7000 ஆண்டுகள் கழித்து உலகெங்கும் மனிதர்கள் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி

155

வானத்தில் அற்புதமான நிகழ்வு ஒன்று நடந்துகொண்டிருக்கிறது, சமீபத்தில் உலகம் முழுக்க நிறைய பேர் சமூக ஊடகங்களில் அதன் புகைப்படங்களை கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர். பூமியில் இருக்கும் மனிதர்கள் மட்டும் இல்லை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பவர்கள் கூட அதன் புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர்.

“Comet C/2020 F3 Neowise”, உலகம் முழுக்க தெரிந்து கொண்டிருக்கும் இந்த “வால் நட்சத்திரம்” இன்று மாலை முதல் இந்தியாவிலும் வெறும் கண்களுக்கு தெரியும் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. ஜூலை 14 முதல் அடுத்த 20 நாட்களுக்கு சூரியன் மறைந்த அடுத்த 20 நிமிடங்கள் வெறும் கண்களுக்கு தெரியும் என்கிற செய்தி வந்திருக்கிறது. இது போன்ற சில வால் நட்சத்திரங்கள் சூரியனை சுற்றும் காலம் மிக நீண்டது, பூமி சூரியனை 365 நாட்களில் சுற்றுவது போல் தற்போது வந்திருக்கும் இந்த வால் நட்சத்திரம் ஏறக்குறைய 7000 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுகிறது, அந்தவகையில் வரும் ஜூலை 22 ஆம் தேதி இது சூரியனுக்கு மிக அருகில் சென்று மீண்டும் அதன் பாதையில் சென்று விடும் ஆகையால் அடுத்த 20 நாட்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இது தெரியும். இது மீண்டும் 7000 வருடங்கள் கழித்து தான் வரும் என்பதால் இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.

இதற்கு வால் எங்கிருந்து வருகின்றது? சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த சூரிய குடும்பம் உருவான போது அதிலிருந்து எஞ்சிய சில குப்பைகள் போன்றவை இவை. இவைகளும் மற்ற கோள்களை போல் சூரியனை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இதில் அதிகமாக தூசு, வாயு, ஐஸ், போன்றவை இருக்கும், சூரியனை விட்டு வெகு தூரம் இருக்கும் போது உறைநிலையில் இருக்கும் இவை, சூரியனை நெருங்கும் போது அதன் வெப்பம் காரணமாக அதிலிருக்கும் கேஸ், ஐஸ் போன்றவை கரைவது இப்படி வால் போல் நமக்கு தெரிகிறது, இந்த வாலானது பல மில்லியன் கிலோமீட்டர் நீளமுள்ளவை. சூரிய ஒளி அதன் மீது படுவதால் நம் கண்களுக்கு அது வாலுடன் இருக்கும் நட்சத்திரம் போன்று இருக்கும்.

எங்கே பார்ப்பது? ஜூலை 14 முதல் சூரியன் மறைந்த பின் “வடமேற்கு” அதாவது “North West” கீழ் வானில் 20 டிகிரி உயரத்தில் தெரியும், நாட்கள் செல்ல செல்ல இது மேலும் கூடுதல் உயரத்திற்கு வரும். ஜூலை 30, இது 40 டிகிரி உயரம் வரை வரக்கூடும் என்றும் ஒரு மணி நேரம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நம் கண்களை விட்டு மறைந்து அதன் வழியில் சென்று விடும். இதன் தரிசனம் நமக்கு பிறகு 7000 ஆண்டுகள் கழித்து வரும் மனிதர்களின் கண்களுக்கு மட்டுமே.. So don’t miss it!.

Best dates: July 22 and 23.

Sasi Dharan