இன்றைய நிகழ்வில் அன்றைய நினைவுகள் – கரும்பறவை

158

ஆனையிறவுப் போர்க்களத்தின் கட்டளைப் பணியகம் அங்கு அத்தாக்குலை ஒருகிணைந்து நடாத்திக்கொண்டு இருக்கும் பொட்டுவின் கண்ணெதிரில் ஒரு போராளி சோர்ந்த நடையில் சென்று கொண்டு இருந்தான்
சரியெடாப்பா நாளைக்கு உன்னைச் சண்டைக்கு விடுறன் இண்டைக்கு உசாரா வேலை செய் இவ்வாறு அப் போராளியைப் பார்த்துக் கூறிய பொட்டு என்னிடம் திரும்பி, எல்லாரும் சண்டைக்குப் போக வேணுமெண்டா என்ன செய்யிறது?மற்ற வேலைகளையும் பாக்க வேணும் தானே.பாருங்கோ!இண்டைக்கு சண்டைக்குவிடேல்லை எண்டவுடன் அலுப்படிச்சுக்கொண்டு திரியிறான் என்றவாறே அன்றைய பகல் போரின் முடிவை அறிய தனக்கு முன்னே உள்ள விபரங்களில் பார்வையைச் செலுத்தினார்.காயமடைந்தோர் பட்டியல் தனியாகவும்,வீரமரணமடைந்தவர்களின் பட்டியல் தனியாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது.ஒவ்வொருவர் பெயரிற்குப் பக்கத்திலும் இவரிக்கு இன்ன இடத்தில் இவ்வாறான காயம் ஏற்பட்டது என சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதலில் வீரமரணம் அடைந்தவர்கள் பட்டியல் -பட்டியலிலிருந்த பெயர்களைப் பொட்டு படிக்கும் போது எவ்வாறான காயங்களினால் இவர்களின் வீரமரணம் ஏற்பட்டது.எந்த முனையில் இச் சம்பவம் இடம் பெற்றது போன்ற விபரங்களை ஒரு போராளி விளக்கிக் கொண்டிருந்தான் .இடையில் இரு பெயர்களை வாசித்த அப் போராளி

இவை இரண்டு பேரும் பீப்பாக் குண்டால தான் வீரமரணம் என்று சொல்லி விட்டு அவர்களுக்கு ஏற்பட்ட காயம்…. பற்றி இல்லை ,அவர்கள் உடல்கள் கிடந்த கோலம் பற்றி விளக்க வாயொடுத்தான் சொல்லாத..
இடை மறித்தார் பொட்டு அவர்கள் கிடந்த காட்சி மனக்கண்ணில் தெரிந்து இருக்கும்தானே வாயாலும் கேட்டு… வேண்டாம்! அந்தக் கணத்தில் பொட்டுவின் முகம் ஆயிரம் செய்திகளைச் சொன்னது.

ஒவ்வோரு போராளியின் வீரமரணம் பற்றியும் அவர்களின் காயம்பற்றியும் விளக்கி முடியும் அந்த இறுதி நேரத்தில், இதை விட இன்னும் மூண்டு பேர எடுத்தனாங்கள் அது ஆம்பிளைகளின்ர BODY ” இந்த ஒரு வசனத்தில் அந்தப் போராளிகளின் உடல் எந்த மாதிரியான கோலத்தில் கிடந்திருக்கும் என்பதை அந்தக் காட்சி மனதில் படிய வைத்தான் அப்போராளி .அந்த வசனம் போரட்டத்தின் வளர்ச்சி பற்றிய நிலையை அப்படியே என் மனதிரையில் பதிந்தது.இது ஒரு ஆண் போராளியின் உடல் என இனங்காட்டும் காலகட்டம். நான் 1982 -1983 ஆம் ஆண்டுக் காலத்தின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தேன் .

போரட்டத்தில் அழிவு வரும்- சாவு வரும் -பிரிவு வரும் எல்லாம் தெரிந்து கொண்டுதான் போரட்டத்திற்குள் வந்தோம் .ஆனால் ,எம்மில் ஒருவனைப் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டதும் அது மிகவும் கொடியதாகத் தெரிந்தது எமக்கு. அக்காலகட்டத்தில் நாம் அதைத் தாங்கிக் கொள்ளும் மனோ வலிமையைப் பெற்றிருக்கவில்லை. சங்கர் இனிமேல் வரவே மாட்டான் -அவனது பிரிவு நிரந்தரமானது என்பதை தெரிந்து கொண்ட போது எமது உடலில் ஒரு அங்கம் கூறைந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது.தலையணைகளை நனைக்கக் கூடிய அளவிற்கு எம்மிடம் கண்ணீர் உண்டா?ஏன் இப்படி நாம் நாம் நடந்து கொள்கிறோம்?இந்தப் பிரிவையொல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத நாம் போராடுவதற்கு தகுதியானவர்கள்தானா? என்றெல்லாம் எம்மிடம் வினா எழுப்பிய போது மொன்மையான சுபாவம் உள்ளவர்களே புரட்சிவாதிகள் ஆகின்றார்கள் எமது இனத்திற்கும் மற்றவர்களிற்கு ஏற்படும் கொடுமைகளைக் கண்டு அவர்களால் மனம் பொறுக்க முடிவதில்லை. அவர்களின் இந்த இயல்புதான் கொடுமைகளிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி அவர்களைப் போராளிகளாக உருவாக்கின்றது.மற்றவர்களுக்கு என்ன கொடுமை துயரம் இழைக்கப் பட்டாலும் அதைப் பார்த்துக் கொண்டு அதைச் சகித்துக் கொண்டு இருக்க கூடிய கடின மனமுடையவர்களே. போராட்டத்திற்கு வெளியில் நிற்கின்றார்கள்.எனவே அழுவது என்பதை கோழைத்தனம் எனக் கருதலாகாது .மற்றவர்களுக்காக ஒருவன் அழுகின்றான் என்றால் கண்ணீர்ற்கிடையே தெரியும் அவனது மனிதாபிமானத்தை நேசத்தைதான் காண முடியும் என்று அன்று சீலன் எமக்கு விளக்கம் அளித்தான். அப்போதொல்லாம் எமக்குத் தெரியவில்லை எனக்காகவும் அழ நீங்கள் தயாராக இருங்கள் என்பதைச் சொல்வதற்காகத் தான் இப்படி சொன்னான் என்று

அந்த நாளும் வந்தது -உலகில் எங்குமே நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்க முடியாத வகையில் அவன் எம்மைப் பிரிந்தான் அவனது இழப்பு அதைவிட அது நடைபெற்ற விதம் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருந்த அந்த காட்சி எம்மை உலுக்கி விட்டது வெளியில் நிண்டு அழக் கூடாது உள்ளுக்குப் போய் அழுங்கோ தனது ஒவ்வோரு பிள்ளைகளின் போக்கு பற்றியும்- என்ன சொன்னாலும் இவர்களால் அழுவதை நிறுத்த முடியாது- இதைவிட அழுகைதான் மனப் பாரத்தை குறைக்க வல்லது என்ற உளவியலைத் தெரிந்து கொண்ட தலைவர் இவ்வாறு எமக்கு அறிவுறித்தினார்.இதுக்கு….. இதுக்கு …நாங்கள் என்ன செய்யிறது?…அதுதான் அதை செய்ய புறப்பட்டோம் பழிவாங்க கூடாது! இது விடுதலை இயக்கதிற்கு உரிய பண் ..அல்ல இதைத்தான் சித்தாந்தம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவர்கள் போதித்து கொண்டு இருந்தார்கள் ஆனால் அதுதான் எமக்கு பலமாக இருந்தது -நாம் பழி வாங்கினோம் கொதித்துக் கொண்டிருந்த மன உலையை திருநெல்வேலியில் இறங்கிக் கொண்டிருந்தோம் .ஆயுதங்களிற்காகத்தான் அத்தாக்குதல் நடத்தப்பட்டது என எம்மில் ஒருவரும் கருதவில்லை.

எப்படி எப்படி நினைத்தோமோ அப்படியே சண்டையும் அமைந்தது.ஒரு காட்சி சூடு வாங்கிய ராணுவ வீரன் ஆயுதங்களுடன் கிடந்தான் எம்மில் ஒருவன் அவனை நெருங்கினான் .அக்கணத்தில் அந்த ராணுவ வீரனது துப்பாக்கியைக் கைப்பற்ற வேண்டும் மேன்ற உணர்வு அவனுக்கு வரவில்லை. மாறாக அவனை புரட்டி அவனது இராணுவ கத்தியை எடுத்து டேய் நீ தான் எங்கட சீலனை சுட்டனீ ?நீ தான் எங்கட சீலனை சுட்டனீ ?…அவனது குரல் அந்த விம்மல் அவனை நாம் தடுக்கவில்லை. சீலனைச் சுட்டவன் யாரோ இவன் யாரோ என்பது எமக்குத் தெரியாததல்ல.ஆனாலும் நாம் அதைதான் செய்தோம். சித்தாந்தக் காரர்கள் அதைப்பேசிக்கொண்டே இருக்கட்டும். அழது கொண்டே அவன் செய்தவை அவன் சீலனை எந்தளவிற்கு நேசித்தான் என்பதை எமக்கு புரிய வைத்தன ஆம்…. உலகில் புலிகள் வித்தியாசமானவர்கள்தான் இதைத்தான் தொண்ணூற்றோராம் ஆண்டுச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

மீண்டும் தொண்ணூற்றோராம் ஆண்டில் நிற்கிறோம் என்ற நினைவுவந்தது 14.07.91 அன்று மாலை 5:15 மணி ஆனையிறவில் இருக்கும் காவலரண் ஒன்றை நோக்கி சென்று கொண்டிருந்தோன்.காவலரண் பக்கமிருந்து வந்த ஒரு வாகனம் என்னை விலத்திக்கொண்டு யாழ்ப்பாணப் பக்கமாகப் சென்றது.எட்டிப் பார்த்தேன் சற்று முன்னர் வரை எதிரியை நோக்கி துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்த ஒருவன் மாவீரன் என்ற அந்தஸ்துடன் பயணித்துக்கொண்டிருந்தான் .வாகனத்தில் அவனது புகழுடலை ஏற்றிவிட்டு சிலர் வந்து கொண்டிருந்தனர்.அதில் ஒரு முகம் எனக்கு நன்கு பரிச்சயமானது.

ஆஞ்சநேயர்- அழைத்தவாறே அருகில் சென்றேன் .

பெடியன்ர பேர் என்ன?
கணேஷ் சாவகாசமாக அனைவரும் ஒரு புளியமரத்தின் கீழ் இருந்த காவலரணிற்கு முன்னால் உட்காந்தோம் உரையாடல் தொடந்தது மேலே சகடை சுற்றிக்கொண்டிருந்தது.அதன் இரைச்சல் கச்சேரியில் கேட்கும் ஆர்மோனியத்தை நினைவு படுத்தியது.

ஆஞ்சநேயரிக்கு பக்கத்திலிருந்த ஒரு போராளியிடம் சற்று முன்வரை உங்களுடன் காவலரணில் இருந்த ஒருவன் உங்கள் நண்பன் இப்போது உங்களை விட்டுப் பிரிந்து விட்டான்.இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் உங்கள் மன உணர்வு எப்படி இருக்கு? என்று கேட்டேன் சோகத்துக்கிடையே மெல்லிய புன்னகையுடன்

இதை எல்லாம் எதிர்பார்த்து இப்படி எல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சுதான் போராட்டத்துக்கு வந்தம்.ஆனபடியால் இதுக்காக நாங்கள் அஞ்சப்போவதில்லை.பின் வாங்கப்போறதுமில்லை என்றவாறே தனது துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தான் சீலன் என்ற அப்போராளி.

சரி ஆஞ்சநேயர் இதை பற்றி நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?என்றேன்.

இந்த போர்க்களத்தில் இப்ப உங்கட கண்ணுக்கு முன்னால போராளிகள் பதுங்கு குழி வெட்டுறார்கள்.மண் மூட்டை அடுக்கின்றார்கள்.இங்கு உள்ள சகல கஷ்டமான வேலைகளையும் செய்கின்றார்கள்.பிறகு இவர்களே காவல் கடமைக்கும் போகிறார்கள். இப்படி களைப்படைந்த நிலையில் ஒரு போராளி காவல் கடமைக்குப் போகும் போது இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன என்றார்

இதை தடுக்க என்ன வழி என்று நினைக்கின்றீர்கள்?என்று கேட்டேன் .
போர் களத்தில் எமக்கு ஒரு துணைப்படை வேண்டும் அது இருந்தால் போராளிகள் களைப்படையாமல் காவல் கடமையில் ஈடுபடுவார்கள்.இதைவிட எமக்கு இப்படியான சூழலில் இன்னும் உற்சாகத்துடன் நிற்க விஷேசமான பயிற்சிகள் வேண்டும் என்றார்.

இரு காலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன் போராட்டத்தின் வளர்ச்சி தெரிகிறது.ஆள் எண்ணிக்கையில் ஆயுத எண்ணிக்கையில் மட்டும் அல்ல சகல வழிகளிலுமே நாம் வளர்ச்சி அடைத்து விட்டோம்.அன்று ஒருவரின் மரணம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது?இன்று இது ஆணின் சடலம் என்று குறிப்பிடுமளவிற்கு போரின் தன்மை மாறிவிட்டது.இத்தனைக்கும் நடுவிலும் போர்முனையில் அனுப்பாததற்காக கோபித்துக் கொள்கிறார்கள் போராளிகள். ஒருவனது மரணம் ஏற்பட்டவுடன் இதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் இதுதான் போராட்டத்தின் பரிணாம வளர்ச்சி.

1991 வெளிச்சம் இதழ்