வலி தந்த வலிகாமம்,பணியாது போராடிய புலிகள்…

174

தமிழ்ஈழத்தில் புலிகளின் தலைநகரமாக விளங்கிய இடம் யாழ்ப்பாண நகரம். 1990 ஜூன் மாத வாக்கில் புலிகளின் கையில் வந்த யாழ். நகரம், அதன்பின் 5 ஆண்டுகளாக புலிகளின் கையில் தொடர்ந்து நீடித்து வந்தது.இந்நிலையில் 5 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் முதல்முறையாக யாழ். நகரம் புலிகளின் கைகளை விட்டு போகும் நிலை உருவாகத் தொடங்கியது.

யாழ்.வலிகாமம் பகுதியில் ரிவிரெச எனப்படும் சூரியக்கதிர் நடவடிக்கையைத் தொடங்கிய சிங்கள ராணுவம், 5 வார கால சண்டைக்குப் பின் யாழ்ப்பாண நகருக்கு மிக அருகில் வந்திருந்தது. யாழ்ப்பாண நகரம் இனி தொட்டுவிடும் தூரம்தான் என்ற நிலை.நீர்வேலி பகுதியில் இருந்து யாழ். நகரம் வெறும் 8 கி.மீ. தொலைவுதான். ஆனால் இந்த 8 கி.மீ. தொலைவைக் கடக்க ராணுவம் 8 நாள்களை எடுத்திக்கொண்டது.

இதற்கு ராணுவம் சொன்ன காரணம் மிகமிக வேடிக்கையானது. ‘யாழ். நகரம் அதிக அளவில் மக்கள் செறிந்து வாழும் நகரம். எனவே பாரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதுதான் ராணுவம் சொன்ன காரணம்.ஆம்! யாழ். மக்கள் மழையில் குடையின்றி நனைகிறார்களே என சிங்கள ஓநாய் அழுத காலம் அது.

உண்மையில் யாழ். நகரம் அப்போது ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருந்தது. யாழ். மக்கள் பெருமெடுப்பில் வன்னி நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்கள். ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்த யாழ்.நகரை பிடிக்கத்தான் சிங்கள ராணுவம் இப்படி நொண்டிச் சாக்கு கூறியது.

ராணுவம் யாழ். நகரை நோக்கி இப்படி தத்தித் தத்தித் தவழ 3 காரணங்கள் இருந்தன. ஒன்று அடாத போரிலும் விடாமல் பெய்த வடகிழக்கு பருவமழை. இரண்டு புலிகள் வழியெல்லாம் விட்டுச்சென்றிருந்த மறைவுக் கண்ணிவெடிகள். மூன்று பிரிகேடியர் தீபன் தலைமையில் புலிகள் நடத்திய கடும்போர்.

உண்மையில் பலாலியில் இருந்து ரிவிரெச நடவடிக்கையை ராணுவம் தொடங்கியபோது புலிகளின் முதன்மைத் தளபதிகளான பால்ராஜ், சொர்ணம் ஆகியோர் ராணுவத்துக்கு எதிரான எதிர்சமரில் ஈடுபட்டனர்.ஆனால், ராணுவம் யாழ். நகரத்தை நெருங்கியபோது மாவீரர் வாரத்துக்கு முன்பாக யாழ். நகரம் வீழாத வண்ணம் ராணுவத்தைத் தடுத்துப்பிடிக்கும் பொறுப்பு வேலுப்பிள்ளை பகீரதகுமார் என்ற பிரிகேடியர் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது.

புலிகள் தலைமை உத்தரவிட்டபடி ராணுவத்தை மாவீரர் நாளான நவம்பர் 27 வரை யாழ்ப்பாணத்தைப் பிடிக்க விடாமல் செய்து தாக்காட்டினார் தீபன். இறுதியாக ராணுவம் யாழ்.நகருக்குள் இறங்கிவிட்ட நிலையில், தீபனும், அவரது படையணியினரும் ஆழம் குறைந்த பண்ணைக் கடல் வழியாக இறங்கி மார்பளவு நீரில் தெற்கு நோக்கி நகர்ந்தனர். குறிப்பிட்ட இடத்தில் தளபதி சூசையின் தலைமையில் படகுகளில் வந்த கடற்புலிகள் அவர்களை படகுகளில் ஏற்றி வன்னிக்குக் கூட்டிச் சென்றனர்.

ராணுவத்தின் ஒரு பகுதி இப்போது யாழ்.நகருக்குள் மெல்ல கால்வைத்தது. ஆனால், யாழ். நகரில் காலியான தெருக்களும், கட்டடங்களுமே அவர்களை வரவேற்றன. பறவை வசிக்காத வெற்று கூடு போல, ஆளரவமின்றி யாழ்ப்பாணம் காட்சி அளித்தது. புலிகளின் அழைப்பை ஏற்று வன்னிக்கு இடம்பெயர மனமில்லாத 400 பேர்கள் மட்டுமே யாழ். நகரில் வீம்புடன் தங்கியிருந்தனர்.

இதற்கிடையே யாழ். நகரின் தென்மேற்கு மூலையில் 150 புலிகள் தொடர்ந்து தங்கியிருப்பதாக ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், யாழ்ப்பாண நகரின் தென்மேற்கு மூலையில் தேடியபோது, அந்த 150 புலிகளும் காற்றோடு காற்றாகக் கலந்து மாயமாகி இருந்தார்கள். அவர்களைக் காணவில்லை.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ரிவிரெச ராணுவ நடவடிக்கை, டிசம்பர் முதல் தேதியன்று 47ஆவது நாளை எட்டியிருந்தது. யாழ். டச்சுக்கோட்டை, மண்டைத்தீவை யாழ்.நகரத்துடன் இணைக்கும் பண்ணைப் பாலம் போன்றவற்றையும் ராணுவம் தனது பிடியில் கொண்டு வந்தது.யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியை தஙகள் காலடியில் கொண்டுவந்து விட்டோம் என ராணுவம் இறுமாந்திருந்த நேரம், ராணுவம் இதுவரை கைப்பற்றியிருந்த பகுதிகளில் புலிகள் திடீர் திடீரென நடமாடி ‘கரந்தடி’ தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர்.

பலத்த கட்டுக்காவல் கொண்டிருந்ததாகக் கருதப்பட்ட பலாலி விமானப்படைத் தளத்துக்கு அருகே மயிலிட்டி பகுதியில், ஓர் இரவு முழுவதும் புலிகளுடன் நடந்த சண்டையில் 27 ராணுவத்தினர் உயிரிழந்து, 76 பேர் வரை காயமடைந்தார்கள்.

வலிகாமத்தையும், யாழ். நகரையும் கைப்பற்றி விட்டதாக ராணுவம் மமதையில் இருந்தபோது, வலிகாமம் அவர்களுக்கு கடும் வலியைத் தந்தது என்பது வரலாறு.

ஆம்! வலி தந்தது வலிகாமம்.

மோகனரூபன்