கோவிட்-19 வைரஸ் தொற்று உலகில் மூன்றில் இரண்டு சனத்தொகையை, அதாவது 500 கோடி மக்களை, ஏதோ ஒரு காலப்பகுதியில் முழுமையாக முடக்கிவிட்டமை, உலகப் பொருளாதாரத்தில் பல அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
அவற்றின் பல பக்கங்களை பார்க்கும் முயற்சியில், முதலாவதாக விமானப்பறப்புக்களையும், அதனூடான உல்லாத்துறையையும் பார்ப்போம். இன்றைய உலகம் பெரிதும் சுருங்கி விட்டமைக்கு, விமானப்பறப்புகளே காரணமாகும். நினைத்துவிட்டால் அந்த இலக்கை நோக்கிய எமது பயணத்தை, அடுத்த கணமே ஆரம்பித்துவிடும் வசதி அதனால்.
இதன் விளைவு 2000ஆம் ஆண்டில், 674 மில்லியனாக இருந்த உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை, 2010இல் 952 மில்லியனாக அதிகரித்து, 2020இல் 1460 மில்லியன்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது 2000இற்கும் 2010இற்கும் இடையில், 41 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தி, 2010இற்கும் 2020இற்கும் இடையில் 53.4 சதவீத அதிகரிப்பையும் கட்டியம் கூறியது.
கடந்த 20 ஆண்டுகளில், இரண்டு சவால்களை உல்லாசத்துறை சந்தித்தது. முதலாவது 2003 இல் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் சார்ஸின் தாக்கம். இரண்டாவது 2009இல் வெளிப்பட்ட பொருளாதார முடக்கம். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
2003 சார்ஸ் விடயத்தில், 0.4 சதவீத அதாவது 3 மில்லியன் பயணிகள் வீழ்ச்சியை அவ்வாண்டு கண்டு, பின்னர் அடுத்த ஆண்டே பெரும் உயர்ச்சியைக் கண்டது. 2009 பொருளாதார முடக்கத்தில், 4 சதவீத அதாவது 37 மில்லியன் பயணிகள் வீழ்ச்சியைக் கண்டு, அடுத்த ஆண்டே மீண்டது. ஆனால் தற்போதைய கோவிட்-19 விடயத்தில், உலகமே முடங்கிப்போயுள்ளதால், 20 முதல் 30 சதவீதம், அதாவது 290 முதல் 440 மில்லியன் பயணிகள் வீழ்ச்சி இவ்வாண்டு எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று 2000ஆம் ஆண்டில், 496 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த உல்லாத்துறை மூலமான வருவாய், 2010இல் 979 பில்லியனாக அதிகரித்து, 2020இல் 1507 பில்லியன்களாக எதிர்பார்க்கப்பட்டது. அதாவது 2000த்திற்கும் 2010இற்கும் இடையில், 97.4 சதவீத அதிகரிப்பையும், 2010இற்கும் 2020இற்கும் இடையில் 54 சதவீத அதிகரிப்பையும், அது எதிர்வு கூன்றது.
2003 சார்ஸ் வைரஸ் தொற்று விடயத்தில், அது பெரிதும் ஆசியாவிற்குள்ளேயே முடங்கிப் போனதால், அவ்வாண்டு வருவாய் வீழ்ச்சி என ஏட்டப்படவில்லை. 2009 பொருளாதார முடக்கத்தில், 5.4 சதவீத அதாவது 88 பில்லியன் டொலர்கள் வீழ்ச்சியைக் கண்டு, அடுத்த ஆண்டே மீண்டது. ஆனால் தற்போதைய கோவிட்-19 விடயத்தில் உலகமே முடங்கிப்போயுள்ளதால், 20 முதல் 30 சதவீதம், அதாவது 300 முதல் 450 பில்லியன் டொலர்கள் வீழ்ச்சி, உல்லாசத்துறையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனாலான பெரும் பாதிப்பை, ஆசிய பசுவிக் நாடுகளும், ஐரோப்பாவும், வட அமெரிக்காவும் சந்திக்கும். விமான நிறுவனங்கள், உல்லாசத்துறை வருவாயில் தங்கியிருக்கும் நாடுகள், உல்லாசத் துறையினூடான பெரும் வேலை வாய்ப்புகளில் தங்கியுள்ளவர்கள், அது சார்ந்ததுறையினர், எனப் பலதரப்பினர் அதனால் அதிகரித்த பாதிப்பை எதிர்கொள்வர். இருக்க, இந்நிலை வழமைக்குத் திரும்ப சில ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். அது கோவிட்-19 இலான உலகக் பொருளாதாரத் தாக்கத்தின் அளவில் தங்கியுள்ளது.