11 வருடத்துக்கு முதல் இந்த நாளில் (மே 2, 2009) படுகொலை களமான,பாதுகாப்பு வலயம்’

144

முள்ளிவாய்க்காலில் மீதமாயிருந்த ஒரேயொரு தற்காலிக மருத்துவமனை மீதும் இரு தடவை ஆட்லறி எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால், தொண்டாற்றிய ஒரு பெண் மருத்துவர், நோயளர்கள் மற்றும் நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்களென 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 87 பேர் காயமடைந்தனர். ‘பாதுகாப்பு வலயம்’ என சிறீலங்கா அரசு பிரகடனப்படுத்திய பகுதிக்குள்ளேயே இந்த தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனை மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மருத்துவமனை மீதான தாக்குதல்களை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவமனை அமைந்திருந்த இடம் சரியாக குறிக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக மருத்துவமனைப் பணியாளர்களால் வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் மருத்துவமனை பகுதியை ஆளில்லா உளவு விமானம் நோட்டமிட்டுச் சென்றது. இத்தகைய பின்னணியிலேயே மருத்துவமனை மீதான தாக்குதல் இரு தடவை மேற்கொள்ளப்பட்டது.


டிசம்பர் 15, 2008 தொடக்கம் மே 2, 2009 வரையான குறுகிய காலப்பகுதிக்குள் 30 நிரந்தர மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் சிறீலங்கா இராணுவம் தாக்குதல் நடாத்தியதாகவும் இவை போர்க்குற்றங்களுக்கான ஆதரங்கள் எனவும் மனித உரிமை காப்பகம் தெரிவித்தது.

ஒரு புறம் ‘பாதுகாப்பு வலயத்துக்கு’ வெளியே மேற்கொள்ளப்படும் எத்தகைய தாக்குதல்களும் (அது மருத்துவமனையாகவோ, வணக்கஸ்தலமாகவோ அல்லது பாடசாலையாக இருந்தாலும்) சரியானது என கோத்தபாய ராஜபக்ச நியாயப்படுத்த, மறுபுறம் ‘பாதுகாப்பு வலயத்துக்குள்ளே’ அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனை மீதும் அவரது கட்டளைக்கு கீழிருந்த இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது.

குறிப்பிட்ட இனக்குழுமத்தை பகுதியாகவோ முழுமையாகவோ திட்டமிட்ட நோக்கோடு அழிப்பது இனஅழிப்பு ஆகும். இனஅழிப்பு என்பதை நிரூபிப்பதில் நோக்கம் ( intention) என்பது மிக முக்கியமானது. அந்தவகையில், சிறீலங்கா ஆட்சிபீடம், தாமே ஒரு பகுதியை ‘பாதுகாப்பு வலயம்’ எனப் பிரகடனப்படுத்தி விட்டு, குறித்த வலயத்துக்குள் தமிழர்களை திட்டமிட்டு வரவழைத்து படுகொலைசெய்தமை, தமிழின அழிப்பு சர்வதேச ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்படும் காலத்தில் முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகப் பார்க்கப்படும்.

-Nirmanusan Balasundaram


இதேவேளை தமிழர்களின் வாக்குகளால் பிரதிநிதிகள் ஆன தரப்பு ஒன்று , இனப்படுகொலை நடந்ததற்கு ஆதாரம் போதாது எனவும் இனப்படுகொலை என தமிழ் ஜனநாயக அரங்குகளில் கொள்கைவழித்தீர்மானங்களை எடுக்கவேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறது.