யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்ப்பாளர் லெப்டினன்ட் கேணல் சூட் / அருணன்.

202

சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம்.

மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட்.

அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவு மக்கள் அடர்த்தியாக வாழும் குடியியல் நிலையையும் கொண்ட பிரதேசம் அது.

பகைவனுக்கு முழுமையாக ஒத்துழைத்தது அந்த நில அமைப்பு. அது அவனுக்குச் சாதகமான ஒரு சூழல்.

அதே சமயத்தில் – இனங்காண முடியாமல் சனங்களோடு இரண்டறக் கலந்திருந்த துரோகிகள் வேறு. இந்தியர்கள் போட்ட எலும்புகளை நக்கிக்கொண்டிருந்தது. இயலுமான அளவுக்கு அவர்களுக்குத் துணைபோன கும்பல்களும்இ ஆட்களும்.

இதற்குள் இன்னொரு விடயம் என்னவென்றால் – யாழ்ப்பாண மாநகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வலிகாமம் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதானது இராணுவ அரசியல்ரீதிகளில் மிகமிகப் பிரதானமான ஒன்றாக இந்திய – சிறீலங்காத் தளபதிகள் அப்போதும் இப்போதும் கருதுகிற அளவுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்த பகுதி இது.

அந்தவகையில் – மணலாற்றுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்ட மையமாகவும் வலிகாமம் பகுதி விளங்கியது.

இத்தகைய ஒரு புற நிலைமைக்குள் –

உயிர்வாழ்வே உத்தரவாதமற்ற இராணுவச் சூழ்நிலைக்குள் –

புலிகள் இயக்கத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இடையறாது போராடிய வரலாற்று நாயகர்களில் எஞ்சியிருந்தவன் சூட் மட்டும்தான்.

ராஜன், சுபாஸ், லோலோ, தும்பன், ரெட்ணா, கட்டைசிவா, கரிகாலன்…… என எல்லோரும் அவனைவிட்டுப் போய்விட – அவர்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு போராடியவன் இன்று எங்களை விட்டுப் போய்விட்டான்.

இப்போது…… அவனது நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள்……

அந்த இருண்ட இரண்டரை வருடங்கள்.
அது மிக நெருக்கடியான ஒரு காலகட்டம்.
வர்ணித்துச் சொல்ல முடியாத ஒரு பயங்கரச் சூழ்நிலை அப்போது நிலவியது.

பாசமிகு மக்கள் பாதுகாத்து இடமளிக்கத், தூங்கப்போகும் இரவுகள் தூக்கமற்றுப் போகும். ஓரோசையுமற்று அசையும் இரவில், தூரத்து நாயோசை இந்தியன் நகரும் சேதியைச் சொல்லும். திடீரென ஒரு பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்தச் சூழ்நிலையில் அது இயல்பானது. நாய் குரைப்புச் சத்தம் அகோரமாய் நெருங்கும். அது ஒரு அச்சமூட்டும் குறியீடு. விரிந்து நகர்ந்து வட்டமிட்டுச் சுருங்கி எதிரி முற்றுகையிடுகிறபோது, நாயோசை உச்சகட்டத்தில் இரையும். நெஞ்சு விறைத்துப் போகும். நள்ளிரவின் அமைதி சிதைய ஊர் துடித்து விழிக்கும். தங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மனங்கள் ‘பிள்ளைகளைக்’ காக்கச் சொல்லியும் இறைவனிடம் மன்றாடும். துப்பாக்கிகள் தயாராகும். தேர்வு நெம்பு, தானியங்கிக்கு மாற, சுட்டுவிரல் சுடுவில்லை வளைத்துக் கொள்ளும். இருளை ஊடறுத்து விழிகள் முன்னேறும். எதிரி எதிர்ப்படும் கணத்தில் சன்னங்கள் பாய முற்றுகை உடைபடும். தப்பித்து மீண்டு, சொல்லப்பட்ட இடமொன்றில் சந்திக்கின்ற போது தோழர்களில் ஒருவனோ இருவரோ வந்திருக்க மாட்டார்கள்…….

ஆள் விட்டுப் பார்த்து ஆமி இல்லை என்ற பின் மெல்ல நடந்து வீதி கடக்கும் போது, சடுதியாய் எதிர்ப்படும் சிற்றூர்திக்குள்ளிருந்து துப்பாக்கிகள் உறுமும், ஆளையோ, அல்லது ஆடைகளையோகூட சன்னங்கள் துளையிடும். உரப்பைக்குள் இருக்கும் எங்கள் துப்பாக்கியின் சூடு தணியும்போது, நாலாவது வேலி கடந்து நாங்கள் ஓடிக்கொண்டிருப்பம். எம்மை முந்திக்கொண்டு எதிரியின் சன்னங்கள் சீறும்.

‘முற்றுகையிடுகிறான் பகைவன்’ என நினைத்து அடித்து உடைத்துக்கொண்டோ, அல்லது வலு அவதானமாக நகர்ந்தோ அவனைக் கடந்து மறுபக்கம் போய் ‘தப்பி வெளியேறி விட்டோம்’ என மகிழும் வேளை இப்போதுதான் முற்றுகைக்குள்ளே வந்து சிக்கிப்போயுள்ளோம் என்பது தெரியவரும். நடந்த தவறு விளங்கும் போது தலை விறைக்கும்.

‘பிரச்சினை இல்லாதவை’ எனக் கருதி இரவில் படுக்கப்போகும் இடங்கள், அதிகாலையில் எதேச்சையாகச் சுற்றிவளைக்கப்படுகின்ற துரதிஸ்டம் நிகழும். சந்தர்ப்பவசமாகச் சிக்கிக் கொண்டு விடுகிற அந்த விபரிக்க முடியாத சூழ்நிலைகளில் ‘வாழ்க்கை வெறுக்கும்’.

“எல் ரீ ரீ” எனக் கத்திக்கொண்டு இந்தியன் எட்டிப் பிடிக்கும் போது, ‘கதை முடிந்தது’ என்று குப்பியைத் தொடும் வேளையிலும், இறுதி நேர முயற்சியாக உதறிப் பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறபோது நெஞ்சுக்குள் தண்ணிவரும்.

இப்படியாக ஏராளமான மயிரிழைகள்.

சன்னம் துளைத்தவர்களையும், ‘சயனைட்’ அடித்தவர்களையும் தவறவிட்டு தப்பித்து வந்தபோதெல்லாம், அந்த ஆருயிர் நண்பன் ஓரமாய் இருந்து கண்ணீர் சொரிவான்.

ஆனால், ஒருபோதும் அந்தப் புலிவீரனின் உள்ளம் தளர்ந்து போனதில்லை.

நெருக்கடிகள் கூடிக்கூடி அழுத்திய போதெல்லாம் இறுகிக்கொண்டே போனது அவனுடைய மனவுறுதி.

கற்பாறையைப் பிளந்து முளையிடும் துளிராகி – இந்தியர்களின் கூடாரங்களுக்கு நடுவில் அவன் நிமிர்ந்தான்.

எதிரி வளைத்து நின்ற மண்ணில், கைவிடாத துப்பாக்கியோடு கடைசி வரைக்கும் வலம்வந்து போராட்டத்தை உயிர்த்துடிப்போடு உயர்த்திச் சென்ற வேங்கை அவன்.

மரணம் அவனது உயிரை உரசிச் சென்ற போதெல்லாம் தப்பித்து மீண்டுவந்து ‘என்ன நடந்ததோ……?’ என ஏங்கி நின்ற எங்களின் முன் கண்குளிரக் காட்சியளித்து ஆச்சரியப்படுத்திய வீரன்.

கட்டைக் காற்சட்டையும் சேட்டுமாக அந்தச் ‘சின்னப் பொடியன்’ தோற்றத்தில், இந்தியர்கள் பலதரம் ஏமாந்திருக்கிறார்கள்.

மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து இந்தியர்கள் ஒத்தியெடுத்த வேளைகளிலெல்லாம், அவன் நேசித்த மக்களால் பொத்திவைத்துப் பாதுகாக்கப்பட்ட குழந்தை.

எப்படி அவனால் நின்றுபிடிக்க முடிந்தது……?

அது அதிசயம் தான்!

ஆனால், அவனைப் பாதுகாத்தது வெறும் அதிர்ஸ்டம் மட்டுமல்ல.

விவேகம், புத்திக்கூர்மை, மக்கள் செல்வாக்கு அவனுடைய சின்ன உருவம் இவற்றுக்கு மேலாக அவனுடைய உறுதியும்இ துணிச்சலும்.

இவைதான் அவனை உயிர்வாழச் செய்வித்தன.

அடுத்த காலை நிச்சயமற்றிருந்த அந்த நாட்களில் அவனோடுதான் நம்பிக்கையோடு தூங்கப் போகலாம். சாவு எங்களைத் தட்டி எழுப்பிய எத்தனையோ தடவைகளில் தப்பி வந்தது அவனால்தான் எனலாம்.

அப்போது யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த பொட்டம்மானும் தோழர்களும் அவனது ‘ஒழுங்கமைப்பு’ களால் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘மக்கள் நேசம்’ அவனது உயரிய குணாம்சங்களில் ஒன்று. அவன் அவர்களில் வைத்த அன்பு அவர்களை அவனில் பாசம் வைக்க வைத்தது.

அந்த நெருக்கம் அலாதியானது; அதுதான் அவனுக்கு கவசமாகவும் இருந்தது.

அந்த நேசத்தின் தொடக்கம் – அவன் போராளியான ஆரம்பம். அது 1984 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி. தனது பதினேழாவது வயதில் இயக்கத்தில் சேர்ந்தவன்இ அப்போது முதல் அந்த மக்களுடனேயே வாழ்ந்தான். அந்த மக்களுக்குக் காவலாய் இருந்தான்.

அவன் மக்களை அணுகிய விதமே வித்தியசமானது அதனால்தான் அவர்கள் அவனை நெஞ்சிலிறுத்தி வைத்திருந்தார்கள்.

‘மற்ற இயக்கங்களின் ஊர்கள்’ என்று ஒதுக்கிய கிராமங்களில்தான் தூக்கமும், வேலையும். ‘மற்ற இயக்கங்களின் ஆட்கள்’ எனப்பட்டவர்கள் வீடுகளில்தான் குளிப்பும், சாப்பாடும். எல்லா ஊரையும் எம்முடையதாக்கி, எல்லாப் பேரையும் எம்மவர்களாக்கினான்.

31.05.1967 அன்று தனலட்சுமி அம்மாவுக்கும், நவரத்தினம் ஐயாவுக்கும் பிறந்தவனுக்கு விக்னராஜன் என்று பெயரிட்டார்கள்.

தனது 16 ஆவது வயதிலேயே ‘புலிப்படைப் பொடியளுக்குப் பின்னால்’ திரியத் துவங்கிவிட்டான்.

பாயில் தலையணை அடுக்கி ஆள்மாதிரிப் போர்த்துவிட்டு இரவில் காணாமல் போனவன்…… ஸ்ரான்லி கொலிச்சில் தம்பியையும், தங்கையையும் இறக்கிவிட்டு, உள்ளே வராமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு மற்றப்பக்கமாப் போனவன்…… போய்ப்போய் வந்தவன்……

ஒருநாள் ஒரேயடியாகப் போய்விட்டான்.

சூட் ஒரு அற்புதமான போராளி.

தனது அழகான ஆளுமையால் தோழர்களைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்த நண்பன்.

கண்டிப்போடும், பரிவோடும் அரவணைத்து வருடிய இனிய காற்று, அவர்களில் அவன் பொழிந்த பாசமே தனி.

மனங்குழம்பிப்போகின்ற எந்தப் போராளியையும் ஆதரவோடு கதைத்துத் தெளிவூட்டுகிற போது, அவனொரு பேராசான்.

முழுமையாக என்று சொல்லாவிட்டாலும் – இயக்கத்தின் நீண்ட வரலாற்று ஓட்டத்தோடு பெருமளவு கலந்து, அமைதியாக, ஆரவாரமில்லாமல் – தனது செயலால் வளர்ந்து – மெல்ல மெல்ல உயர்ந்தவன்.

சூட் ஒரு சண்டைக்காரன் அல்ல, அதற்காக சண்டை தெரியாதவன் என்றும் சொல்லிவிட முடியாது. அதாவது அவன் தேர்ச்சிபெற்ற யுத்த வீரன் அல்ல.

அப்படியானால் அவன் முன்னுக்கு வந்தது?

அது சண்டைகளால் அல்ல;

சண்டைக்கு வெளியில் நின்று அவன் போராட்டத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளால்.
தான் பணியாற்றிய துறைகளிலெல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் பேர் சொல்லும் முத்திரைகளைப் பதித்து வளர்ந்த போராளி.

சண்டைக்கு வெளியில் நின்ற எல்லாப் போராளிகளையும் போல அவனும் போர்க் களத்துக்குப் போகத்தான் துடித்தான். ஆனால், அவனது தேவை அவனை அதிலிருந்து தள்ளியே வைத்திருந்தது.

ஒரு விடுதலை வீரனின் போராட்டப் பணியானது இராணுவ அளவுகோல் மட்டும் அளவிடப்பட முடியாதது.

சண்டையிடுவதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பிரதான அம்சம். ஆனால், அது மட்டுமே போராட்டம் ஆகாது.

சண்டை என்பது, போராட்டம் நகர்த்திச் செல்லப்படும் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று.

சண்டைகளில் நிற்காத போதும் உண்மையான அர்ப்பண உணர்வோடு வாழ்ந்து – போராட்டத்தின் ஏனைய பரிமாணங்களோடு அபார திறமையாகக் காரியங்களைச் சாதித்த எத்தனையோ போராளிகளுள் அவனும் ஒருவன்.

இந்தியப்படை வெளியேற்றப்பட்டுவிட்டது.

இப்போது அவன் புலனாய்வுத்துறையில். பொட்டம்மானின் உற்ற துணைவர்களாக நின்று, இயக்கத்தையும் – போராட்டத்தையும் – தேசத்தையும் பாதுகாத்த முதன்மையான போராளிகளுள் ஒருவனாக சூட் அல்லும் பகலும் ஓய்வற்றுச் சுழன்றான்.

துவக்கத்தில் யாழ். மாவட்ட புலனாய்வுத் துறைப் பொறுப்பாளனாகப் பணி.

அவன் பொறுப்பை ஏற்றபோது அங்கு இருந்த சூழ்நிலை வித்தியாசமானது. அதனால் மிக்க அவதானமாகவும், மிக்க நிதானமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு அடிகளை வைத்தான்.

நேற்றுவரை எதிரியினால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம் இன்று திடீரென – ஒரேநாளில் எங்கள் கைகளுக்கு வந்துவிட்ட காலகட்டம் அது. இந்தியாவின் எச்சசொச்சங்கள் எங்கும் பரவியிருந்த நேரம். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று அன்றொரு நாள் வள்ளுவன் சொல்லியிருந்ததைப் போன்ற நிலைமை.

எவரிலுமே சந்தேகம் எழக்கூடிய சூழல்.

மிகக் கவனமாக இனங்கண்டு பிரித்தறிய வேண்டும். எங்கள் புலனாய்வு நடவடிக்கைகளில் தவறு நேர்ந்து, அது மக்களைப் பாதித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புலனாய்வுத் தவறுகளினால் மக்கள் எவ்விதத்திலும் துன்பப்பட்டுவிடக்கூடாது, அத்தகைய அவதானத்துடன் செயற்படும்போது நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் நிதானமானது, துரோகிகளுக்கு வாய்ப்பளித்து அவர்கள் சுலபமாகச் செயற்பட இடமளிக்கவும்கூடாது.

இப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் பொறுப்பெடுத்து, மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனக்குரிய பணியை சூட் செய்து முடித்தான்.

நாட்கள் உருண்டன.

புலனாய்வுத்துறையின் முக்கியமான ஒரு போராளியாக, அதன் தாக்குதற் படைப்பிரிவுக்குத் தளபதியாக, இயக்கத்தின் ‘கரும்புலிகள்’ அணி ஒன்றுக்குப் பொறுப்பாளனாக சூட் படிப்படியாக உச்சத்துக்கு வந்தான்.

இயக்கத் தலைமையினது அதீத நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானான்.

முக்கியத்துவம் மிக்க ஒரு கரும்புலித் தாக்குதல்.

இலக்குப் ‘பெரியது’

எனவே ஒழுங்கமைப்பும் பெரிதாக இருந்தது.

திட்டம் தீட்டப்பட்டபோது பொட்டம்மான் சூட்டைத்தான் தெரிந்தெடுத்தார்.

தியாகமும், துணிச்சலும், இலட்சிய வேட்கையும் போக – மதிநுட்பமும், விவேகமும், செயற்றிறனும் அதிகமாகத் தேவை. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவன் சூட்.

ஆனால் தலைவரோ ஆளை மாற்றச் சொன்னார்.

இந்தப் பணியை விடவும் அதிகமாகப் போராட்டத்துக்கு அவன் பயன்படுவான் என்று அவருக்குத் தெரிந்தது; உண்மைதான் –

ஆனாலும், தாக்குதலின் முக்கியத்துவத்தையும், அதன் பிசகாத – துல்லியமான – வெற்றியையும் கருத்திற்கொண்டு பொட்டம்மான் சூட்டைத்தான் வலியுறுத்தினார்.

இருந்தபோதும் – தலைவரது கருத்திற்கிணங்க கடைசியில் முடிவு மாற்றப்பட்டது.

அதன்பின்னர் –

எங்களது இன்னுமொரு கரும்புலிவீரன் அந்த ‘இலக்கை’ மிக வெற்றிகரமாகத் தாக்கி அழித்து வரலாற்றைப் படைத்தான்.

பூநகரிச் சமருக்குப் புறப்படும்போது சூட் தேர்ச்சிபெற்ற ஒரு சண்டைத் தளபதியாக விளங்கினான்.

ஆனால், அவன் இராணுவ ரீதியில் மேலோங்கியதானது நீண்டகால அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சிகண்டு அல்ல.

நன்றாக இனங்காணப்பட்டு, திடீரென அவனுக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது.

குறுகியகால இராணுவப் பணியையே அவன் ஆற்றினான்.

ஆனால், அந்தச் சொற்ப காலத்துக்குள்ளேயே, பெருந் தளபதிகளினது மதிப்பையும், பாராட்டையும் அவன் பெற்றுவிட்டிருந்தான். அது ஒரு இலேசான காரியமல்ல.

அவனது குறுகியகால இராணுவ வளர்ச்சி அசாத்தியமான ஒரு சாதனை.

பூநகரிப் பெரும் போர்க்களம்.

பல்வேறு படையணிகள், பல்வேறு சண்டைமுனைகள், பல்வேறு வழிமுறைகள். பரந்த ஒரு பிரதேசத்தில் எழுந்து நின்ற எதிரியின் பெரும் படைத்தளம் ஒன்றின்மீது – அதன் அரண்களிலும் சமநேரத்தில் தாக்கி – புலிகள் நிகழ்த்திய மிகப்பெரிய படையெடுப்பு.

ஒரு முனையில் சூட்டின் படையணி.

எதிரியின் அரண்தொகுதி ஒன்று, சூட்டினது படையணிக்குரிய இலக்கு. அதன் அருகிலிருந்த இன்னொரு அரண்தொகுதி லெப். கேணல் குணாவின் படையணிக்குரிய இலக்கு.

இரண்டு அணிகளும் தமது இலக்குகளை வீழ்த்திய பின் ஒன்றிணைந்து பிரதான தாக்குதலணி ஒன்றுக்குத் தோள் கொடுக்கவேண்டுமென்பது திட்டம்.

ஆனால் விசயம் பிழைத்துவிட்டது. பூநகரி வெற்றியின் முதல் வித்தாக, சண்டையின் ஆரம்ப நாட்களிலேயே குணா வீழ்ந்து போக – அந்தப் பகுதியில் சண்டை திசை மாறிவிட்டது.

தமது இலக்கைக் கைப்பற்றிய சூட்டினது அணி முன்னேறிய போது, குணாவினது பகுதி பிசகிவிட்டிருந்தது. எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை; எதிரி அங்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தான்.

துணை சேரவேண்டிய அணிக்குத் துணை கொடுக்க வேண்டிய நிலை.

மூர்க்கத்தனமான தாக்குதல் குணாவுக்குரிய பகுதிமீது ஆரம்பித்தது.

இறுக்கமான சண்டை.

ஆர்.பி.ஜி. குண்டின் சிதறல்பட்டு அவனது எம். 16 உடைந்து போக, அருகில் நின்ற தோழனிடம் ரி. 56 ஐ வாங்கிக்கொண்டு சூட் முன்னேறினான்.

கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த எதிரியின் பலமான அரணொன்றை சூட் ஆக்ரோசமாக நெருங்கினான்…… தனி ஆளாகப் பாய்ந்தான்.

எதிரிக்கு அருகில் அவன் முன்னேறினான்…… மிக அருகில்…… போய்விட்டான்…… போனவன் திரும்பி வரவில்லை.

அன்பு, குணா, நவநீதன், பாமா, றூபன், கணேஸ், கோபி, அவன்…… என்று 458 தோழர்கள்…… வெற்றியைத் தந்தவிட்டு வராமலே போய்விட்டார்கள்!

தமிழீழம் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறது; அந்த மைந்தர்களின் நினைவோடு; அவர்கள் பெற்றுத் தந்த வெற்றியின் பெருமிதத்தோடு.

இப்போது…… நம்பிக்கையோடு காத்திருக்கிறது……

அடுத்த வெற்றிக்காக!

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (வைகாசி 1994).