இலங்கையில் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வி!

177

இலங்கை மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடாகும். 1796 ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியா, இலங்கை முழுவதையும் ஆட்சி புரியத் தொடங்கியதுடன், 1815 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை ‘சிலோன்’ எனப் பெயரிட்டு ஆண்டது.

இலங்கையில் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பலர் சிறந்த கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வியை இலங்கையில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலானவர்களே பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். மேலும் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மக்கள் அதிகளவான கல்வியறிவைப் பெற்றுக் கொண்டார்கள்.

அவர்களில் காலத்தில் ஏற்பட்ட கல்வியறிவு காரணமாக 1870 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College) இலங்கைச் சட்டக் கல்லூரியும் (Ceylon Law College) நிறுவப்பட்டன.

அக்காலத்தில் நடைமுறையில் இருந்த கல்வித் திட்டத்தில் அதிருப்தி கொண்ட சேர். பொன். அருணாச்சலம் அவர்கள், அக்கல்வித் திட்டத்தை மாற்றுவதற்கான ஆலோசனைகள் பலவற்றை பலமுறை முன்வைத்தார். அவர் 1900 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கல்வி அதிபராக இருந்த திரு. பரோஸ் அவர்களுடன் கல்வித் திட்ட மாற்றங்கள் தொடர்பான சில முக்கிய விடயங்களைப் பேசினார். அவருடைய பேச்சு கல்வி அதிபரை மிகவும் கவர்ந்த காரணத்தால், அக்கருத்துக்களை ஓர் அறிக்கை வடிவில் தயாரித்துத் தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் பிரகாரம் சேர்.பொன்.அருணாச்சலம் அவர்கள் 1900 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி கல்வித்திட்டம் தொடர்பான தனது அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் கல்வித் திட்டங்கள் தொடர்பான பல விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அக்காலத்தில் கொழும்பில் வழங்கப்பட்டு வந்த ஆரம்பக் கல்வி முறையின் அடிப்படையான குறையாக, ஆங்கில மொழி மூலம் கல்வி பயிற்றப்படுதலே என்ற முக்கிய விடயத்தை அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார். இலங்கையில் தாய் மொழிக் கல்வியை வலியுறுத்திய காரணத்தால் அவர் ‘தாய் மொழிக் கல்வி இயக்கத்தின் தந்தை’ எனவும் போற்றப்படுகிறார்.

“இங்கிலாந்தில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் ஆங்கிலத்தைத் தள்ளி விட்டு, ஜெர்மானிய மொழியைப் போதனா மொழியாக்கினால் எவ்வாறு இருக்கும் என யோசித்துப் பாருங்கள்! ஆங்கிலத்துக்கும் சிங்களத்துக்கும் (அல்லது தமிழுக்கும்) இருக்கும் ஒற்றுமையிலும் பார்க்க ஜெர்மானிய மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது. எனவே சிங்களச் சிறார்களும், தமிழ்ச் சிறார்களும் ஆங்கிலம் கற்பதை விட, ஆங்கிலச் சிறார்கள் ஜெர்மானிய மொழியை இலகுவில் கற்க முடியும்” என அவர் கல்வி அதிபரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் கல்வித் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை அகற்ற பல திட்டங்களை சிபார்சு செய்தார். சேர். பொன். அருணாச்சலத்தின் சிபார்சுகளுக்கு கல்வி அதிகாரி பரோஸ் நன்றி தெரிவித்திருந்தாலும், அச்சிபார்சுகளை அவர் அமுல்படுத்த முன்வரவில்லை என்பதை இருவருக்கும் இடையில் நடைபெற்ற கடித்தப் போக்குவரத்துக்கள் உறுதி செய்கிறன.

மனம் தளராத அவர் கல்வி அதிகாரியான பரோஸின் மேலதிகாரியான சேர்வெஸ்ட் ரிட்ஜ்வே அவர்களுக்கு தமது அறிக்கையின் பிரதி ஒன்றுடன் மனுச் செய்தார். அம்மனுவில் கல்வித் தேவைகளை ஆராய ஓர் ஆணைக் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதில் “இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். அதைச் செய்ய முடியாதவிடத்து, ரோயல் கல்லூரியை ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியின் அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும். அவ்விதம் ஒரு கழகம் அமைந்தால் அது மக்களுக்கு அழியா நன்மை பயக்கும். அத்துடன் இலங்கையில் தேசாதிபதி அவர்களின் ஆட்சிக்கு ஒரு நல்ல ஞாபகச் சின்னமாகவும் விளங்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது வேண்டுகோளுக்கு “கல்வி பற்றிய உங்கள் அறிக்கை நிர்வாகக் கவுன்சிலில் முறையாகக் கவனிக்கப் பெற்றது. தேசாதிபதி அவர்கள் இது பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அக்டோபர் 15 ஆம் திகதி முடிவு செய்தார்” எனப் பதில் கிடைத்தது. அப்பதிலால் சற்றும் மனம் தளராத அருணாச்சலம் அவர்கள் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் கல்வி அதிகாரியுடன் கடிதப் போக்குவரத்துக்களை நடத்தினார். கல்வி முறையின் அபிவிருத்திக்கு பல ஆலோசனைகளை முன்வைத்தார். உதாரணமாக இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் ‘ஆங்கிலச் சரித்திரமும் புவியியலும்’ என்னும் பாடத்திற்குப் பதிலாக ‘சரித்திரமும் புவியலும்’ என்ற பாடத்தைப் படிப்பித்தலே உகந்தது என ஆலோசனை கூறினார். றோயல் கல்லூரியின் அபிவிருத்தியில் அவர் மிகவும் சிரத்தை காட்டியதுடன், உயர்தரப் பாடசாலைகளுக்கு இது ஓர் முன்மாதிரியாக விளங்க வேண்டும் எனக் கூறினார். சமகாலத்தில் இலங்கைச் சரித்திரம் தொடர்பான பல பிரசங்கங்களை நிகழ்த்திய அவர், பாடசாலை மட்டத்திலும், வெளியே உள்ள கற்றோர் தரத்திலும் இலங்கைச் சரித்திரத்தில் புதியதோர் ஆர்வம் பிறக்க வழி சமைத்தார்.

சேர். பொன். அருணாச்சலம் அவர்களின் பெரு முயற்சியால் இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் (CUA) 1906 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உதயமானது. கல்வியறிவு செறிந்த குழுவினரால் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் உள்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கும் ஆலோசனைக்கு அமைவாக ‘இலங்கை பல்கலைக்கழகச் சங்கம்’ செயற்பட ஆரம்பித்தது. இவ்வளப்பரிய சேவை காரணமாக சேர்.பொன். அருணாச்சலம் அவர்களை ‘இலங்கப் பல்கலைக்கழக இயக்கத்தின் பிதா’ எனச் சிறப்பாக அழைப்பார்கள். மேலும் அக்காலத்தில் அச்சங்கம் வெளியிட்ட சஞ்சிகை மிகவும் உன்னதமானது. இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதலாவது அதிபரான பேராசிரியர் மார்ஸ் அவர்கள் சேர். பொன். அருணாச்சலம் அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தியைக் கேட்டு, கல்லூரியின் மகா மண்டபத்தில் மாணவர்களைக் கூட்டி ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்.

அச் சொற்பொழிவில் ” இலங்கையில் பல்கலைக்கழகங் காணும் திட்டத்தின் உண்மையான பிதாவாய் விளங்கிய ஒருவரது ஞாபகத்திற்கு நம் மரியாதைகளைச் செலுத்துவதற்காகவே நான் உங்களை இங்கே குழுமும்படி கேட்டுள்ளேன். அரசாங்க ஊழியர், அரசியல்வாதி, கல்விமான், கல்வித்துறையில் தொண்டாற்றியவர், சமூக சீர்திருத்தக்காரர், ஞானி என்ற தம் பல்துறை வாழ்வில் அவர் செய்த சேவைகளைப் பற்றியும் அடைந்த பல்வித வெற்றிகளைப் பற்றியும் பலரும் பலபட எழுதியுள்ளனர். ஆனால் அவரது பிந்திய நாட்களில் அவரைச் சார்ந்தார் எவர்க்கும் ஊக்கவும், உணர்ச்சியும் நல்கிய ஒரு துறை பற்றி, அவர் உள்ளத்திற்கு மிகப் பிரியமானதும் என்னோடும் உங்களோடும் தொடர்பு கொண்டு விளங்குவதுமான இப்பல்கலைக்கழகக் கல்லூரி என்னும் ஸ்தாபனம் சம்பந்தமாக அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் பற்றி அதிகம் கூறப்படவில்லை. ஒன்றும் கூறப்படுவதில்லை என்று கூடக் கூறிவிடலாம். 1906 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதியன்று இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவுதல் வேண்டும் என்ற பிரச்சனை சம்பந்தமாக நடாத்தப்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு சேர்.பொன்.அருணாச்சலமே தலைமை தாங்கினார் என்பதை நான் ஞாபகமூட்டுகிறேன்” எனப் பேராசிரியர் மார்ஸ் கூறினார்.

சேர். பொன். அருணாச்சலம் தலைமையில் கல்வியறிவு செறிந்த குழுவினரால் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகச் சங்கத்தின்(CUA) எதிர்பார்ப்புக்களை உணர்ந்த இலங்கையை ஆட்சி புரிந்த பிரித்தானிய அரசாங்கம் 1913 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்கத் தீர்மானித்தது.

பல்கலைக்கழகத்தின் அமைவிடம், அமைப்பு தொடர்பான வாதங்களாலும், உலகப் போரின் காரணத்தாலும் பல்கலைக்கழக உருவாக்க வேலைகள் தாமதமடைந்தன. பின்னர் தனியார் குடியிருப்பு ஒன்றை அரசாங்கம் கொள்வனவு செய்தது. இவ்விடமே ‘கொலிஜ் ஹவுஸ்’ என்று அழைக்கப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரி ரோயல் கல்லூரியின் கட்டடத்தில் 1921 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததுடன், இக்கல்லூரி லண்டன் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப் படிப்பையும் வழங்கி வந்தது. 1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College) இலங்கைச் சட்டக் கல்லூரியும் (Ceylon Law College) இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட 50 வருடங்களின் பின்னர் 1921 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி (Ceylon University College) நிறுவப்பட்டது.

இலங்கை மருத்துவக் கல்லூரியானது தொடர்ந்தும் சுதந்திரமான கல்வி நிறுவனமாகச் செயற்பட்டதுடன், 1924 ஆம் ஆண்டு பிரித்தானிய மருத்துவக் கவுன்சிலை (British Medical Council) அடித்தளமாகக் கொண்டு இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை மருத்துவக் கவுன்சிலின் (Ceylon Medical Council) கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கையில் 1920 களின் ஆரம்பத்தில் பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 1926 ஆம் ஆண்டு கல்விக் குழு அமைக்கப்பட்டது. Sir William Buchanan-riddel அவர்களைத் தலைவராகக் கொண்டு பல்கலைக்கழக ஆணைக்குழு நிறுவப்பட்டது. அவர் 1929 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக வரைவுச் சட்ட நகல் உருவாக்கப்பட்டதுடன், அடுத்தாண்டு பல்கலைக்கழக வரைவுச் சட்டம் சட்டக் கவுன்சிலால் (Logislative Council) அங்கீகரிக்கப்பட்டது. 1930 களில் நாடு மந்த நிலையில் உறைந்திருந்ததுடன், தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக இவ்விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் 1938 ஆம் ஆண்டு அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுத்ததுடன், பேராதனையில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாவதற்கு அடித்தளமிடப்பட்டது. மேலும் அதேஆண்டு பல்மருத்துவக் கல்லூரி (Dental School) இலங்கை மருத்துவக் கல்லூரியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

அடுத்த ஆண்டு இரண்டாம் உலகப் போர் வெடித்த காரணத்தால் முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தின் நிலைமைகள் தொடர்பில் மாற்றங்கள் உருவானது. அக்காலத்தில் பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபராக இருந்த Sir Ivor Jennings அவர்களால் பல்கலைக்கழக வரைவுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கான அங்கீகாரம் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டளை சட்டத்தால் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்டது.

இலங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவை ஒன்றிணைந்து முதலாம் திகதி ஜூலை மாதம் 1942 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமான பல்கலைக்கழக முதலாவது கற்கைநெறி ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே இலங்கையின் நவீன பல்கலைக்கழக கல்விக்கான அத்திவாரமாம் என்றால் அது மிகையாகாது.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது இலங்கையில் ஒரே ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே இருந்தது. இலங்கைப் பல்கலைக்கழகம் (சிலோன் பல்கலைக்கழகம்) என அழைக்கப்பட்ட அப்பல்கலைக்கழகமானது, 1942 ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் 1870 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருத்துவக் கல்லூரி ( சிலோன் மருத்துவக் கல்லூரி) ஆகியவற்றின் கூட்டிணைப்பால் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வியும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் கலை, கீழைத்தேயக் கல்வி, விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் ஆகிய நான்கு பீடங்கள் ஊடாக கல்விச் சேவை வழங்கப்பட்டன. அக்காலங்களில் இலங்கை முழுவதிலும் இருந்து பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் மாத்திரமே இருந்தனர். எனவே இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களிலும் ஏற்பட்ட கல்வித் தேவை காரணமாக பேராசிரியர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களின் கல்விச் சேவை காரணமாக இலங்கையின் கல்வித்தரம் உயர்வடைந்ததுடன், சர்வதேச அங்கீகாரமும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களிலும் 1942 ஆம் ஆண்டு 15 பேராசிரியர்கள், 20 விரிவுரையாளர்கள், 08 உதவி விரிவுரையாளர்கள் மற்றும் ஏனையோர் 12 பேர் அடங்கலாக 55 பேர் கடமையாற்றியுள்ளனர். அக்காலத்தில் கலை மற்றும் கீழைத்தேசக்கல்விப் பீடங்களில் 396 மாணவர்களும், விஞ்ஞான பீடத்தில் 250 மாணவர்களும், மருத்துவ பீடத்தில் 258 மாணவர்களும் அடங்கலாக நான்கு பீடங்களிலும் மொத்தமாக 904 மாணவர்கள் கல்வி கற்றனர். கிட்டத்தட்ட 30,000 நூல்களைக் கொண்ட ஒரு சிறிய நூலகம் மாணவர்களின் கல்விப் பசிக்குத் தீனி போட்டது. அக்காலத்தில் வருடம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தின் மொத்தச் செலவுத்தொகை 930,000 ரூபா ஆகும். 1947 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி மூலமான கற்கைகளுக்கு வழி ஏற்பட்டது.

இலங்கையில் சகல மாகாணங்களிலும் தற்போது 12 தேசிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் இலங்கைப் பல்கலைக்கழகத்தை மூலமாகக் கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் மிகப் பெரிய பல்கலைக்கழகங்கள் ஆகும். இவ் இரண்டு பல்கலைக்கழகங்களும் 1967 ஆம் ஆண்டு தனிப்பட்ட பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 1958 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரம்பரிய பௌத்த கல்வி மையங்களாக வித்தியாலங்கார மற்றும் வித்தியோதய ஆகிய இரண்டும் விளங்கின. பின்னர் அவற்றின் தரம் உயர்த்தப்பட்டு அக்கல்வி மையங்கள் பல்கலைக்கழகத் தரத்தைப் பெற்றதுடன், காலப்போக்கில் நவீன மத சார்பற்ற பல்கலைக்கழகங்களாக உருவாகின.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மொரட்டுவப் பல்கலைக்கழகம், றுகுணுப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களில் முதல் நான்கு பல்கலைக்கழகங்களும் 1978 ஆம் ஆண்டு உயர் கல்விச் சட்டத்தின் மூலமாக நிறுவப்பட்டன. இலங்கை திறந்த பல்கலைக்கழகமானது பாரம்பரியப் பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்கள் மற்றும் வயது வந்த ஊழியர்கள் ஆகியோருக்கு தொலைக்கல்வி ஊடாகக் கல்வியை வழங்கும் பொருட்டு 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ரஜரட்டைப் பல்கலைக்கழகம், சப்ரகமுவப் பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய ஏனைய மூன்று பல்கலைக்கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதிதாக இடம் பெற்றவை ஆகும். ரஜரட்டைப் பல்கலைக்கழகம் மற்றும் சப்ரகமுவப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் 1997 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சரான ரிச்சட் பத்திரண தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருந்த அட்டாளைச்சேனைக் கல்லூரி 1994 ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டு தென் – கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், தேவையும் மிக நீண்ட காலமாகவே இருந்தது. திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு வேறு இடங்கள் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு பல தரப்பினராலும் முன்மொழியப்பட்டது. வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த யாழ்ப்பாணக் கல்லூரி வளவில் அமைந்திருந்த பட்டதாரி மாணவப் பிரிவையும், 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருநெல்வேலியில் நிறுவப்பட்ட பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன.

ஆகவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் என்றே அழைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு உயர் கல்விச் சட்டத்தின் மூலமாக இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.

தற்போது இலங்கை முழுவதும் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் பலவற்றின் ஊடாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்றப்பட்டு, பட்டம் பெறுகிறார்கள். ஆகவே இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அதாவது 1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College) இலங்கைச் சட்டக் கல்லூரியுமே (Ceylon Law College) தற்கால இலங்கையின் பல்கலைக்கழகத் தரத்திலான கல்விக்கு அத்திவாரம் இட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும். மேலும் “பல்கலைக்கழகம் எவ்வாறு அமைய வேண்டும்; படிப்பித்தல், படித்தல் ஆகியன எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நாம் வறையறுக்கவில்லை. அவை வருங்காலத்தில் படிப்படியாக விருத்தியடைய வேண்டியவை.

தற்பொழுது பாடசாலைகளிலும் ஏனைய தொழிற்கல்வி நிலையங்களிலும் சிதறிக் கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்தும் ஆரம்ப, உயர்தரப் பாடசாலைகளின் சிகரமாகத் திகழக் கூடியதும் நமது பாடசாலைகளும் கல்லூரிகளும் சக்தியிழந்து சோர்வுற்ற ஒரு முறையிற் செல்லாது தடுத்து மக்களின் பண்பைப் படிப்படியாக உயர்த்தி வரக் கூடியதுமான பல்கலைக்கழகத்தை அமைப்பதே நமது சங்கத்தின் நோக்கம்” என இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் உருவாவதற்குக் காரணமான பொதுக் கூட்டத்தில் சேர். பொன். அருணாச்சலம் அவர்கள் கூறிய கருத்துக்கள் அவரது தொலைநோக்குச் சிந்தனையை எடுத்தியம்புகிறது.

உமாச்சந்திரா பிரகாஷ்