அமெரிக்க அதிபர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டார் ஜோ பிடென்!

65

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடென் அதிகாரப்பூர்வமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் யார் போட்டியிடப்போகிறார்கள் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் போதுமான ஆதரவுடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 77 வயதான பிடென் மற்றும் பெர்னி சான்டர்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தேவையான 1991 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று ஜோ பிடென் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் ஒபாமாவின் ஆதரவைப் பெற்றார். அதன்பின் நடந்த வாக்கெடுப்புகள் ஜோ பிடெனுக்கு சாதகமாக அமைந்ததையடுத்து அவர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நண்பர்களே, இன்றிரவு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தேவையான 1,991 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளேன். இனி, உங்கள் வாக்குகளை சம்பாதிக்க நான் ஒவ்வொரு நாளும் போராடப் போகிறேன். இதன்மூலம் இந்த தேசத்தின் ஆத்மாவை காப்பதற்கான போரில் நாம் வெற்றிபெற முடியும்” எனத் தெரிவித்துள்ளார். .

Nadarajah