கிரிக்கெட் உலகக்கோப்பை : இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது இந்தியா

29-10-2023

தற்போது நடந்து வரும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை இந்தியா இன்று(29/10/2023) எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி லக்னௌவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஐந்து போட்டிகளில் நான்கில் இங்கிலாந்து தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது.

இருப்பினும், உலகக்கோப்பையில் இந்திய அணியின் இதுவரையிலான பயணத்துக்கும் 2011, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டத்துக்கும் இடையே ஒரு பொதுவான விஷயம் உள்ளது.

இந்தியா லீக் போட்டிகளில் வலுவான ஆட்டம் ஆடி, நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி 2011இல் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றது. ஆனால் 2015 மற்றும் 2019 போட்டிகளில், நாக்-அவுட் சுற்றின் முதல் போட்டியில், அதாவது அரையிறுதியில் தோல்வியடைந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களில், இந்திய கிரிக்கெட் அணியின் டிரெசிங் ரூமில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின்போது, இந்திய அணியின் டிரெசிங் ரூமில் ஒரு வழக்கம் தொடங்கப்பட்டது. அது தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

போட்டிக்குப் பிறகு, வீரர்களின் ஃபீல்டிங் குறித்து கருத்து தெரிவிக்கவும், அவர்களுடன் ஆட்டம் குறித்து உரையாடவும், பின்னர் அவர்களுக்கு பதக்கங்கள் வழங்கவும் புதிய வழக்கம் தொடங்கப்பட்டது.

இதற்காக, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த டி திலீப்பை தேர்வு செய்துள்ளார்.

திலீப் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர். அவர் அனைத்து வீரர்களையும் டிரெசிங் ரூமில் ஒன்றாக நிறுத்தி, அவர்களின் ஆட்டம் எவ்வாறு இருந்தது என அலசி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டவும் செய்வார்.