இஸ்ரேல் கமாஸ் போர்- உண்மை நிலையை வெளியிடுவதில் ஏன் இந்த பாகுபாடு

31-10-2023

0

24

காஸாவில் மீண்டும் ஒரு போர் தொடங்கி, ஏற்கனவே இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இஸ்ரேல் படைகள் இடைவிடாது மேற்கொண்டுவரும் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் காரணமாக 7000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இறந்திருக்கிறார்கள். அதே நேரம், தென் இஸ்ரேலில் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீன எதிர்ப்புக்குழு மேற்கொண்ட தாக்குதல்களில் 1400 இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 

நடந்துகொண்டிருக்கும் போர் தொடர்பாக மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டுவருகின்ற செய்திகளை அவதானிக்கும் போது, இருதரப்பிலும் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் விடயம் மாறுபாடான விதங்களில் அணுகப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

 

ஹமாசினால் இஸ்ரேல் மக்கள் குரூரமாகக் கொல்லப்பட்டதில் எல்லா அறநெறிக்கோட்பாடுகளையும் ஹமாஸ் போராளிகள் மீறியதாகச் சுட்டிக்காட்டும் மேற்குலக ஊடகங்கள், சமகாலத்தில், காஸாப் பிரதேசத்தில் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் ஈனஇரக்கமற்ற குண்டுத்தாக்குதல்களின் கோரத்தன்மையையும் அங்கே அறநெறிக்கோட்பாடுகள் மீறப்படுவதையும் சுட்டிக்காட்ட மறுக்கின்றன.

 

மேற்குலகில் உள்ள அரசுகள்  நிறுவனங்கள், மக்கள், ஊடகங்கள் அத்தனையுமே காலனீயம், வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, போன்ற கண்ணாடிகள் ஊடாகவே உலகை உற்றுநோக்குகின்றன என்று த நியூ ஹியுமானிற்றேறியன் (The New Humanitarian) என்ற இதழின் ஆசிரிய தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரேன் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு யுத்தத்தைப் போற்றிப்புகழ்கின்ற மேற்குலகம், ஆக்கிரமிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு போன்ற தீமைகளுக்கு எதிராகப் போராடுகின்ற பாஸஸ்தீனர்களின் எதிர்ப்புப் போராட்டங்களில் உள்ள நியாயத்தை ஏற்க மறுக்கின்றன. ஏன்?