வீழ்வது அவமானம் இல்லை வீழ்ந்து கிடப்பதே அவமானம் வீழ்ந்த போதெல்லாம் எழுந்து நிற்போம்.

தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு தினமான இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவிடத்தில் முழந்தாளில் மண்டியிட்டு மனமுருகி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்ற 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தனது இன் உயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் வருடாவருடம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை குறித்த நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு நீதிமன்றால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் மாணவர் ஒன்றிய தலைவர்களுக்கும் குறித்த நிகழ்வுகளை முன்னெடுக்கக்கூடாது என யாழ் நீதவான் நீதிமன்றால் கட்டளை அனுப்பப்பட்டிருந்தது.

அதன் காரணமாக குறித்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மாணவர்கள் இடைநிறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தியாக தீபம் உயிர் நீத்த இறுதி நாளான இன்று அவரின் உடலை விட்டு உயிர்பிரிந்த நேரம் 10.45 மணிஅளவில் யாழ் பல்கலையில் அமைந்துள்ள மண்ணுக்காய் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் அதில் முழந்தால்படியிட்டு உருக்கமாக தமது அஞ்சலியை செலுத்திவிட்டு சென்றனர்.
அஞ்சலி நிகழ்வுகள் முற்றாக தடைசெய்யப்பட்ட நிலையில் தமது நினைவுதின ஏற்பாடுகளை இடைநிறுத்தியிருந்த மாணவர்கள் இன்று தமது உள் உணர்வுகளை முழந்தாலில் மண்டியிட்டு உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தனர்.