விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கம்.

147

விடுதலைப்புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீக்கப்பட்டுவிட்டதாக முகநூலெங்கும் பலர் புளங்காகிதம் அடைகிறார்கள், நல்லது. மகிழ்ச்சி எப்போதும் தேவையானதே.
ஆனால் நான் எழுதப்போவதை வாசித்துவிட்டு என்னைப் பலர் திட்டக்கூடும். ஆனால் எழுதவேண்டியது எனது கடமை…!

அதற்கு முன் சில கேள்விகளை உங்கள் முன் வைத்துவிடுகிறேன். இன்று தீர்ப்பு வெளிவந்ததாகச் சொல்லப்படுகின்ற தடை நீக்கத்திற்கான வழக்கின் அடிப்படைச் சாராம்சம் பற்றி அறிந்தவர்களுண்டா ? இந்தத் தீர்ப்பை முழுமையாக வாசித்தறிந்தவர்கள் எத்தனை பேர் ? இதன் உண்மையான நோக்கத்தை வென்றுள்ளவர்கள் யார் ?

இந்தத் தடைநீக்க அறிவிப்பானது, தமிழர்களைப் பரந்தளவு உளவியல் உவகையில் மேம்படுத்தக்கூடியது. ஆனால் அரசியல் அடிப்படையில் இது புலிகளையும் அவர்களது போராட்ட அடிப்படையையும், அறத்தையும் பின்னுக்குத்தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது.

“புலிகள் இப்போது இல்லை, அவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டுச் சரணடைந்துவிட்டார்கள், இனி அங்கே போராட்டம் உருவாக வாய்ப்பில்லை, ஆதலால் தடையை நீக்குக…” இதுதான் இன்றைய தடைநீக்கத்திற்கான முறைப்பாட்டின் சுருக்கம்.

கேள்வி 1 : போராட்டத்தை முழுமையாக நிறுத்திச் சரணடைந்ததாக யாரிடம், எங்கே புலிகள் கூறினார்கள்..?

எமது இலட்சியத்தை அடையும்வரை, சாகும்வரை போராடுவோம் என்பதுதான் புலிகளது உறுதியான குறிக்கோள், சரணடைதலுக்கு அங்கே இடமில்லை. இறுதி வீரன் விழும்வரை நின்று போராடிய நந்திக்கடல் இதற்குச் சாட்சி. (எமது போராட்டத்தில் இலட்சியம் நிறைவேறாது போனால் இப்போராட்டத்தை அடுத்த சந்ததியிடம் கையளிக்கும் தெளிவான பார்வை எம்மிடம் உண்டு – தேசியத்தலைவர்).

கேள்வி 2 : புலிகள் இல்லை என்றால் நீக்கப்படும் தடை யாருக்காக…?

நீக்கப்பட்ட இந்தத்தடையின் மூலம் இனி யாரும் புலிகளையோ, புலிகளை நேசிப்பவர்களையோ “தீவிரவாதிகள்” என்று சொல்லப்போவதில்லை.

ஆனால் 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது விதித்த தடையே, தமிழீழ அரசின் அழிவிற்கும், ஏராளமான மக்களின் சாவிற்கும் வழிகோலியது, இந்த ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கான அழுத்தத்தைத் தந்த பிரித்தானியா, 2002 இல் புலிகள் மீது விதித்த தடையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கான அடிப்படை. புலிகளையும் அழித்து, நடைமுறை அரசையும் அழித்தபின், தற்போது நீக்கப்படும் தடையினால், அழிக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசு மீளப்பெறப்படுமா…?

ஆயுதம் இன்றி புலிகள் இல்லை, நமது தேசியக்கொடியிலேயே ஆயுதமும் சன்னங்களுமே வரையப்பட்டிருக்கிறது. நமது உரிமைகள் அனைத்தும் ஆயுதத்தால் மீட்கப்பட்டவை என்பதனாலேயே நலிந்து நின்ற இனத்தின் காவல்தெய்வங்களாக புலிகள் மதிக்கப்பட்டார்கள். (இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் அடித்துப் பெறப்பட்டவை – தராகி)
அவ்வாறான நிலையில்; புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்பது “மல்லாக்காப் படுத்துக் காறித்துப்பும் வேலையே” தவிர வேறில்லை.

“புலிகள் இல்லை, ஆதலால் தடையை நீக்கு” என்பதன் உட்பொருள் யாதெனில்; புலிகள் இருந்தால் தடை அவசியமானதே என்பதேயாகும், என்ற உண்மை புலப்படப் பலருக்கு நீண்ட காலமாகலாம்.

இவர்களது வாதப்படியே தடை நீங்கியது என்றே வைத்துக்கொள்வோம்.இல்லாத புலிகளின் தடையை நீக்குவதால் இனியென்ன அதீத மாற்றம் இலங்கையில் நிகழ்ந்துவிடும் என யாராவது சொல்ல இயலுமா ?

இந்தத்தடை 2006 இல் விதிக்கப்படாதிருந்தால், எமது நிலை இப்போது இந்தளவிற்குச் சீரழிந்திருக்காதல்லவா…? இதன்மூலம் என்ன உணர்கிறீர்கள்…?

இந்தத் தடைகள், நீக்கங்கள் அனைத்துமே ஏற்கனவே திட்டமிட்டு வைக்கப்பட்ட “Agenda files” என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும்.

சரி, வேறு என்னதான் செய்வது என்கிறீர்களா..?

“2006 ஆம் ஆண்டில் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையே, தமிழர்களின் அழிவிற்குக் காரணம்” என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொள்ள வழக்காடவேண்டும்.

அதற்கு முன்; புலிகள் இறுதிவரை ஆயுதங்களைக் கைவிடவோ அன்றிச் சரணடையவோ இல்லை என்பதையும், அவர்கள் போராடியபடியே வீழ்ந்தார்களே அன்றி போராட்டத்தை எங்கேயும் நிறுத்தவில்லை என்பதையும் நாம் உரத்துச் சொல்லப் பழக வேண்டும். காரணம் புலிகள் தாமாகவே போராட்டத்தை நிறுத்தியிருந்தால், அது தமிழீழம் கிடைத்த தருணமாக இருந்திருக்கும்.

உலக அரசுகள் ஒன்று சேர்ந்து புலிகளது போராட்டத்தை நிறுத்தினார்களே தவிர, புலிகள் ஒருபோதும் போராட்டத்தை நிறுத்தவில்லை என்பதைத் தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

இன்றைய தீர்ப்பின் சாராம்சம் பற்றி; எம்போராட்ட வரலாற்றை நன்கறிந்த சட்டவாளரிடம் கேட்டேன். “உங்களது கொடியிலிருக்கும் புலியின் பல்லை அவர்கள் பிடுங்கிவிட்டு, பழியை உங்கள் தலையில் சுமத்தியிருக்கிறார்கள்” என்று பதிலிறுத்தார்.

ஆயினும் வழக்காடிய பெருமக்களின் “முயற்சிக்கு” வாழ்த்து உரித்தாகட்டும்.

குறிப்பு : எனது பதிவை எடுத்துச்சென்று TGTE இற்கு எதிரான வஞ்சத்தைத் தீர்ப்பதற்கான “பண்டிவாளாக” உபயோகிப்பதைத் தவிர்த்துக்கொள்க. அவர்களது முயற்சி தவறல்ல. முன்னெடுத்த விதம் ஆராய்ந்து தெளியவேண்டியது.
-தேவன்