விழிப்புணர்வே விடுதலைக்கான முதல்படி

மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்ப்படாதவரை, அரசியல்வாதிகள் மக்களை ஆட்டுமந்தைகளாக மேய்க அனுமதிக்கும் வரை, சமூகநீதி சாத்தியமில்லை

76ஆம் ஆண்டு சோறா? சுதந்திரமா? என என் கைப்பட எழுதிய கைத்துண்டுப் பிரசுரத்தை, யாருக்கும் தெரியாமல் அண்டைய வீடுகளில் போட்ட அந்த இளைய வயது முதல், கடந்த 45 ஆண்டுகளாக சமூகநீதி மறுக்கப்படும் மனிதத்திற்காக இந்த ஆத்மா துடிக்கிறது. 10 நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவின் மினியப்பொலிஸ் வீதியில், வெள்ளையின பொலிசார் ஒருவனால் முழங்காலால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், “என்னால் மூச்சுவிடமுடியவில்லை… என்னைக் கொண்றுவிடாதீர்கள்”, என கறுப்பின சகோதரன் ஜோர்ச் கதறிக் கொலை செய்யப்பட்டதைப் பார்த்தது முதல் இந்த உடல் பதறுகிறது.

சமூகநீதி மறுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்தவன் என்பது மாற்றமுடியாத என்னுடைய அடையாளம்.. அது மட்டுமல்ல சமூகநீதி மறுக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன்.. அதை மறைக்கவோ, மறந்துவிடவோ இந்த ஆத்மா என்றும் தயாரில்லை… அவ்வாறு செய்ய முயன்றால், அது மனிதத்திற்கு நாம் வழங்கும் மரணமாகும்… அதாவது சமூகநீதியை மறுப்பவர்களுக்கும், எமக்கும் எவ்வித வித்தியாசமும் இன்றிப் போகும்… இந்த உலகம் அனைவருக்குமான சமூகநீதியை மறுதலிப்பவர்களால் இன்றும் நிறைந்து கிடக்கிறது.

என் தாய் மண்ணிலும் சரி, இந்தியாவில் தமிழக மண்ணிலும் சரி, என் மக்களின் சமூக நீதிக்கான பயணம் பல வேளைகளில் பெரும் சவால் நிறைந்ததாக அமைந்தது. பின்னர் தென் ஆபிரிக்காவில் இருந்தகாலம், பல்கலைக்கழகம் வரை, இனவாதத்தின் இன்னொரு பரிமாணத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கியது. அப்போது மன்டோலா கூட விடுதலையாகாத காலம். கனடாவில் 30 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தது முதல், இந்த மண்ணிலும் என் மக்கள் நலன் சார்ந்தும், பொதுவாகவும், பல இனவாத சமூகநீதி மறுக்கப்பட்ட களங்களை, நிறையவே கண்டிருக்கிறேன்.

மனிதம் சார்ந்த சமூகநீதியின் மாற்றத்திற்காக, என் பயணம் என்றும் நின்றதில்லை.. அதிலும் 10 ஆயிரம் மைல்கள் கடந்தும், இந்த கனடிய மண்ணிலும், எம் சுவாசத்தை நசுக்கிவிட முயன்ற, முயலும், சிறீலங்காவின் நச்சுக்கரங்களை எதிர்கொள்வதே பலவேளைகளில் பெரும்வலிதரும் துன்பியல் நிகழ்வுகளாகவே அமைந்தது.. அவை எவ்வாறு அமைந்தன? என்றே தெரியாது எம்மில் பெரும்பகுதியினர் இன்றும் இருக்கின்றோம்..

இவற்றை எல்லாம் எழுத வேண்டும்… தம்மை சுற்றியுள்ள ஆபத்துக்களை இன்றும் புரியாத என்னின மக்களை, வழிப்பாக வைக்கவேண்டும் என்ற ஆவாவிற்கேற்ப, விரைந்து அனைத்தையும் எழுதிவிடும் வாய்பை மட்டும், பலவேளைகளில் என் இன்றைய உடல்நிலை வழங்குவதில்லை.. சகோதரன் ஜோர்ஜ்சினுடைய கொலை எழுப்பியுள்ள எழுச்சி, இவற்றை எழுத எனக்குள் ஒரு உத்துவேகத்தை தரும் என நம்புவோம்..

சமூகநீதியை மறுக்கின்ற சமூகத்தில் உள்ள மக்களில், மனமாற்றம் ஏற்படாதவரை. ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கான சமூகநீதி சாத்தியமில்லை.. அந்தவகையில் இன்று அமெரிக்காவில் குறிப்பாகவும், உலகப்பரப்பில் பொதுவாகவும், சமூகநீதிக்காக கறுப்பின மக்களுடன் களம் காணும் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை, மாற்றம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது… மறுபுறத்தில், சிங்கள மக்களாக இருந்தாலும் சரி, சிங்கள கல்விமான்களாக இருந்தாலும் சரி, சிங்கள ஊடகங்களாக இருந்தாலும் சரி, சிங்கள மதத்தலைவர்களாக இருந்தாலும் சரி, அதிகரித்த எண்ணிக்கையில் இனவாதத்தினூடாக தமிழ் மக்களின் சமூகநீதி மறுக்கப்படுவதற்கு துணைபோவது பெரும் துயர்தருகிறது…

ரம் போல, ராஜபக்சாக்கள் போல, ஏன் சிங்கள அரசியல் தலைமைகள் போல, தொடர்ந்தும் மக்களை வெறும் ஆட்டுமந்தைகளாக பயன்படுத்த, அவர்கள் சார்ந்த சமூகம் அனுமதிக்கும்வரை, அவர்களிடம் இருந்து சமூகநீதி சாத்தியமேயில்லை… இது தான் இயற்கையின் விதியும் கூட… இன்றைய நாளில், சமூகநீதி மறுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்த உங்களிடமும், என்னுடைய ஆத்மார்த்தமான வேண்டுகோள்.. மனிதம் வாழ சமூகநீதிக்கான உங்கள் குரலை என்றும் இழந்துவிடாதீர்கள்.. அதேவேளை யாருக்கும் அடிமைப்பட்டு, உங்கள் மனிதத்தைத் தொலைத்தும் விடாதீர்கள்… தவறுகள் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும், தட்டிக் கேட்கத் தவறாதீர்கள்… சமூக நீதியை மறுப்பவர்களுக்கு என்றும் துணைநிற்காதீர்கள்.. சமூகநீதிக்கான உங்கள் குரல் என்றும் ஓங்கியே ஒலிக்கட்டும்..

“The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything.” – Albert Einstein