நீதி வேண்டுகின்ற மக்களின் தூய்மையான உணர்வு வெளிப்பாடுகளை, தமது சுயலாபங்களுக்காகவும், அரசியல் அறுவடைகளுக்காகவும் பயன்படுத்தும் தாயகத்தில் உள்ள பிரமுகர்களைச் சாடுகின்ற உரிமை நமக்கு இருப்பது நியாயமென்றால், அவ்வாறான மக்கள் உணர்வுகளை புலத்தில் உள்ள தனி நபர்களும், ஒரு சில அமைப்புக்களும், தமக்கான அறுவடையாக சுவீகரித்துக்கொள்ள முனைவதைச் சாடுவதும் அம்பலப்படுத்துவதும், நமது கடமையே.
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற மக்கள் எழுச்சிப் பேரணி, முழுக்கமுழுக்க குடிசார் (CIVIL) முகத்துடன், மக்களின் உண்மையான வலிகளை உலகறியச்செய்யும் முகமாக, அரசியற் கட்சி சார்புகளைப் புறந்தள்ளி, குடிசார் (CIVIL)அமைப்புக்களின் முன்னேற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்டதன் விளைவே, கட்சி பாகுபாடுகளைக் கடந்து, அரசியற் கட்சிகளையும், முஸ்லீம், கிறீஸ்தவம், இந்து(சைவ) வேறுபாடுகளைக் கடந்தும், தமிழ் பேசும் தரப்புக்களாக அனைவரையும் ஒன்றிணைக்க முடிந்தது.
அதன் காரணமாகவே, தடைகள், மிரட்டல்கள், கெடுபிடிகள், தாக்குதல் முயற்சிகள், நம்மவர்களின் ‘சகுனி’ ஆட்டங்கள் என்பவற்றைக் கடந்து, ஒரு சிறப்பான அறுவடையை கடந்த நான்கு நாட்களில் பெறமுடிந்துள்ளது.
இது சாத்வீக அறுவடை மட்டுமல்ல; ராஜதந்திர அறுவடையும் கூட. இது எதிர்கால அரசியலுக்கான மூலோபாய வெற்றியும் கூட. இதன் தூய்மையை, அர்ப்பணிப்பை நாளை (ஞாயிறு) ஒரு நாள் மட்டும், பேணிவிட்டால், அது ஒரு மலையை நகர்த்தியதற்குச் சமானமாகும்.
ஆனால், கனடாவில் இப்பேரணிக்கு வலுசேர்க்கும் முகமாக, வாகனப் பேரணி நடத்துவதற்கான, இயல்பான உணர்வு வெளிப்பாட்டை, சமூகத்தில் பலர் வெளிப்படுத்திய நிலையில், அதனை ஒரு பொதுத் தரப்பாக, ஒரு கூட்டு முயற்சியாக முன்னெடுக்காமல், ஒரு தனிப்பட்ட அமைப்பும், அதன் ஒரு சில பிரமுகர்களும், தமக்கான சுய விளம்பர நிகழ்வாக அடையாளப்படுத்தி, தமது அமைப்பின் இலச்சினையோடும் அடையாளத்தோடும், தமக்கான ஆதாயம் ஈட்டும் செயலாக மாற்ற முனைவது, வெறும் ஈனச்செயலாகவே கருத முடிகிறது.
அண்மையில் தான், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, பொது விடயங்களில் இணைந்து பயணிப்பதற்காக (ஒரு அரசியற் செயற்பாட்டு அமைப்புத் தவிர), கனடாவில் சுமார் 30 அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்த போதிலும், மீளவும் ஒரு தனி அமைப்பு மட்டும், தனி ஓட்டம் ஓட முனைவதை, இனியும் மக்கள் கேள்விகேட்காமல் பார்த்துக்கொண்டிருந்தால், மீளவும் மீளவும், வரலாற்றுத் தவறுகள் இடம்பெறுவதை அனுமதிப்பதாகவே அமையும்.
இவ்வாறே, யாழ்.பல்கலைக்கழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைத்தழிக்கப்பட்டபோது ஏற்பட்ட மக்களின் உணர்வெழுச்சியையே, தனது தனிப்பட்ட சாதனையாக கனடாவில் உள்ள குறித்த அமைப்பு தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்டது.
‘போராட்டம்’/ ‘பேரணி’ என்று வருகிற பொழுது, ‘கனேடியத் தமிழர் சமூகமும்’, ‘மாணவர் சமூகமும்’ விடுக்கும் ‘அழைப்பு’ என்று அநாமதேய அழைப்பை விடுதிட்டுவிட்டு, மக்களின் பங்களிப்பு கணிசமாக வெளிப்பட்டதும், தாமே அதன் சாதனையாளர்கள் என்பதுபோல், அறிக்கைவிட்டு, வாகனங்களின் எணிக்கையையும், மனம்போனபோக்கில் மிகையாகக் குறிப்பிட்டு, அந்த அமைப்பு தனக்கான விளம்பரத் தாகத்தைத் தீர்த்துக்கொண்டது.
இந்நிலையில், இம்முறை மீளவும் ஒரு விளம்பர அறுவடைக்கு அவ்வமைப்பு, தயாராகி வருகிறது. அதனது ‘சகுனி’, வேலைத்திட்டங்கள், தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என்பதை அதன் தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஏன் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்று தெரியவில்லை.
ஒரு விடயத்தை, உளவியலைப் புரிந்துகொள்ளுங்கள், மக்களின் ஆத்மாவைத் தொடுகின்ற/ உலுக்குகிற நிகழ்வுகள், சம்பவங்கள் நடைபெறுகின்றபொழுது, அவர்கள் அதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகளைக் கொட்டுகின்ற தளம் கிடைக்கின்றபொழுது, அணை உடைக்கும் வெள்ளம் போல, தமது உணர்வுகளைப் பீறிடவைப்பார்கள்.
ஆனால், அதனை மடைமாற்றிவிட்டு, திட்டமிட்டவகையில், ஐக்கியச் சிதைவுக்கான ஆயுதமாக, ‘சகுனிகள்’ பயன்படுத்த அனுமதிக்காக கூடாது.
சாணக்கியனும் – சுமந்திரனும், தனி ஓட்டம் ஓடுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புவது நியாயமென்றால், கனடாவிலும் சரி, புலத்திலும் சரி, தனி ஓட்டம் ஓடுவோர் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பது கடமை.
இதனை சமூகமாகப் புரிந்து கொள்ளுதலும், சமூகமாக நெறிப்படுத்தலும் அவசியம். நிலத்தில், ஒப்பேறிய ஐக்கியம் போல், புலத்திலும் மக்களுக்காக மக்களை ஒன்றுணைக்கும் குடிசார் (CIVIL)அமைப்புக்கள் தேவை. கடந்த 11 ஆண்டுகளாக மக்களைக் கூறுபோட்ட அமைப்புக்களைக் கடந்து, சிவில் சமூகம் ஒன்றுபட வேண்டும் அல்லது குறித்த அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ், பொதுத்தரப்பாக ஒன்றிணைக்கப்படவேண்டும்.
தயவு செய்து தேசியத்தையும், இனப்படுகொலைக்கான நியாய வேள்வியையும், சில தனி நபர்களிடமோ, அமைப்புக்களிடமோ, விற்றுவிடாதிறீர்கள்.
4 லட்சம் பேருக்கு 40 அமைப்புக்கள் உண்டு என்று அறிக்கை விடுவதால் பயனில்லை. இவ்வாறான பொது விடயங்களில் ஒன்றுபடாமல் விடுவதும், சிலர் தனித்தோட அனுமதித்திப்பதும், நீங்கள் அனைவரும் வெறும் காகித அமைப்புக்களாக, Summer க்கு Park இல Party யும், Dinner Dance உம் வைத்து விருது வழங்கவும், அமைப்பு நடத்துகிறீர்கள் என்றே பொருள்.
இவ்வாறான தவறுகளுக்கு சமூகமாக எல்லோருமே பொறுப்பு. 1008 சங்கங்களில் ஒன்றுடனாவது உங்களுக்குத் தொடர்பிருக்கும். அச் சங்ககளின் சமூகப் பொறுப்பு என்ன? கூட்டுப் பொறுப்பு என்ன ? என்ற கேள்வியைக் கேளுங்கள்.
‘எனக்கு Politics தெரியாது…’ என்று நீங்கள் கடந்து போவதாலேயே, ஏனையவர்கள் உங்கள் காதுகளில் ‘பூ’ வைக்கிறார்கள். எனவே, விழியுங்கள் ! விழிப்பூட்டுங்கள் !!
கடுமையான வார்த்தைகளைத் தயவுடன்
பொறுத்துக்கொள்ளுங்கள். ஆனால், கசப்பான உண்மைகளுக்காக, வெறுப்புக்களை ஏற்க நாம் தயார்.
உங்களிடம் கேட்பது, வணக்க நிகழ்வுகளுக்காகவும், மக்களின் வலிகளைப் போக்குவதற்காகவும், பொது விடயங்களில் ஒன்று படுங்கள் என்றே.
நீங்கள் ‘தேர்’ இழுத்தாலும்… ‘கார்’ இழுத்தாலும்… சேர்ந்து இழுங்கள் என்றே வலியுறுத்துகிறோம்.
நன்றியுடன்,
உதயன் S. பிள்ளை
(February 06, 2021)