2000ம் ஆண்டு யாழ் கைப்பற்றுதலை தடுத்த துரோகி கருணா

630

எமது ஆயுதப் போராட்டத்தின் இறுதி இலக்காக கருதப்பட்ட யாழ் நகர் நோக்கிய எமது தலைவரின் படையெடுப்பு வெற்றியளித்திருந்தால் நிச்சயம் நாம் இன்று சுதந்திர தமிழீழ தனியரசை அடைந்திருக்க முடியும்.

ஆனால் அவ் இலக்கை அடையவிடாது தடுத்தவன் துரோகி கருணாவே.

எதிரியின் பாரிய படைத்தள மையமாக கருதப்பட்ட யாழ் குடாநாட்டை எமது தேசியத் தலைவர் அவர்கள் 2000மாம் ஆண்டு தான் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் கைப்பற்றியிருந்தால் நிச்சயமாக நாம் தமிழீழம் எனும் தனியரசை அன்றே உருவாக்கியிருக்க முடியும்.

ஆனால் அதை தனது பிரதேசவாத வெறியினாலும், தான் என்ற சுயநலமான பதவி ஆசையினாலும், தன்னைவிட வேறு எந்த தளபதிகளும் முன்னுக்கு வரக்கூடாதென்ற கருணாவின் நயவஞ்சக குணத்தினாலுமே அன்று நாம் யாழ் குடாநாட்டை கைப்பற்றமுடியாமல் போனதற்கான முதன்மை காரணம்.

ஏனென்றால், ஓயாத அலைகள் மூன்றின் இராணுவ நடவடிக்கை ஊடாக நாம் எதிரியின் மிகப்பெரும் தளமாகக் கருதப்பட்ட ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய பின்னர், ஆனையிறவு படைத்தளத்தைவிட பெரிதான படைத்தளம் எதுவும் யாழ் குடாநாட்டில் இருந்திருக்கவில்லை.

பலாலி படைத்தளம்கூட ஆனையிறவின் தயவினில்தான் இருந்ததே அன்றி,பலாலி படைத்தளம் ஒரு பெரிய இலக்காக அந்நேரம் புலிகளுக்கு இருந்திருக்கவில்லை.

மேலும் ஆனையிறவின் அபாரமான வீழ்ச்சியின் ஊடாக புலிகள் யாழ்நகர் நோக்கிய தாக்குதலை உடனடியாகவே மேற்கொள்ளக்கூடிய போதிய ஆளணியுடனும், போதிய அளவிலான ஆயுத பலத்துடனும் இருந்தபொழுதுதான் கருணாவின் பாரிய துரோகம் வன்னியில் அரங்கேறியிருந்தது.

கருணாவின் ஆரம்பகட்ட துரோகத்தின் வெளிப்பாடாகத்தான் தனது மாவட்ட போராளிகளுடன் தான் கிழக்கில் போய் சண்டை பிடிக்கப்போவதான கருத்தை அந்நேரம் வடபோரரங்கில் களமாடிக்கொண்டிருந்த எமது கிழக்குமாகாண போராளிகளிடையே கூறி போராளிகள் மத்தியில் கருணா குழப்பத்தை உருவாக்கியிருந்தான்.

இதன்காரணமாகத்தான் வடபோரரங்கில் ஆனையிறவை வீழ்த்தி யாழ்நகர் நோக்கிய தாக்குதலை தொடுப்பதற்கு தயார்நிலையிலிருந்த ஜெயந்தன்,அன்பரசி படையணிகளின் போராளிகளை தலைவர் அவர்கள் வடபோரரங்கைவிட்டு விலக்கிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.

அந்நேரம் கருணாவின் துரோகம் யாருடைய கண்களுக்கும் பெரிதாக தென்படவில்லை.இதற்கான காரணம் கிழக்கு போராளிகளின் அபாரமான போர்ப் பங்களிப்பே.

வன்னியில் இவர்கள் நீண்டகாலமாக நிலைகொண்டிருந்தது மட்டுமல்லாமல், தமது தாய், தந்தை, உற்றார் உறவினர்களைக்கூட சென்று பார்க்கமுடியாத சூழ்நிலையே இப்படையணிப் போராளிகளுக்கு அதிகம் ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாகத்தான் கருணாவின் நயவஞ்சகத்தை அந்நேரம் புலிகளால் பெரிதாக இனங்காண முடியவில்லை. அத்துடன் எமது தேசியத் தலைவர் அவர்களின் பார்வையில் கிழக்குமாகாண போராளிகளுக்கு ஒரு சிறப்பான இடம் இருந்ததற்குக்கூட அவர்களின் நீண்டகால வன்னி வாழ்க்கையே முதன்மை காரணம்.

இந்த அடிப்படையில்தான் எமது தேசியத் தலைவர் அவர்கள் கிழக்குமாகாண போராளிகளை தமது மாவட்டத்தில் போய் சண்டைபிடிக்க அனுமதி வழங்கியிருந்தார்.

மேலும் கருணாவின் கிழக்குநோக்கிய திடீர் நயவஞ்சக முடிவின் காரணமாகத்தான் யாழ் நகர் நோக்கிய புலிகளின் தொடர் தாக்குதல்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டதென்பதே நிதர்சனமான உண்மை.

ஏனென்றால், ஏற்கனவே பல யுத்த அனுபவங்களை பரீட்சையமாகக் கண்ட ஒரு பெரிய ஆளணிகொண்ட சுமார் ஆறாயிரம் போராளிகளை உள்ளடக்கிய படையணிகளை உடனடியாக அக் களமுனையை விட்டு அந்நேரம் நகர்த்தியதால்தான் அவர்கள் மூலமாக நடக்கவிருந்த அனைத்து தாக்குதல்களையும், யுத்த தந்திரங்களையும் புலிகள் ஒட்டுமொத்தமாக கைவிடவேண்டி ஏற்பட்டது.

மேலும் கிழக்குமாகாண போராளிகளின் வெற்றிடத்தை நிரப்பினால் மட்டுமே வடபோரரங்கில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தமுடியும் என தலைவர் உணர்ந்தார். இந்த நெருக்கடி நிலையை தவிர்க்க தலைவர் எடுத்த முடிவின் பிரகாரம் குறைந்தபட்சம் 2000ம் புதிய போராளிகளை புதிதாக இணைத்து,அவர்கள் ஊடாக மீண்டும் யாழ் நகர் நோக்கிய தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்றே தலைவர் கருதினார்.

அதன்பிரகாரம் சுமார் 5000ம் புதிய போராளிகளை இலக்குவைத்து வன்னியெங்கும் சூறாவளி பிரச்சாரத்தை புலிகள் மேற்கொள்வதற்காக தமது தாக்குதல் படையணிகளைக்கூட அந்நேரம் களத்தில் இறங்கியிருந்தார்கள்.

இதற்கான கால எல்லையாக மூன்று மாதங்களே வழங்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்தமாதிரி 2000ற்கும் மேற்பட்ட போராளிகள் இந்த மூன்றுமாத காலத்திற்குள் தாங்களாகவே முன்வந்து தம்மை போராட்டத்தில் இணைத்துக்கொண்டார்கள்.

மேலும் புதிதாக இணைக்கப்பட்ட போராளிகள் அனைவருக்குமான கடுமையான பயிற்சிகள் அனைத்தும் ஏற்கனவே வன்னி காடுகளுக்குள் இருந்த புலிகளின் பயிற்சி தளங்களில் கடுகதியாக வழங்கப்பட்டு பயிற்சிகளும் நிறைவுபெற்றன.

இந்த அணிகள் மூலமாகவே யாழ்நகர் நோக்கிய புலிகளின் அடுத்தகட்ட பாச்சல் ஆரம்பிக்க காத்திருந்தது.

இதற்கிடையே பல ஆய்வாளர்களும் புலிகள் யாழ் நகரை கைப்பற்றுவதற்கான ஏதுநிலை காணப்படுவதாக எதிர்வுகூறினார்கள். அப்படி எதிர்வுகூறிய மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான “மாமனிதர் தராக்கி சிவறாம்” அவர்களை BBCயின் செய்தியாளர் ஒருவர் இப்படி ஒரு கேள்வியை கேட்டார். அதாவது புலிகளால் யாழ் நகரை கைப்பற்ற முடியுமா என்று?

அதற்கு சிவறாம் அவர்கள் சொன்ன பதில்….

யாழ் குடாநாட்டிற்கான தொண்டையாக கருதப்படுவது ஆனையிறவுதான்,…இந்த ஆனையிறவு யாரின் கைகளில் இருக்கின்றதோ அவர்களுக்கே இந்த யாழ் குடாநாடும் சொந்தம்’ என்றார்.

அந்த அடிப்படையில் தற்பொழுது புலிகளே ஆனையிறவை தக்க வைத்திருப்பதனால் நிச்சயம் யாழ் குடாநாட்டை புலிகள் எந்தவேளையிலும் கைப்பற்றுவதற்கான ஏதுநிலையே காணப்படுவதாக கூறியிருந்தார்.

உண்மையில் மாமனிதர் சிவறாமின் கணிப்பீடானது அந்நேரம் 100% உண்மையானதாகவே இருந்திருந்தது.

மேலும் தலைவர் அவர்களின் ஆரம்ப திட்டத்தின் அடிப்படையில் யாழ் குடாநாட்டை முதலில் கைப்பற்றி, அங்கிருக்கும் இளைஞர்களை போராட்டத்தில் பெருந்தொகையாக இணைத்து பின்னர் கிழக்குமாகாணத்தையும், ஏனைய மாவட்டங்களையும் சுலபமாக கைப்பற்றலாம் என்பதையே தலைவர் அவர்களின் யாழ் குடாநாட்டை நோக்கிய படையெடுப்பின் மிக முக்கிய தந்திரோபாயமாக கருதப்பட்டது.

ஆனால் காக்கை வன்னியன்போன்ற கருணாவின் துரோகத்தினால்தான் அன்று யாழ் நகரை நோக்கிய தலைவரின் திட்டம் பின்னடிக்கப்பட்டது. இதன்காரணமாகவே தலைவரின் திட்டத்தில் காலதாமதம் ஏற்பட்டது. காலம் கடந்ததனால் சர்வதேசத்தின் கழுகுப் பார்வை ஈழத்தை நோக்கி விரியத்தொடங்கியது. சமநேரத்தில் “ஒசாமா பின்லேடனின்” பயங்கரவாதம் அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் அரங்கேறியதால் அமெரிக்காவையும், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் மிகவும் கடுமையாக இச்செயல் ஆத்திரமூட்டியது.

இதன் விளைவே எமது இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் உண்மை நிலையை இலங்கை சிங்கள பயங்கரவாத அரசு மறைப்பதற்கும்,பயங்கரவாதம் எனும் கொடிய முத்திரைக்குள் உலக நாடுகள் புலிகளையும் உள்ளடக்கி தமது கண்மூடித்தனமான ஆதரவினையும், அனுசரணையினையும் இலங்கைக்கு கொடுப்பதற்கும், எமது தேசிய இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை இந்த நாடுகள் தாமும் இணைந்து நசுக்குவதற்கும் ஏதுவாக அமைந்துவிட்டது.

ஆகவே எட்டப்பன் கருணாவின் நயவஞ்சக பிரதேசவாத சுனாமியின் காரணமாகத்தான் யாழ் குடாநாட்டை அந்நேரம் புலிகள் கைப்பற்றமுடியாமல் போனதற்கு உண்மை காரணம். அதுவே எமது இயக்கத்திற்கான அழிவுக்கு வழிகோலியது. உண்மையில் தலைவர் போட்ட திட்டத்தின் அடிப்படையில் அந்நேரம் துரோகி கருணாவின் சதிநாடகம் வடபோரரங்கில் அரங்கேறியிருக்காவிட்டால், அன்றே யாழ் நகரை கைப்பற்றி புலிகள் தமது ஆளணியை வளப்படுத்தி தமிழீழத்தின் அனைத்து பகுதிகளையும் எதிரியிடமிருந்து மீட்டு நிச்சயம் எமது தலைவர் காட்டிய தமிழீழம் எனும் இலக்கை இரண்டாயிரம் ஆண்டே நாம் அடைந்திருப்போம்.

– தொகுப்பு-ஊடகப்போராளி ந.மைக்கல்