உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்தியா
29-10-2023
0
21
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் சேஸிங் மட்டுமே செய்துள்ளது. தற்போது இந்தப் போட்டியில் முதல் முறையாக பேட்டிங் செய்கிறது.
இன்றைய போட்டியின் முதல் இரண்டு ஓவர்களை இங்கிலாந்து வீசிய நிலையில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. போட்டியின் 4வது ஓவரின் கடைசிப் பந்தில் சுப்மன் கில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 13 பந்தில் 9 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வில்லி பந்தில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
தொடர்ந்து 12வது ஓவரில் 4 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார். இந்திய அணி 30 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை 58 பந்தில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார்.
ரோகித் சர்மா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டினை 101 பந்தில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா 8 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 41.2 ஓவர்களில் முகமது ஷமி ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டினை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. பின்னர் 46.2 ஓவர்களில் சூர்ய குமார் யாதவ் 49 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. எனவே இங்கிலாந்து அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் இரு அணிகளும் 8 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.