தமிழர் தேச தற்சார்பு பொருளாதாரத்தில் கால் பதித்த யாழ் பல்கலை மாணவர்கள்

66

கொரோனா பரவலை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

குறித்த மாணவர்களின் புதிய முயற்சியால் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைத்ததுடன், தரிசு நிலங்களில் விவசாயம் செய்வோம் என்ற முன்னுதாரண செயற்பாட்டினையும் செய்து காட்டியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டன. இதனால் பல குடும்பங்கள் வருமானங்களை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டது.

வருமானம் இழந்த குடும்பங்களுக்கான உலர் உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளை மாணவர் ஒன்றியம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தது.

இந்நிலையில் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்வதற்கான புதிய முயற்சி ஒன்றினை எடுத்து, அந்த முயற்சியை இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாக காட்டுவதற்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் கீரிமலை பகுதியில் காணப்பட்ட 10 பரப்பு தரிசு நிலத்தினை மேம்படுத்தி அதில் விவாசாய செய்கையினை முன்னெடுத்து வந்தனர்.

அங்கு பயிரிடப்பட்ட மிளகாய், கீரை, கரட், பூசணி போன்ற மரக்கறிகளை இன்று அறுவடை செய்யப்பட்டன. இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் அனைத்தும் ஊர்காவற்துறையில் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இலங்கையில் பல தரிசு நிலங்கள் காணப்படுகின்றது அதனை இளைஞர்கள் கவனத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது எமது சிறிய வேண்டுகோள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,மகத்தான மாணவர் சக்தியான யாழ் மாணவர் ஒன்றியம் தமிழர் தேசம் முழுவதும் மக்களையும் நிலங்களையும் ஒருங்கிணைத்து தமிழ் நிலத்தை தற்சார்பான ஒரு வழிக்கு இட்டு செல்வதற்கு தேவையான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்.இதன் மூலம் தமிழர் மண்ணின் அடிப்படை தேவைகளே மக்களே பூர்த்தி செய்வதன் மூலம் இந்த மண்ணில் ஆழமாக வேரூன்றி நிலைபெறுதல் வேண்டும்.மாணவ,இளைஞர்கள் இந்த மாதிரி ஆக்கபூர்வ செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவதும் அதற்கான உற்சாகத்தையும் பொறுப்புடைமையையும் கொண்டிருப்பதை பார்க்கும் போது தமிழர் தேச எதிர்காலம் ஒளிமயமானதாக தெரிகின்றது.