கிளிநொச்சி வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி லெப் கேணல் வீரமணி
புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி இராணுவத்தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் வீரமணிதான்” என்று. பால்ராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்டவற்றில் மறக்க முடியாத கதையொன்று. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் இராணுவத்தின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல் வேலியைக் கண்டு பிடிப்பதே கடினமாயிருந்தது.
இராணுவ அவதானிப்பு நிலையங்கள், தொடர் ரோந்துகள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக் கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் இராணுவச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் ஆரம்பத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டு பிடிப்பதே சிரமமான பணியாயிருந்தது. கிட்ட நெருங்க விடாது வெளியே செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவம் தாக்கிக் கொண்டிருந்தான்.
இந்த நிலமையில் இராணுவத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே என எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள் நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.
வேவுக்கான பல முயற்சிகள் தோல்வி கண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப் பட்டான்.
வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி (அதை இங்கே குறிப்பிடுவது வேவு இரகசியத்தை அம்பலமாக்கிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது) உள்ளே அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளே போக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்று விட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றி வளைக்கப் பட்டு அடி வாங்கியது.
அதில் அணி குலைந்து சிதறியது. கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை.செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவு வீரர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் அடி வாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள்.
வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டு சென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி.
எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு இராணுவத்தைப் பிடித்து விட்டதாகவும் அவர்கள் மயங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்த போது அந்த இராணுவத்தினர் என்பது எங்கள் வீரமணியும் சகவேவுவீரனும் என்பது தெரியவந்தது.
வெளியே வேவுக்கு அனுப்பிய வீரமணி கிளிநொச்சியில் உள் நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் பெறுமதி வாய்ந்த தகவல்களோடும் சகிக்க முடியாத வாழ்வு அனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வெளி வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக் கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.
செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான். அவனைப் பெற்றவள் அறியக் கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இரு நாளும் தளத்தைச் சுற்றிப் பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்ற போது முடியாமல் போனதாம். ஒவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித் துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும், தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டு வந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.