத்தவில்லை. மாறாக மற்றவரை சமமாக மதிக்கின்ற நினைக்கின்ற பண்பையே அது பிரதிபலிக்கின்றது. சிங்கள தேசம் என்ற அடிப்படையான சித்தாந்தம் இருக்கின்றபடியால், தமிழர் தேசம் என்ற சித்தாந்தமே தமிழர்களை இலங்கைதீவில் சுதந்திரமாக கௌரவமாக வாழவைக்கும்.

அதற்கு சமனான தீர்வை பெற்றுக் கொள்ளாத வரைக்கும், அவ்வப்போது வெடிக்கும் இனவாத வன்முறைகளுக்குள் சிறுபான்மையின சமூகங்கள் பலியாகவேண்டிய நிலையே ஏற்படும்.

தமிழர் தரப்பின் தோல்வி

மூன்று சகாப்தங்களாக நடந்தஆயுத விடுதலைப் போராட்டம், தமிழர்களை ஒரு தேசமாக, தேசியமாக வளர்ச்சியடையச் செய்திருந்தது. ஆனால் அந்த போராட்டத்தில் ஏற்பட்ட அழிவு என்பது தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் தளர்வை கொடுக்கவில்லை. அந்த போராட்டத்தின் நியாய தன்மையும், இனவழிப்புக்கான நீதியும், எமது மக்களின் போராளிகளின் உன்னதமான தியாகங்களும் தமிழர் தரப்பின் தீர்வுக்கான வாய்ப்புகளை சாதகமாகவே திறந்து விட்டிருந்தது.

ஆனால் தமிழர் தரப்பின் நியாயங்களை, மலினப்படுத்தும் நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளையே தமிழர் தரப்பு கையாண்டது. வாழ்வாதார திட்டங்களில் முன்னேற்றகளையோ, தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதிலோ கூட அக்கறை செலுத்தாமல், சிங்கள தேசத்தின் ஒருதரப்புக்கு சேவகம் செய்வதற்காக, மற்றைய தரப்புடன் முரண்பாட்டை கூர்மைப்படுத்தியது.

அத்தோடு தமிழர் தேசத்தின் நீதிக்காக பேரம் பேசப்படாமல், தனிப்பட்ட வாக்கு வங்கிகளை தக்கவைப்பதற்காக, சிறிலங்கா அரசின் அடிப்படையான வேலைத்திட்டங்களை கூட, தமது வேலைத்திட்டங்களாக பிரபலப்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலானது மிகவும் கேவலமானது.

நிழல் நிர்வாக கட்டமைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய தீர்வுக்காக போராடும் அதேவேளை, வடக்கு கிழக்கு தழுவிய நிழல் நிர்வாக கட்டமைப்பு ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் செய்திருக்க முடியும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து, ஒருமாதிரி கட்டமைப்பை ஏற்படுத்தி, அடிப்படையான கலந்துரையாடலையாவது செய்திருக்கமுடியும்.

கூட்டமைப்பின் 14 எம்பிக்களை மட்டும்கொண்டிருந்தாலே அவர்களுக்கான ஐந்து உதவியாளர்களையும் சேர்த்தால் 75 பேர் கொண்ட செயலணியாக செயற்பட்டிருக்கமுடியும்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்ற மாதிரி கட்டமைப்பு ஒன்றை புலமைசார் நெறியாளர் சார் துறை வல்லுநர்களை உள்வாங்கி, தமது ஆதரவுடன் செயற்படக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்க முடியும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மாதிரி முயற்சியாவது செய்திருக்கலாம்.

வடக்கு கிழக்கு தழுவிய கலைகலாச்சார போட்டிகள், விவசாய மீன்பிடிதொழில்சார் போட்டிகள், விளையாட்டுபோட்டிகள், கல்விசார் தொழில்சார்கண்காட்சிகள் என்பவற்றையேனும் செய்திருக்கமுடியும்.

இவற்றில் எதுவுமே செய்யவில்லை என்பது மட்டுமில்லை. இவற்றை செய்யவேண்டும் என்று சிந்திக்கின்ற தேசியம் சார் சிந்தனை கொண்ட அமைப்பாக தமிழ்த் தேசியகூட்டமைப்பு இல்லை என்பதே கவலையான விடயமாகும்.

தொடரும் உரிமை பறிப்பு

வனவள திணைக்களம் என்றும், தொன்மை பாதுகாப்பு திணைக்களம் என்றும் கறையான்களை போல இருக்கும் சிங்களத்தின் சிறு திணைக்களங்கள் மூலம், தமிழர் தேசத்தின் கட்டமைப்பே சிதைக்கப்படுகின்றது.

அதேவேளை தமிழர்கள் தமது அடையாளம் வரலாறுகளை பேணமுடியாதவாறு மறைமுகமாகவும் நேரடியாகவும் அழுத்தங்களும் கைதுகளும் நடைபெறுகின்றன. தமிழர்களுக்கான அரசியல் உரிமையை மறுக்கும் அதேநேரம் தமிழர்களின் தேசத்தில் உள்ள உள்ளாட்சி மாகாண கட்டமைப்புகளையும் சரியாக செயற்படவிடாமல் தடை ஏற்படுத்தப்படுகின்றது. சரியானவர்கள் வருவதை சிங்களத்துடன் இணைந்து தடுப்பதில் தமிழர் தரப்பின் பங்கும் இருக்கின்றது.

என்ன செய்யப்போகின்றோம்?

ஆயுதங்களை கீழே வையுங்கள், சமஷ்டி பற்றி பரிசிலீப்போம் என ஒஸ்லோவில் வாக்குறுதி வழங்கப்பட்டபோது சிங்கள தேசத்தின் வாக்குறுதிகளில் நம்பிக்கையில்லை, செயற்பாடுகள் அடிப்படையில் எதிர்காலத்தில் முடிவுகளை எடுப்போம் என விடுதலைப் புலிகள் அமைப்பு முடிவெடுத்தமை பற்றி பலரும் விமர்சித்திருந்தனர்.

ஆனால் பத்துஆண்டுகளின் முடிவில் அதுவே நிதர்சனமாகியிருப்பதை கண்கூடாககாண்கின்றோம். இப்படி பத்து ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்ற பகிரங்க பிரகடனத்தையாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் செய்யமுடியவில்லை.

எனவே தமிழர் தரப்பாக ஏமாற்றுஅரசியலை முன்னெடுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது இணக்க அரசியல் என்ற பெயரில் சிங்கள தேசத்தின் அரசியலை தமிழர்களுக்கு கொண்டுவரும் முகவராக செயற்படுகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, தமிழர்கள் தனியான தேசிய அடையாளத்தையும், தேசத்தையும் கொண்டவர்கள் என்பதை புரிந்துகொண்டு அதற்கான செயற்பாடுகளை – அரசியல் ரீதியாக மக்கள் ரீதியான நிறுவன ரீதியாக – சிறு அளவேனும் முன்னெடுப்பவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும். அத்தகைய செயற்பாடுகளுக்கான ஆதரவுபோக்கே தமிழர்களை தன்னிறைவு கொண்டவர்களாக தனித்துவமான கட்டமைப்பு கொண்டவர்களாக தனித்தேசமாக சிந்திக்க செயற்படவைக்கும்.

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டபொதுமக்களையும், ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்டமாவீரர்களையும் இழந்து நிற்கின்ற நாம் முள்ளிவாய்க்காலில் எழுப்பியது அவலக்குரல் மட்டுமல்ல, எமக்கு நீதிவேண்டும் என கடைசி நிமிடம் வரை போராடி மடிந்த மாவீரர்களின்உறுதிக்குரலும் தான்.

– அரிச்சந்திரன் –