என் முதல் பாடலை பாடியவன் நீ கடைசி பாடலையும் நீதான் பாட வேண்டும் – வைரமுத்து உருக்கம்!

139

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள எஸ்.பி.பியின் ரசிகர்கள் கவலையடைந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது விருப்பத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார்கள்.

இந்நிலையில் எஸ்.பி.பி நலமடைந்து மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ள வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எஸ்.பி.பி அவர்களே எங்கள் வாழ்வின் அன்றாடமே. எங்கள் மூளையில் ஒரு மூலையில் கூடுகட்டிப் பாடும் குயிலே. மீண்டு வர வேண்டும். இசை உலகை நீங்கள் ஆண்டு வர வேண்டும். என் முதல் பாடியவன் நீ. என் கடைசிப் பாடலையும் நீதான் பாட வேண்டும்.

மேகங்கள் வந்து வந்து போகும் வானம் நிரந்தரம். இசையமைப்பாளர்கள் இயக்குநர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நிகழ்ந்த என் கலை வாழ்வில் 40 ஆண்டுகளாய் மாறாத மகா கலைஞன் நீ. நீ மீண்டு வருவாய். இசை உலகை ஆண்டு வருவாய். இந்த உலகமே உனக்காக வேண்டியிருக்கிறது. இந்த உலகத்துக்கு இன்பம் மட்டுமே கொடுத்துப் பழகியவன் நீ. துன்பம் கொடுக்கமாட்டாய் என்று எனக்குத் தெரியும். பாட்டுக்குயிலே சிறகை விரி. கூண்டை உடை. மீண்டு வா. இசை உலகை ஆண்டு வா. பாடவா.

பாடல் ராஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதய்யா எங்கே.

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண் மூடிப் பார்த்தால் காதெல்லாம் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்.

பாலு உங்களுக்காக இசை உலகம் காத்திருக்கிறது.”

என்று காதல் ரோஜாவே பாடலை எஸ்.பி.பி.க்காக வரிகள் மாற்றி பாடியுள்ளார் வைரமுத்து.