கொரானாவும் அமெரிக்க தேர்தல் அரசியலும்

நாட்டாண்மை தீர்ப்பை மாத்தியெழுதுங்க எண்ட தமிழ்பட வசனம் மாதிரி, ரம் ஜயா என்னை எழுதவச்சுட்டாரே! தேசத்தின் குரல் பாலா அண்ணா எப்போதும் வலியுறுத்தும் விடயம், மக்களுடன் கருத்துக்களை பகிரும் போது, எண்ணிக்கைகளைப் பயன்படுத்துவதில் கவனம் அதிகம் வேண்டும். முடிந்தவரை தவிர்த்தல் நல்லது. எண்ணிக்கைகள் என்பது என்றும் மாறுபடக்கூடியவை. அதில் தவறுகள் ஏற்படும்போதே, அல்லது அது சொல்லப்பட்ட காலத்தை திரிபுபடுத்தி செய்திகள் வெளியிடப்படும் போதோ, மக்கள் எம்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை சிதைக்கப்படுவதற்கான காரணியாகிவிடும். அது பாரிய பங்கத்தை ஏற்ப்படுத்திவிடும் என்பார். இதை யாரும் ரம் ஜயாவிற்கு பாடமாகச் சொல்லிக் கொடுக்கவில்லைப் போலும். இவ்விடயத்தில் எத்தனை முறை சறுக்கி விழுந்தாலும் மனிசன் தானாகக் கூடப் பாடம் கற்றுக் கொள்ளவதாகத் தெரியவில்லை.

சரி விடயத்திற்கு வருவோம். கோவிட்-19 இலான அமெரிக்க இறப்புக்கள் 1 லட்சத்திற்கு குறைவாகவே இருக்கும் என தற்போது திருவாய்,
மலர்தருளியிருக்கிறார் ரம் ஜயா. ஜயா இப்படி பல முறை தன் கணக்கை மாற்றியிருக்கிறார். அவர் இவ்வாறு ஒரு எண்ணிக்கையை சொல்லுவதுவும், அது பின்னர் கடக்கப்பட்டதும், சற்று அதிகரித்த இன்னுமொரு எண்ணிக்கையை சொல்வதுவும், பின்னர் அதை அதிகரிப்பதுவும், எனப் பலமுறை நடந்துவிட்டது. தற்போதைய புதிய இலக்கே 1 லட்சம் இறப்புக்கள். ரம் ஜயா அந்த எண்ணிக்கையும் இந்த மே மாதத்தில் கடக்கப்பட்டுவிடும். கணக்கை இப்பவே மாத்தியெழுதுங்கையா!! அது எவ்வாறு என்றால் அதற்கான கணக்கு வருமாறு

ஏப்ரல் 4 ஆம் நாள், அமெரிக்கா 10 ஆயிரம் இறப்புக்கள் எண்ணிக்கையைக் கடந்தது. அது பின்னர் 6 நாட்களில் ஏப்ரல் 10ஆம் நாள், 20 ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்தது. பின்னர் 4 நாட்களில், ஏப்ரல் 14, 30 ஆயிரம் எண்ணிக்கை எட்டப்பட்டது. 5 நாட்களில், ஏப்ரல் 19, 40 ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்தது. பின்னர் மேலும் 4 நாட்களில், ஏப்ரல் 23, 50 ஆயிரம் எண்ணிக்கை எட்டப்பட்டது. ஏப்ரல் 29, 60 ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்தது. இதைப்பதிவிடும் மே 2ஆம் நாள், இறப்பு எண்ணிக்கை 67,500 ஆகியுள்ளது. அதாவது 4 முதல் 6 நாட்களிற்குள் 10 ஆயிரம் இறப்புகள் மேலதிகமாக பதிவாகின்றன. ஏப்ரல் மாத ஆரம்பத்தில், 5,151 இறப்புக்கள் என்ற நிலையில் இருந்து, ஏப்ரல் முடிவில் 63,856 இறப்புக்கள் என்ற நிலையை அமெரிக்கா அடைந்தது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் 58,705 கோவிட்-19 இறப்புக்களை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. அமெரிக்க இறப்புகளின் எண்ணிக்கை சற்று வீழ்ச்சியடையும் வாய்ப்புள்ள இன்றைய நிலையில், மே மாதத்தில் 31 நாட்களிற்குள் அமெரிக்கா 45 ஆயிரத்தில் இருந்து, 60 ஆயிரம் மேலதிக இறப்புக்களை பதிவு செய்யும் வாய்ப்புக்கள் உண்டு என்ற நிலையில், 1 லட்சம் இறப்புக்களை அமெரிக்கா இலகுவாக கடந்துவிடும்.

மார்ச் 29ஆம் நாள், ரம் பின்வருமாறு தெரிவித்திருந்தார், “Nothing would be worse than declaring victory before the victory is won,” அன்று அமெரிக்க நோய்த்தொற்று ஒரு லட்சத்து 30 ஆயிரமாகவும், இறப்பு 3 ஆயிரமாகவுமே இருந்தது. அப்போதே கோவிட்-19தை வென்றுவிட்ட நிலையில் இருந்த ரம், இன்று அவ்வெண்ணிக்கைகள் முறையே நோய்த்தொற்று 11,54,931 ஆகவும், இறப்புக்கள் 67,500 ஆயிரமாகவும் ஆகவும் மாறியுள்ளதை புரிந்து கொண்ட தலைமையாகவே தெரியவில்லை. மார்ச் 29 இல் உலகளாவிய நோய்த்தொற்றில் அமெரிக்கா 18 சதவீதத்தையும், இறப்புக்களில் 8.8 சதவீதத்தையும் கொண்டிருந்தது. ஆனால் இன்று மே 2இல், உலகளாவிய நோய்த்தொற்றில் அமெரிக்கா 33.28 சதவீதத்தையும், இறப்பில் 19.5 சதவீதத்தையும் கொண்டு பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருப்பது கூட, ரம் ஜயாவைப் பொறுத்தவரை வெற்றி தான் போங்கள்.

ஏப்ரல் 20ஆம் நாள், 40 ஆயிரம் இறப்புக்கள் எண்ணிக்கையை அமெரிக்கா கடந்த நிலையில், ரம் ஜயா பின்வருமாறு சொன்னார். “Now, we’re going toward 50, I’m hearing, or 60,000 people. One is too many. I always say it: One is too many. But we’re going toward 50 or 60,000 people.” ஆனால் ஏப்ரல் 23 இல், 50 ஆயிரம் எண்ணிக்கை கடந்த நிலையில், ஏப்ரல் 27இல் பின்வருமாறு மாற்றிச் சொன்னார். “probably heading to 60,000, 70,000.” ஏப்ரல் 29இல் 60 இறப்புக்ள் கடக்கப்பட்ட நிலiயில், அன்று பேசிய ரம் இறப்புக்கள் எண்ணிக்கையை 65 ஆயிரமாக கணித்து பின்வருமாறு சொன்னார். “What we did is a great tribute to this country. But if we lost—so if we lose 65,000 people—it’s so crazy to say it. It’s just so horrible. But if we lose 65,000 people, and instead of that going the other route, … But could you imagine? Look how horrible it is to lose 65…..”
இப்போது 65 ஆயிரமும் கடந்துவிட்ட நிலையில், மனிசன் தற்போது ஒரு லட்சத்திற்குள் கணக்கை முடிக்கலாம் என கனவு காண்கிறார். பாவம் ஒரு மனிசன் எத்தனை முறை தான் விழுந்தெழும்புவான். வடிவேலு சொல்வது போல் மை பொடி படு ஸ்ரோங் போங்கள்.

ஏனைய நாடுகள் போல் அமெரிக்காவில் நோய்த்தொற்று மற்றும், இறப்பு எண்ணிக்கைகள் உண்மையான எண்ணிக்கைகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதே யதார்த்தம் என்ற நிலையில், கோவிட்-19 இலான அமெரிக்க இறப்புக்கள் ஏற்கனவே 1 லட்சத்தைக் கடந்துவிட்ட நிலையில், அமெரிக்காவிலான நோய்த்தொற்றுப் பரம்பல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், நவம்பர் மாதத்திலான சனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி நாட்டை வழமைக்கு திரும்பவைக்கும் முனைப்பில், ரம் முனைவதில் பல ஆபத்துக்கள் வெளிப்படுகின்றன. நோய்த்தொற்று எண்ணிக்கை குறைவடைந்து வந்த நிலையில், மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்க, அது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் 24 ஆம் நாள், இதுவரையிலான அதிகரித்த ஒரு நாள் எண்ணிக்கையான, 38,958 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவ்வெண்ணிக்கை ஏப்ரல் 25, 35,419 ஆக வீழ்ச்சியடைந்து, பின் ஏப்ரல் 26, 26,509 ஆக வீழ்ந்து, ஏப்ரல் 27, 23,196 என்ற நிலையை அடைந்தது. இதுவே மார்ச் 31 இற்கு பின் எட்டப்பட்ட அதிகுறைந்த எண்ணிக்கை. ஆனால் ரம்பின் கட்சி ஆட்சியிலுள்ள மாநிலங்கள் வழமைக்குத் திரும்ப முனைய, ஏப்ரல் 28, நோய்தொற்று எண்ணிக்கை 25,409 என மீண்டும் அதிகரித்து, அது ஏப்ரல் 29, 28,429 என்ற எண்ணிக்கையை எட்டி, ஏப்ரல் 30, 30,829 ஆகி, மே 1 மீண்டும் 36,007 என்ற உயர்நிலையை அடைந்துள்ளது. இது ரம்பின் தொலை நோக்கற்ற, விஞ்ஞானத்தையும், அறிவியலையும், புறம்தள்ளும் தலைமைத்துவத்தின் கீழ், அமெரிக்கா பெரும் சவால் நிலைக்கு முகம் கொடுக்கப் போவதையே சுட்டி நிற்கிறது.

– Nehru