சிறீலங்காவை ஓரம்கட்டும் மேற்குலகம்

44

கடந்த புதன்கிழமை, 2021 இல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கான தற்காலிக பாதுகாப்புசபை உறுப்பினர்கள், ஐவரைத் தெரிவதற்கான வாக்களிப்பு ஐ.நா பொதுச்சபையில் நடைபெற்றது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 192 நாடுகளின் தூதுவர்கள் அதில் தங்கள் நாட்டின் தெரிவான நாடுகளிற்கு வாக்களித்தனர்.

ஆசிய நாடுகள் சார்பில் போட்டியிட்ட இந்தியாவிற்கும், ஆபிரிக்க நாடுகளில் கெனியாவிற்கும் வாக்களித்த சிறீலங்கா, மேற்கத்தைய உலகம் மற்றும் ஏனைய நாடுகள் சார்பில் இரண்டு உறுப்பினர்களின் தெரிவிற்குப் போட்டியிட்ட, கனடா, அயர்லாந்து மற்றும் நோர்வேயில் எந்தவொரு நாட்டிறற்கும் வாக்களிக்கவில்லை. இந்த நாடுகளில் இருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பிருந்தும், எந்தவொரு நாட்டிற்கும் வாக்களிக்காக ஒரே நாடும் சிறீலங்கா தான் என்பது, பொதுச்சபையில் பலரின் புருவத்தையும் வாக்களிப்பின் போது உயர்த்தவைத்தது.

அவர்களுக்கு ஒரு கடுமையான செய்தியை அனுப்பவே தான் யாருக்கும் வாக்களிக்கவில்லை என, சிறீலங்கா சொல்லிக் கொண்டாலும், ஏனைய நாடுகள் அனைத்தையும் வாக்கிற்காக அணுகிய மூன்று நாடுகளில் எதுவும், சிறீலங்காவின் வாக்கிற்காக அதனை அணுகவில்லை என்பதே சிறீலங்காவின் பெரும் கடுப்பிற்கும், வாக்களிக்காமைக்கும் காரணம் என அந்நாடுகளின் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிந்தது.

அயர்லாந்து மக்கள் நீதிமன்றத்தை அனுமதித்து, அது சிறீலங்கா குறித்த போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தியது முதல், அயர்லாந்து குறித்த கடுப்பில் சிறீலங்கா உண்டு. இருக்க ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா விடயத்தில் கடும்போக்கைக் கடைபிடிக்க, அயர்லாந்தே முதன்மைக் காரணியாக இருப்பதுவும் சிறீலங்காவின் கடுப்பிற்கு முக்கிய காரணம்.

கனடா மற்றும் நோர்வே ஆகியன, அங்கு வாழும் பெரும் எண்ணிக்கையிலாக ஈழத்தமிழர்கள் காரணமாக, தமக்கு எதிரான அரசுகள் என்ற எண்ணம் சிறீலங்காவில் நீண்டகாலமாகவே வேரூன்றியுள்ளது. சிறீலங்காவின் வாக்கைக் கோரினால், அதை தனக்கான அனுகூலமாக பயன்படுத்தி, தமக்கு சிறீலங்கா வகுப்பு எடுக்கும் என்பதைப் புரிந்தே, அந்நாடுகளும் சிறீலங்காவை அணுக முயலவில்லை எனவும் சொல்லப்படுகிறது. ஆகமொத்த்தில் ஓரம்கட்டப்பட்டுவிட்டோம் என்பது கௌரவக் குறைச்சல் என்பதால், தானே அவர்களை ஓரம் கட்டிவிட்டேன் என கதையளக்க முயலுகிறது கோத்தா அரசு.

நன்றி – Nehru Gunaratnam