வடக்கில் கொட்டமடித்த ஆவா குழுவை அடக்கி விட்டோம் – கொட்டமடிக்கும் விமல் வீரவன்ச!

90

வடக்கில் கடந்த ஆட்சிக்காலத்தில் கொட்டமடித்த ஆவா குழுவை அடக்கி விட்டோம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச.

2/3 பெரும்பான்மையை சரியாகப் பயன்படுத்தி நாட்டை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவரும் ஒரு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று (30) பிலியந்தலையில் நடந்த வரவேற்பில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கூட, எங்களுக்கு 2/3 வது பெரும்பான்மை கிடைத்தது, ஏனெனில் இந்த நாட்டின் மக்கள் ஸ்திரத்தன்மையை கோருகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த நாட்டு மக்கள் குழப்பமான ஆட்சியை அனுபவித்திருக்கிறார்கள். இதுபோன்ற குழப்பத்தை மீண்டும் அனுபவிக்கக் கூடாது என மக்கள் 2/3 பெரும்பான்மையை வழங்கினர். மக்கள் அந்த 2/3 பெரும்பான்மையை கோட்டபய ராஜபக்ஷவுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வழங்கினர்.

அந்த நம்பிக்கையில்தான் ஒரு புதிய அரசியலமைப்பு அல்லது ஒரே சட்டம் அறிமுகப்படுத்தப்படும். புதிய அரசியலமைப்பு ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனித்தனி சட்டங்கள் இருப்பதை நிறுத்தி முழு நாட்டையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

அத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தின் ஆரம்ப வரைவு அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தத்தால் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பம் நமது அரசுக்கு பொருந்தாது.

அந்த குழப்பம் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும் பொருந்தாது. அந்த சக்திகள் ஒருவருக்கொருவர் மோதப் போவதில்லை. எனவே, இன்று 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக நாட்டை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதன் அவசியத்தை நான் காண்கிறேன்.

அமெரிக்க தூதரை சந்தித்த சம்பந்தன், சிறுபான்மையினரை காப்பாற்றும்படி கோரியிருக்கிறார். அவர்கள் இந்த ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கடந்த நான்கரை வருடங்களில் வடக்கில் ஆவா குழு அட்டகாசம் செய்தது. இப்பொழுது அவர்களை அடக்கி விட்டோம் என்றார்.