(சிறப்பு கட்டுரை)
………………………………
2001ஆம் ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வடக்கு கிழக்கில் பயன்படுத்தப்படாமல் கிடந்த உதிரிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பேரூந்து தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளினால் 2004ம் ஆண்டு இலங்கை நாடாளமன்ற பொதுத் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட பேரூந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக பலம்வாய்ந்த ஒரு விடுதலை இயக்கமாக தலை நிமிர்ந்து நின்றிருந்தார்கள். இதன் காரணமாக இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டிய ஒரு நிர்பந்தமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. எனவே இதனை சர்வதேசத்தின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் ஒன்றை கொடுத்து பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டிய தேவை அப்போதைய அரசாங்கத்துக்கு இருந்தது.
இந் நிலையிலும் விடுதலைப்புலிகளும் அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தைக்கு அன்றைய சூழலில் இணக்கம் தெரிவித்து இருந்தார்கள் அதனடிப்படையில் அன்றைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியாக ஒரு அரசியல் நகர்வை மேற்கொள்வதற்கு ஒரு அரசியல் ரீதியான ஒரு அமைப்பு தேவைப்பட்டிருந்தது. இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியேயும் தமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கான அரசியல் ராஜதந்திரத்தை கையாள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. அதனை இலகுவாக கையாள்வதற்கு உருவாக்கப்பட்ட பேரூந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அந்த பேரூந்தை பயன்படுத்துவதற்கு அல்லது நகர்த்துவதற்கு தம்முடன் நீண்டகாலமாக விடுதலைப் போராட்டத்தில் பயணித்த உறுப்பினர்களையே அந்தப் பேரூந்தின் முக்கிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு தீர்மானித்து இருந்தார்கள்.
அதற்கு காரணம் அந்த காலகட்டத்திலேயே தற்போது இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை அப்பொழுதே விடுதலைப்புலிகள் முழுமையாக நம்பி இருக்கவில்லை. அதன் காரணமாகவே அவர்கள் ஏற்கனவே தங்களுக்குள் தீர்மானித்து வைத்திருந்த தமது உறுப்பினர்களையே அந்தப் பேரூந்தின் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்க வைத்திருந்தனர்.
உதாரணமாக பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர், பொறியியலாளர் என முக்கிய அங்கங்களை வகிக்கின்ற பொறுப்புகளில் அவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தார்கள். அந்தவகையிலேயே விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், சிவநாதன் கிஷோர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கனகரட்ணம் போன்றவர்களை அவர்கள் பயன்படுத்தி இருந்தார்கள். ஏனைய உதிரிகளாக தற்போது இருக்கின்ற சம்பந்தர், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் போன்றோரை பின்பகுதி ஆசனத்தில் அமர வைத்திருந்தார்கள்.
உண்மையிலேயே விடுதலைப்புலிகள் அன்றைய காலகட்டத்தில் உருவாக்கியது அன்றைய அரசியல் தேவை கருதியே தவிர நீண்டகால தேவைக்காக அந்த பேருந்தை உருவாக்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தனியொரு நிர்வாக அலகுமுறைமை ஒன்றை உருவாக்குவதே அவர்களுடைய இலக்காக இருந்தது.
ஆனால் துரதிஸ்டவசமாக பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் மீண்டும் 03ம் ஈழப் போர் ஏற்பட்டது இந்த போர் முள்ளிவாய்க்காலுடன் மௌனித்து விட்டநிலையில் . இன்று இந்த பேரூந்தை உற்பத்தி செய்த விடுதலைப்புலிகளும் இல்லை .அதைப் பயன்படுத்திய முக்கிய உறுப்பினர்களும் இல்லை. தற்போது இந்த பேருந்து பழுதடைந்து நான்கு சில்லுகளும் காற்று போய் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
ஆனால் இந்த பேருந்தை விடுதலைப்புலிகள் அங்கீகாரம் அளித்து விட்டு சென்றுவிட்டனர் என்று ஒரு போலியான கருத்தினை மக்கள் முன் வைத்து இயக்க முற்பட்டு கொண்டிருக்கின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு.
உண்மையிலேயே அனைவருக்கும் தெரியும் இறுதி யுத்தத்தின் போது அதில் பயணித்த பெரும்பாலான உதிரிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டார்கள் அங்கு தமது சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்களே தவிர முள்ளிவாய்க்காலில் அவலப்பட்ட அந்த மக்களுக்கு ஆதரவாக ஒரு சிலரைத்தவிர ஏனையவர்கள் குரல் எழுப்பவில்லை.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இரா சம்பந்தம் போன்றோர்கள் “ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் காத்திருந்ததாம் கொக்கு” என்பதைப்போல விடுதலைப்புலிகள் எப்பொழுது அழிவார்கள் தாம் எப்பொழுது அரசியல் செய்யலாம் எனக் காத்திருந்தவரே திரு சம்பந்தர் அவர்கள்.
அவர் எப்பொழுதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதை ஏற்றுக்கொண்டதில்லை. அவருக்கு எப்பொழுதும் மனதுக்குள் ஒரு கற்பனை இருந்துகொண்டிருந்தது .தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக தானே பயணிக்க வேண்டும் என்று உள்ளுக்குள் நீண்டகாலமாஆசை ஒன்று இருந்து கொண்டே இருந்தது.
அதனை இந்த இறுதி யுத்தத்தில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்த உடன்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மூடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் ஒன்றை கொடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த அடிப்படையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் போன்றோரை அந்த விடயத்தில் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களும் தங்களால் இயன்ற பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.
ஆனால் சம்பந்தரின் குள்ளநரி தனத்தினால் அது கைகூடாமல் முள்ளிவாய்க்காலுடனே விடுதலை புலிகளின் போராட்டமும் மக்களும் மண்ணோடு மண்ணாக மடிந்து போனார்கள். இந்த கொடுமையான வரலாற்றுத் துரோகத்தை என்றும் தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாது.
ஆனால் அந்த மக்கள் 2009, 2010ம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு இணைக்கப்பட்டிருந்த அந்த துரோகத்தை மக்கள் அறிந்திருக்கவில்லை. காலப்போக்கில்யே அதனை மக்கள் அறியக்கூடியதாக இருந்தது. அதுகூட எமது அரசியல் தலைமைகள் தங்களுடைய அரசியல் சுயலாபங்களுக்காக மறைத்து மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.
அவர்கள் கட்சிகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளின் போதோ அல்லது அக்கட்சியை விட்டு வெளியேறும்போதே உண்மை முகங்கள் காட்ட வெளிப்படுகின்றனர். அந்த வகையில்தான் 2010 ஆம் ஆண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு பிரிந்து வெளியில் வந்தபோது கூட்டமைப்பின் உண்மை முகம் தெரியவந்தது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அவ்வாறான கருத்தை பொய் என்றே கருதினார்கள்.
ஆனால் காலப்போக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயல்பாடானது தமிழ் மக்களுக்கு எதிரான துரோகங்களை மெல்ல மெல்ல மேற்கொள்ள தொடங்கியதன் விளைவாக மக்கள் உணர தொடங்கியுள்ளார்கள். அதனாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மெல்ல மெல்ல சிதைவடைய தொடங்கியது. 2015 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கான எந்த கொள்கை பாடும் இல்லாது நல்லாட்சி அரசாங்கத்திற்கு தங்களுடைய சுயலாபங்களுக்காக தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு சம்பந்தருடனும், சுமந்திரனுடனும் பயணிக்கத் தொடங்கினர்.
மக்களுக்கு ஒரு கருத்தையும், நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தினையும், சிங்களத் தலைமைகளும் ஒரு கருத்தையும், சர்வதேசத்திற்கு ஒரு கருத்தினையும் முன்வைத்து கபட நாடகம் ஆடினார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மிகத்தீவிரமாக அக்கறை காட்ட தொடங்கியதன் விளைவாக இவர்களின் ஜெனிவா விவகாரம் வெளிவரத் தொடங்கியது. இவர்களின் உண்மை முகம் வெளிக்கொணரப்பட்டது. இதனூடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் விழித்துக் கொண்டார்கள். வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள தேசத்தால் வழங்கப்பட்ட நிதிகள் சுருட்டப்பட்டுவிட்டன. வீதிகள் அமைப்பதாகவும், மலசலகூடங்கள் அமைத்ததாகவும், ஊடகங்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பியும் மக்களை நம்ப வைப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் தென் பகுதியில் இயங்கும் சில தமிழ் ஊடகங்கள் இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு தெளிவாகவே காட்டியுள்ளது . இதனூடாக விழித்துக்கொண்ட மக்கள் போலி தேசியம் பேசுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மெல்ல மெல்ல கிளர்ந்தெழ தொடங்கினார்கள் இதுவே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான ஒரு ஆரம்ப புள்ளியாக உருவாகி உள்ளது.
தற்பொழுது நடக்கப்போகின்ற 2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வீழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை வைத்துக் கொண்டே வருகின்ற மாகாணசபைத் தேர்தலிலும் கூட்டமைப்பின் அடுத்தகட்ட வீழ்ச்சி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும்.
……………………………………
(பிரதியாக்கம் – செல்வகுமார். ந)