வன்மத்தை கக்கும் சிங்கள பேரினவாதம்…

70

ஒரு துளி நீரின்றி,ஒரு பருக்கை சோறின்றி பன்னிரண்டு நாட்கள் அகிம்சை என்னும் ஆயுதம் கொண்டு திலீபன் நடத்திய பெரும்போரில் வீரகாவியமான வரலாறு உலகினையே உலுக்கிய ஒன்று..

அகிம்சைமொழியில் ஒலித்த திலீபனின் குரலை இந்திய, சிங்கள அரசுகள் கண்டுகொள்ளவில்லை.
ஆனாலும் திலீபனின் தியாகத்தின் மேன்மையினை இந்திய தேச மக்களில் அநேகரும், பெரும்பான்மை இன சிங்கள மக்களில் அநேகரும் புரிந்துகொண்டதும்,
திலீபத்தின் நியாயங்களை உள்வாங்கிக்கொண்டதும் நடந்தது.

திலீபனின் இத் தியாகப்போர் தமிழினத்திற்கானது மட்டுமல்ல என்பதும், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்குமானவன் திலீபன் என்பதையும் உலகம் அறியும்.

திலீபன் வீரகாவியமாய் 33 வருடங்கள் தாண்டிய பின்னரும்கூட சிங்கள பேரினவாத அரசு அவன் மீது வன்மத்தை கக்குவதை நிறுத்தவில்லை.

அகிம்சைப்பேருருவமான திலீபனை பயங்கரவாதி என்னும் போர்வைக்குள் அடக்கி திலீபனின் நினைவுகளில் மூழ்கியிருக்கும் தமிழினத்தின் மீது சிங்கள அரசு தனது இனவாத வெறியினை பாய்ச்சியிருக்கின்றது.

கிளர்ச்சி செய்த ஜே. வி.பியினரையும், அதன் தலைவரையும் தியாகிகளாக நினைவுகூர அனுமதித்த சிங்களதேசம்,
ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனவழிப்பு செய்த சிங்கள இராணுவத்தினரை வெற்றி வீரர்களாக, தேசிய வீரர்களாக கொண்டாடும் சிங்களதேசம்,
தமிழர்கள் திலீபனை நினைவு கூர்வதை தடுப்பதென்பது பெரும் இனவாதம் அன்றி வேறில்லை.

இந்த இலட்சணத்தில் கோத்தா சகோதரர்களிற்கும், சிங்கள இராணுவத்திற்கும் சில புறம்போக்கு தமிழர்கள் வெள்ளையடிப்பதை காணும்போது பெரும்துயரம் ஏற்படுகின்றது.

திலீபனின் போராட்டம் தமிழினத்திற்கானது.
இன்று திலீபனின் ஒப்பற்ற அகிம்சைப்போரை இகழ்வு செய்யும் சில தமிழர்களிற்கும் சேர்ந்தே அன்று அவன் தன்னை விதையாக்கினான்.

திலீபனை பயங்கரவாதி என கூறுவதன் மூலம் சிங்களத்தின் நிஜமுகம் மீண்டும் ஒருதடவை நிருபணமாகியிருக்கின்றது.

திலீபனை தம் மகனாக, சகோதரனாக, அண்ணனாக, தம்பியாக, மாமனாக வரித்துக் கொண்ட தமிழினம் அவனை ஓய்வற்று கொண்டாடும்.
அவன் நினைவுகளில் மூழ்கி அவனை பூஜிக்கும்.
அதை தடுக்கும் உரிமை எந்தக்கொம்பனுக்கும் இல்லை…