வல்வை படுகொலை – இந்தியம் விதைத்த பெருவலி

332

1989 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 2 ம் நாளில் வடமராட்சியின் ஊரிக்காடு, பொலிகண்டி ஆகிய இடங்களில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையினர் v வடிவான வீயூகம் அமைத்துப்புறப்பட்டனர்.

இவ்வாறு புறப்பட்ட இந்தியப்படைகளிற்கு தலைமை தாங்கியவர்களில் கப்டன் மேனன் என்பவனிற்கு புலிகளின் மீது அதிக வன்மம் இருந்தது.அத்துடன் கூடவே வல்வெட்டித்துறையினை பழிவாங்கும் ஒரு களமாக நினைத்து அன்று இந்த மேனன் செயற்பாட்டான்.

இந்த இடத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை இதே மலையாளிகள் முன்னின்று நடத்தியதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது.சீக்கியப்படைகள் அன்று முகாமிட்டிருந்த உடுப்பிட்டி முகாம் அதிகாரி உடுப்பிட்டி பிரஜைகள்குழுவினூடாக அப்பிரதேசத்தில் இந்தியப்படைகளை தாக்கபடக்கூடாது என்னும் கனவான் ஒப்பந்தம் ஒன்றை புலிகளுடன் செய்திருந்தார்.

இவ் ஒப்பந்தத்தை மீறி புலிகளை தேடியழிக்கும் இந்தியப் படைகளின் நடவடிக்கை புலிகளிற்கு கோபத்தை ஏற்படுத்த, அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க புலிகள் முடிவெடுக்கின்றார்கள்.தம்மை தேடி, அழிக்க வந்த சீக்கியப்படைகளை எதிர்கொண்ட புலிகள் ஒன்பது சிக்கிப்படைகளை அழித்தொழிக்கின்றார்கள்.

புலிகளை அழிக்க வந்த படையினர் புலிகளை எதிர்கொள்ள திராணியற்று தம் இழப்பின் முழு வெறியினையும் அப்பாவித்தமிழ் மக்கள் மீது திரும்புகின்றார்கள்.தமிழின வரலாற்றில் இந்தியாவின் துரோகம் அன்று வல்வெட்டித்துறையில் மிக கோரமாக வெளிப்பட்டது.

பெரும் சொத்துகள் சூறையாடப்பட்டது.70 இற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.பெண்கள், குழந்தைகள் , முதியவர்கள் என கொல்லப்பட்ட பலர் நிலத்தில் படுக்கவைக்கப்பட்டு முதுகில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

திருமணமான, திருமணமாகாத தமிழ்ப்பெண்கள் பாகுபாடின்றி பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.ஊரடங்கு பிறப்பித்து இந்திய ஆக்கிரமிப்பு படைகள் வல்வையில் ஆடிய வெறியாட்டம் இந்தியாவின் நிஜமுகத்தை உலகிற்குகாட்டியது.

இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகங்களை மட்டுமே செய்யும் என்பது உறுதியான தினங்களும் இத்தினங்கள்தான்.இந்தியாவின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை வேட்கை முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்ததும்,இன்றும் கூட ஈழத்தமிழர்களை இந்திய வஞ்சிப்பதும் வரலாறு.

இதையெல்லாம் நன்கறிந்த சம்பந்தர் மோடி எம்முடன் உள்ளார் என சொல்வதை என்னவென்று சொல்வது?ஒவ்வொரு ஈழத்தமிழனும் நினைவுகூரவேண்டிய ஒரு நிகழ்வு வல்வைப்படுகொலைகள்.

இந்தியம் விதைத்த பெருவலிகளில் இதுவும் ஒன்று..

அன்பரசன் நடராஜா