உலகம் வியக்கும் விடுதலை புலிகளின் இராணுவ,ராஜதந்திர ஆற்றல்!

527

போரியல் ஆய்வு பார்வையில் கடந்த நூறாண்டுகளில் உருவான எல்லா non state military power களையும் மதிப்பீடு செய்தால், சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பலமான இராணுவ ஆற்றலை கொண்டது விடுதலை புலிகள்தான்.

உடனே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அமெரிக்காவை வீழ்த்திய வியட்நாமின் viet cong அமைப்பைவிட, சோவியத் யூனியனை வீழ்த்திய ஆப்கானின் முஜாஹிதீன்களைவிட, இன்றுவரை இஸ்ரேலுடன் மல்லுகட்டி கொண்டிருக்கும் ஹிஸ்புல்லாக்களை விட இராணுவ ஆற்றல் நிறைந்தவர்களா என்று.

இதை புரிந்துகொள்ள போரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக அடிப்படையான காரணிகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.

#போரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக அடிப்படையான காரணிகள் இரண்டுதான்.

1) படைகளின் எண்ணிக்கை (number of troops)

2) ஆயுதங்களின் நவீனதன்மை அதன் எண்ணிக்கை, அதன் சூட்டுவலு (weapons technology, quantities and fire power)

1) மேலே குறிப்பிட்ட இந்த non state அமைப்புகளுக்கான ஆளணியை வழங்குவதற்கு போதுமான மக்கள் தொகை எப்பொழுதுமே அவர்களிடம் இருந்தது. அதனால் சாதாரண MILITARY PARTICIPATION RATIO (MPR) ஐ கொண்டே எதிரிகளின் ஆளணியை விட கூடுதலான அல்லது போதுமான எண்ணிக்கையை இந்த அமைப்புகள் பெற்று கொள்ளமுடிந்தது.

ஆனால் இலங்கையின் சனத்தொகையில் சிங்கள இனம் 75%. முஸ்லீம் இனம் 9%. ஆக மொத்தம் 84%. இதற்கு எதிராக போராடிய இலங்கை தமிழர்கள் 11%.

அதாவது 84% Vs 11% அதிலும் தமிழர்களின் 11%ல் 1-2% வீதமே விடுதலை புலிகள்!

அதனால் விடுதலை புலிகளின் ஆளணியை விட இலங்கை இராணுவத்தின் ஆளணி எப்பொழுதும் பலமடங்காகவே இருக்கும்.

2) ஆளணியில் பற்றாக்குறை இருந்தால் கூட அந்த குறையை நிவர்த்தி செய்ய முக்கியமானது அதி நவீன ஆயுதங்களும், சூட்டாற்றலும் (weapons technology, quantities and fire power)

மேலே குறிப்பிட்ட இந்த non state அமைப்புகளுக்கு பின்னால் இருந்து கொண்டு, sophisticated weapons களை வழங்கி உதவி செய்தவர்களெல்லாம் உலக ஒழுங்கின் முக்கியமான state actors.

Viet Cong அடிப்படையில் வட வியட்நாம் எனும் state actor தான். இதற்கு உதவியாக நின்றவர்கள் சோவியத் யூனியனும், சீனாவும்.

முஜாஹிதீன்களுக்கு பின்னால் நின்றவர்கள் அமெரிக்கா, பாகிஸ்தான், சவூதி, சீனா.

ஹிஸ்புல்லாவுக்கு பின்னே நிற்பவர்கள் ஈரானும், சிரியாவும்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை தரமுடியும்.

ஆப்கானிஸ்தானில் போரின் ஆரம்பகாலங்களில் சோவியத் யூனியனின் கையே மேலோங்கியிருந்தது. முஜாஹிதின்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது சோவியத் யூனியனின் விமானப்படை. சோவியத் யூனியனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.

அதன் பின்னர்தான் தனது அதிநவீன Surface to Air Missile (SAM) ஆன ஸ்டிங்கரை (FIM-92 Stinger), 1986 ம் ஆண்டிலிருந்து முஜாஹிதின்களுக்கு கொடுக்க ஆரம்பித்தது. இதன் பின்னர் சோவியத் யூனியன் குறைந்தது 300 விமானங்கள், ஹெலிகாப்டர்களை இரண்டு ஆண்டுகளுக்குள் இழக்க வேண்டிவந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு பின்வாங்கியதற்கு காரணம் stinger missile இனால் ஏற்பட்ட இழப்புகளா அல்லது சோவியத் யூனியனின் மூலோபாயத்தின் அடிப்படையிலான பின்வாங்கலா (strategic level withdrawal) என இன்றுவரை போரியல் ஆய்வாளர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த உதாரணம் sophisticated weapons & fire power உம் எப்படி போரின் முடிவை தீர்மானிக்க உதவும் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

#இனி விடுதலை புலிகள்.

விடுதலை புலிகளுக்கு உலக ஒழுங்கின் எந்தவொரு State Actor உம் உதவியது இல்லை என்பது தெரிந்ததே.

80 களின் தொடக்கத்தில் இந்தியா வழங்கியது வெறும் இலகு ரக ஆயுதங்களே (SMALL ARMS LIGHT WEAPON – SALW). அவை கெரில்லா தாக்குதலுக்கு மட்டுமே பயன்படும். ஆனால் SALWஐ வைத்துகொண்டு அழித்தொழிப்பு சமர் செய்ய முடியாது (offensive war).

போராளி இயக்கங்கள் மரபு போர் செய்யும் (conventional army) ஆற்றலை பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்தியா ஆரம்பம் முதலே உறுதியாக இருந்தது. அதனால்தான் 80 களின் மத்தியில் போராளி இயக்கங்கள் Surface to Air Missile (SAM) ஐ வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டபோது, அதை வழங்க இந்தியா மறுத்தது.

(இந்த போரியல் தகவலை கொண்டே இந்தியா இலங்கையில் ஈழம் உருவாவதை விரும்பவில்லை என்பதை கணிக்கமுடியும் என்பது உபரிதகவல்)

போரியல் காரணிகள் இரண்டும் தனக்கு எதிராக இருந்தபோதும், விடுதலை புலிகள் 26 ஆண்டுகளாக தன்னந்தனியாக இலங்கையுடனும் அதற்கு உதவிய உலக ஒழுங்குடனும் சண்டையிட்டு களத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

அதனால் போரியல் ஆய்வு பார்வையுடன் அணுகினால் கடந்த நூறாண்டுகளில் மிக பலமான இராணுவ ஆற்றல் நிறைந்த non state actor விடுதலை புலிகள் அமைப்புதான்.

இதை இன்னும் துல்லியமாக தராகி சிவராம் பின்வருமாறு கூறியிருப்பார்.

“#LTTE is the most ferocious, highly sophisticated, disciplined and resiliently compact conventional fighting force in the world.”

(இதில் உள்ள ஒரு வார்த்தை கூட மிகைப்படுத்தல் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்)

விடுதலை புலிகளின் ஆற்றலை வியந்து பிரமிக்கும் அதேநேரம், அவர்களின் ராஜதந்திர/போரியல் நகர்வுகள், அதன் ஆழம், பின்னணி என்பவற்றில் இருந்து கற்றுகொள்ளவும் வேண்டும்.

அதீதமான உணர்ச்சியுடன் போரியல் யதார்த்தங்களுக்கு மீறிய தகவலை தமிழ் சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதால், ரஜினிகாந்த், விஜய் வகையறா நடிகர்களுக்கு விசில் அடிக்கும் ரசிக குஞ்சுகள் போல விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் மாறும் சாத்தியம்தான் உண்டு.

உண்மையிலேயே விடுதலை புலிகளை நேசிப்பவர்கள், புலிகள் எப்படி தன்னந்தனியாக உலக ஒழுங்குடன் ராஜதந்திர/புவிசார் அரசியல்/ போரியல் சதுரங்க ஆட்டத்தில் நகர்வை மேற்கொண்டார்கள் என கற்றறியுங்கள்.

தமிழ் சமூகத்தில் நாம் உருவாக்கவேண்டியது உலக ஒழுங்கு/அதன் இயங்குவிதி/ராஜதந்திர/போரியல் பார்வை உள்ள அறிவுசார் சமூகத்தை.

அந்த தமிழ் சமூகமே அடுத்த சில பத்தாண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் இறுக்கமடைய போகும் சீனா – அமெரிக்காவிற்கு இடையிலான Great Game இல் கிடைக்க போகும் வாய்ப்புகளை பயன்படுத்தகூடிய அறிவை பெற்றிருக்கும்.

க.ஜெயகாந்த்