விண்ணேறு!

70

எத்தடை வரினும் முன்னேறு — மன

இடரினைக் கிழித்தே விண்ணேறு! — கடல்

முத்தினைப் போலே ஒளிவீசு! — நீ

மூடரைச் செதுக்கும் உளிவீசு!

கத்தியின் மீதும் நடைபழகு — சில

கயவரை ஒழிக்கும் படைபழகு! — உன்

முத்திரை பதிப்பாய் காலடியில் — கொஞ்சம்

முயன்றால் அடைவாய் நாலடியில்!

புல்லையும் வில்லாய் நீமாற்று — வரும்

புயலிலும் அணையாத் தீஏற்று! — பெருங்

கல்லையும் நொறுக்கும் வலிமைபெறு — எவரின்

கண்களின் முன்னும் எளிமைபெறு!

முல்லையைப் போலே மணம்பரப்பு! — பொய்

மூச்சினர்க் கெதிராய்ச் சினம்பெருக்கு!

சொல்லிய சொல்லில் பொலிவுபெறு — நீ

சொல்கிற சொல்லில் தெளிவுபெறு!

தாள்களை வேல்போல் கூராக்கு! — இத்

தரையினை முயன்றே நேராக்கு!

தோள்கள் இரண்டை நீநிமிர்த்தி — இனித்

தொடங்குக வாழ்க்கைப் பெரும்போரை!

சேற்றினுள் உன்னைப் புதைத்தாலும் — நற்

செந்தா மரைபோல் வெளியெழுவாய்!

ஆற்றினில் தூக்கி எறிந்தாலும் — ஒரு

அழகிய படகாய் நீமிதப்பாய்!

பெருஞ்சுடர் நடுவே எரிந்தாலும் — உனைப்

பெரும்புவி நினைவில் கொள்ளும்படி,

அரும்பெருஞ் செயலே நீசெய்வாய் — அதில்

அடையுமிவ் வுலகம் நற்பேறே!

— ஏறன் சிவா

ஆடவை(ஆனி) 08, 2051